Published:Updated:

மிஸ்டர் மியாவ்: விக்ரம்... விற்கிறோம்!

கமல், பகத் பாசில்
பிரீமியம் ஸ்டோரி
கமல், பகத் பாசில்

நெகட்டிவ் விமர்சனங்களை யார் பதிவிட்டாலும், அவர்களைக் குறிவைத்துக் குதற ஆன்லைன் ஆட்கள் களமிறக்கப்பட்டார்கள்.

மிஸ்டர் மியாவ்: விக்ரம்... விற்கிறோம்!

நெகட்டிவ் விமர்சனங்களை யார் பதிவிட்டாலும், அவர்களைக் குறிவைத்துக் குதற ஆன்லைன் ஆட்கள் களமிறக்கப்பட்டார்கள்.

Published:Updated:
கமல், பகத் பாசில்
பிரீமியம் ஸ்டோரி
கமல், பகத் பாசில்

அஜித், விஜய் படங்களின் வசூலைத் தாண்டி அதகளம் செய்துகொண்டிருக்கிறது கமலின் ‘விக்ரம்.’ பார்த்திபனின் ‘இரவின் நிழல்’, ஹரியின் ‘யானை’ உள்ளிட்ட படங்கள் ரிலீஸ் தேதியை மாற்றிப் பின்னோக்கி ஓடிவிட்டன. அந்த அளவுக்குக் கல்லாகட்டுகிறதாம் ‘விக்ரம்.’ ‘அந்த அளவுக்குப் படம் மிகச் சிறப்பாக இருக்கிறதா?’ எனக் கேட்டால், கலவையான விமர்சனங்கள்தான் வருகின்றன. பிறகு எப்படி இந்த இமாலய வெற்றி... “மகேந்திரன் - டிஸ்னி கூட்டணியின் வியூக விளையாட்டுதான் காரணம்” எனக் கைகாட்டுகிறார்கள் விவரப்புள்ளிகள்.

‘விக்ரம்’ படம் கிட்டத்தட்ட முடிவடையும் நிலை வரை, தயாரிப்புத் தரப்புக்குத் திருப்தி இல்லையாம். விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன் உள்ளிட்ட நடிகர்கள் இருந்தாலும், பரவலான ரசிகர்களைக்கொண்ட வேறொரு ‘சக்தி’ தேவை என்றிருக்கிறார் மகேந்திரன். பூசணி உடைக்கப்போகிற நிலையில், அவசரகதியில் சூர்யாவைக் களமிறக்கியிருக்கிறார்கள். முதலில் இதற்கு உடன்பட மறுத்த சூர்யா, கமல் பேசிய பிறகு வேறு வழியின்றி கனிந்திருக்கிறார். படத்துக்குப் பெரிய அளவில் ஹைப் ஏற்றவே, சூர்யா விஷயம் கடைசி நேரத்தில் கசியவிடப்பட்டதாம்.

மிஸ்டர் மியாவ்: விக்ரம்... விற்கிறோம்!

‘லோகேஷுக்கு கார் வழங்கினார் கமல்’ என முதல் நாள், ‘சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்ச்’ என மறுநாள் எனப் படம் ரிலீஸான நாள் தொடங்கி இரண்டு வாரங்கள் வரை அனுதினமும் செய்திகள் வந்துகொண்டேயிருக்கும் வண்ணம் பரப்புரை பாணி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. வி.ஐ.பி-க்களின் பாராட்டுகள் தனிரூட்டில் கொடிகட்டிப் பறக்க, ரஜினி உள்ளிட்டவர்களின் கருத்துகள் படத்துக்கான பெரிய புரொமோஷனாக வடிவமைக்கப்பட்டனவாம்.

நெகட்டிவ் விமர்சனங்களை யார் பதிவிட்டாலும், அவர்களைக் குறிவைத்துக் குதற ஆன்லைன் ஆட்கள் களமிறக்கப்பட்டார்கள். ‘அந்த அளவுக்குப் படம் திருப்தி இல்லை’ எனச் சொன்ன சினிமா விமர்சகர் பிஸ்மியை ட்விட்டரில் ஒரு கும்பலே வைத்து செய்தது. படத்துக்கு ஆதரவான கருத்துகளைப் பரப்ப ஒரு கூட்டம், நெகட்டிவ் விமர்சனங்கள் வராதபடி தடுக்கவும், வெளுக்கவும் ஒரு கூட்டம் என ஆன்லைனிலேயே படு ஆட்டம் ஆடியிருக்கிறார்கள் மகேந்திரனும் டிஸ்னியும்!

மிஸ்டர் மியாவ்: விக்ரம்... விற்கிறோம்!

படத்தின் ரிலீஸுக்கு முன்னால் புரொமோஷனுக்காக கமல் அலையாத இடம் இல்லை. ரிலீஸுக்குப் பிறகும் கமல் காலில் கட்டப்பட்டிருந்த சக்கரத்தை மகேந்திரன் கழற்றவே இல்லை. சிரஞ்சீவி தொடங்கி டி.ராஜேந்தர் வரை பலதரப்பட்ட ஆட்களைச் சந்தித்துக்கொண்டேயிருந்தார் கமல். ‘எங்கும் கமல்… எதிலும் `விக்ரம்’ குறித்த செய்தி…’ எனத் திட்டமிட்டுத் தட்டித் தூக்கினார்கள். முதல்வர் ஸ்டாலினைச் சந்திக்கவைத்ததும் அதே புரொமோஷன் உத்திதானாம்.

மிஸ்டர் மியாவ்: விக்ரம்... விற்கிறோம்!

‘ `விக்ரம்’ படத்தைப் பாராட்டி சிரஞ்சீவி கமலுக்கு விருந்துவைத்தார்’ எனச் செய்திகள் வந்தன. உண்மையில், இயக்குநர் ஜெயம் ராஜாவின் மூலமாக சிரஞ்சீவியை கமல்தான் அணுகியிருக்கிறார். கமலின் டார்கெட் சிரஞ்சீவியோடு நடிக்கும் சல்மான் கான். இருவரையும் ஒரே நேரத்தில் சந்தித்து, அதைப் படத்துக்கான பல்ஸ் ஏற்றும் செய்திகளாக்கிவிடத் திட்டம். இதை நாசுக்காகப் புரிந்துகொண்ட சிரஞ்சீவி (அவரும் கமலைப்போல் கையைச் சுட்டுக்கொண்ட அரசியல்வாதிதானே…) சல்மான் கானிடம் பேசி, கமல் உள்ளிட்டவர்களுக்கு விருந்துவைத்தார். தேடிப்போய் பார்த்த விஷயம், அழைத்துப் பாராட்டி விருந்துவைத்த விஷயமாகப் பரபரப்பானது.

மிஸ்டர் மியாவ்: விக்ரம்... விற்கிறோம்!

கமல் படம் நீண்டகாலத்துக்குப் பிறகு இவ்வளவு இமாலய வெற்றியை ஈட்டியிருப்பதில் எல்லோருக்கும் மகிழ்ச்சிதான். குறிப்பாகத் தரமான படங்களைத் தயாரிக்கும் அவருடைய ராஜ்கமல் நிறுவனம் நல்ல லாபத்தோடு நிமிர்ந்து நிற்பதில் தாங்களே வென்றதுபோல் தமிழர்கள் நெகிழ்வதும் உண்மைதான். ஆனால், “அரசியல் கட்சிகளுக்கு அட்வைஸர்கள் வருவதைத் தமிழர்கள் சாதாரணமாகக் கருதக் கூடாது. இது அரசியலுக்கான கேடு. மக்களின் சிந்தனையைக் கபளீகரம் செய்கிற காரியம்” என்றார் முன்னாள் தலைமைச் செயலாளர் சண்முகம். அரசியலுக்கு பிரஷாந்த் கிஷோர், சுனிலைப் போல், சினிமாவுக்குள் முளைத்திருக்கிறார்கள் மகேந்திரனும் டிஸ்னியும். மக்களின் சிந்தனையை திசைமாற்றுகிற எந்தக் காரியமும் மனசாட்சி அற்றதுதானே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism