அரசியல்
அலசல்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்: துணிவு பிறந்த கதை!

அஜித்
பிரீமியம் ஸ்டோரி
News
அஜித்

‘வலிமை’ படத்துக்கான விமர்சனங்கள் மிகக் கொடூரமாக அமைய, அஜித்தைவைத்து இயக்கும் படத்தைத் தள்ளிப்போட முடிவெடுத்தார் வினோத்

அஜித்தின் 61-வது படத்துக்கு ஒருவழியாக டைட்டில் வைக்கப்பட்டுவிட்டது. ‘வலிமை’ படப்பிடிப்பின்போதே, ‘அடுத்த படத்துக்கான கதையை ரெடி செய்யுங்கள்’ என இயக்குநர் ஹெச்.வினோத்திடம் சொன்னார் அஜித். கதை குறித்த எந்த ஐடியாவும் இல்லாத நிலையிலேயே அஜித்திடம் ‘துணிவு’ எனப் படத்தின் டைட்டிலைச் சொன்னாராம் வினோத். அஜித்தும் அந்தத் தலைப்பை உடனடியாக ஓகே செய்திருக்கிறார்.

‘துணிவு’ டைட்டில் டிசைன் செய்யும் பொறுப்பும் ஒரு நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருந்தது. டைட்டிலும் வேறு நிறுவனத்தின் பெயரில் பதிவுசெய்யப்பட்டுவிட்டது. இந்த நிலையில் சூர்யா நடிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான படத்துக்கு ‘எதற்கும் துணிந்தவன்’ எனத் தலைப்பு வைக்கப்பட, ‘துணிவு தலைப்புக்கு மாற்றாக வேறு தலைப்பு யோசியுங்கள்’ எனச் சொல்லியிருக்கிறார் அஜித். காரணம், அஜித்துக்கும் சூர்யாவுக்கும் பெரிதாக ஆகாதாம்.

மிஸ்டர் மியாவ்: துணிவு பிறந்த கதை!

‘வலிமை’ படத்துக்கான விமர்சனங்கள் மிகக் கொடூரமாக அமைய, அஜித்தைவைத்து இயக்கும் படத்தைத் தள்ளிப்போட முடிவெடுத்தார் வினோத். ஆனால், “உங்களின் தலைப்பை முதலில் நீங்கள் பின்பற்றுங்கள்… துணிவுடன் வாருங்கள்” எனச் சொல்லி அடுத்தும் வினோத்தையே படத்தை இயக்கும் படி அழைத்தார் அஜித். வினோத்தை உற்சாகப்படுத்தும்விதமாக ‘துணிவு’ டைட்டிலை மீண்டும் ஓகே செய்திருக்கிறார் அஜித்.

இதற்கிடையில், சூர்யா நடிப்பில் வெளியான ‘எதற்கும் துணிந்தவன்’ படம் சரிவரப் போகாததால், ‘துணிவு’ டைட்டிலைத் தவிர்க்கும்படி அஜித்துக்கு நெருக்கமானவர்கள் ஆலோசனை சொல்லியிருக்கிறார்கள். வினோத்தும் அந்தக் கருத்தில் உடன்பட, ‘துணிவு’க்கு மாற்றாக, வேறு தலைப்புகள் பரிசீலிக்கப்பட்டிருக்கின்றன.

மிஸ்டர் மியாவ்: துணிவு பிறந்த கதை!

அஜித்துக்கு மிக விருப்பமான `V’ எழுத்தில் தொடங்கும் வகையில், குணாதிசயத்தை வெளிப்படுத்தும் தலைப்புகள் ஆலோசிக்கப்பட்டிருக்கின்றன. ‘வியூகம்’ தொடங்கி ‘வைராக்கியம்’ வரையிலான பல தலைப்புகள் அஜித் பார்வைக்கு அனுப்பப்பட்டனவாம். ஆனால், அவை யாவும் அஜித் மனதை ஈர்க்கவில்லை. எந்தத் தலைப்பும் பிடிக்காத நிலையில்தான் மீண்டும் ‘துணிவு’ பக்கம் திரும்பியிருக்கிறார் அஜித்.

ஜாதகரீதியான கலந்தாய்வுகளும் நடத்தப்பட்டு ‘துணிவு’ ஒருவழியாக, தலைப்பாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. பாங்காக்கில் இரண்டாம் கட்ட ஷூட்டிங் தொடங்கிய நாளில் ‘துணிவு’ டைட்டிலும், ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியிடப்பட, அஜித் ரசிகர்களுக்கு ரொம்பவே உற்சாகம். சாதாரண அடித்தட்டு மக்களை வங்கிகள் எப்படிச் சுரண்டுகின்றன என்கிற சமூகத் தாக்கம் மிகுந்த கதைக்குத் துணிவு மிகச் சரியான தலைப்பு என்கிறார்கள் படக்குழுவில் உள்ளவர்கள்.

எல்லாம் சரி, ‘துணிவு’ டைட்டிலைக் கொஞ்சம் துணிவாகவே வெச்சுருந்துருக்கலாம்!