Published:Updated:

`திருமண மேடைல எல்லாரும் அப்படி சொல்லவும் செல்வா கடுப்பாயிட்டார்!' - ரோஜா - செல்வமணி ஷேரிங்ஸ்

ரோஜா - செல்வமணி

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ஜோடியாகப் பேட்டி கொடுக்கும் ரோஜா - செல்வமணி தம்பதி, 20 ஆண்டு கால மண வாழ்க்கை, ஜெயலலிதாவின் பேச்சால் கோபப்பட்டது, நீண்டகால ஏக்கம் உட்பட பல விஷயங்கள் குறித்தும் கலகலப்பாகப் பேசினர்.

`திருமண மேடைல எல்லாரும் அப்படி சொல்லவும் செல்வா கடுப்பாயிட்டார்!' - ரோஜா - செல்வமணி ஷேரிங்ஸ்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ஜோடியாகப் பேட்டி கொடுக்கும் ரோஜா - செல்வமணி தம்பதி, 20 ஆண்டு கால மண வாழ்க்கை, ஜெயலலிதாவின் பேச்சால் கோபப்பட்டது, நீண்டகால ஏக்கம் உட்பட பல விஷயங்கள் குறித்தும் கலகலப்பாகப் பேசினர்.

Published:Updated:
ரோஜா - செல்வமணி

ஆர்.கே.செல்வமணி - ரோஜா ஜோடிக்கு, சினிமா நட்சத்திர தம்பதியர்கள் வரிசையில் முக்கிய இடமுண்டு. 1990-களில் முன்னணி நடிகையாக ஜொலித்த ரோஜா, தற்போது ஆந்திரா அரசியலில் அதிரடிப் பேச்சாளராகக் கவனம் பெற்றிருக்கும் எம்.எல்.ஏ. தமிழ்நாடு சினிமா இயக்குநர்கள் சங்கத் தலைவரான ஆர்.கே.செல்வமணி, அரசியல் கதையம்ச படங்களை இயக்கி பரபரப்பை ஏற்படுத்தியவர். செல்வமணியால் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ரோஜா, 11 ஆண்டுக்கால காதலுக்குப் பிறகு, அவரை கரம்பிடித்தார்.

ரோஜா - செல்வமணி
ரோஜா - செல்வமணி

இந்தத் தம்பதியைச் சந்திக்க, ஆந்திரா மாநிலம் நகரியிலுள்ள இவர்களின் இல்லத்துக்குச் சென்றோம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ஜோடியாகப் பேட்டி கொடுப்பவர்கள், தங்களின் காதல் மற்றும் 20 ஆண்டுக்கால மண வாழ்க்கை குறித்துக் கலகலப்பாகப் பேசினர். பேட்டியின் தொடக்கம் முதலே ரோஜாவின் குரல்தான் ஓங்கி ஒலித்தது. மனைவியின் பேச்சை ரசித்துக் கேட்பதிலேயே ஆர்வமாக இருந்த செல்வமணி, இடையிடையே கருத்தும் காமெடியுமாக சிரிப்பூட்டினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

`` `செம்பருத்தி' படத்துக்கு ஹீரோயினா பலரையும் நடிக்க வைக்க முயற்சி செஞ்சிருக்கார். ஆனா, கடைசிவரை இவருக்குத் திருப்தியே ஏற்படலை. ஆந்திராவுல தனியார் காலேஜ்ல படிச்சுகிட்டிருந்த என்னைக் கண்டுபிடிச்சு அந்தப் படத்துல அறிமுகப்படுத்தினார். ஷூட்டிங்ல என் கண்ணைப் பார்த்துப் பேசவே இவர் ரொம்ப கூச்சப்படுவார். இவரின் அசிஸ்டன்ட் டைரக்டர்ஸ்தான் எனக்கு கதை சொல்லுவாங்க. ஆனா, படம் முடியுறத்துக்குள்ள நாங்க காதலர்களா ஆனது சுவாரஸ்யம். கல்யாணத்துக்கு முன்பு இவர் டைரக்‌ஷன்ல பல படங்கள்ல நான் நடிச்சபோதும், இவர் என்கிட்ட நடந்துக்கிற அணுகுமுறை மாறவேயில்லை.

ரோஜா - செல்வமணி
ரோஜா - செல்வமணி

எப்பவுமே பரபரப்பா, சினிமா வேலைகள் பத்தின சிந்தனையிலேயேதான் இவர் இருப்பார். அதனால, செல்வாகிட்ட மனம்விட்டுப் பேச வாய்ப்பு கிடைக்காது. ஷூட்டிங் ஸ்பாட்ல யாராச்சும் தப்பு செஞ்சா, என்னைத் திட்டி அவங்களுக்கு மறைமுகமா எச்சரிக்கை செய்வார். அரசியல் படங்களை எடுத்து பெயர் வாங்கின இவரோட கரியர்ல `கேப்டன் பிரபாகரன்', `புலன் விசாரணை' படங்கள் முக்கியமானவை. அதுமாதிரியான ஏதாவதொரு படத்துல இவர் என்னை அறிமுகப் படுத்தியிருந்தார்னா, நிச்சயமா இவருக்கு என்மேல காதலே வந்திருக்காது. இதுகூட பரவாயில்ல! கல்யாணம் முடிஞ்சு நாங்க வெளிநாட்டுக்கு ஹனிமூன் போன இடத்துல, எதுவும் சொல்லாம கொள்ளாம இவர் பாட்டுக்கு அடுத்த படத்துக்கான லொகேஷன் பார்க்கப் போயிட்டார்..." படபடவென பட்டாசாக ரோஜா வெடிக்க, செல்வமணியின் முகத்தில் வெட்கச் சிரிப்பு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நீண்ட நேர மெளனத்தைக் கலைத்த செல்வமணி, ஜெயலலிதாவுடன் நிகழ்ந்த மறக்க முடியாத சந்திப்பை நினைவுகூர்ந்தார். ``அசிஸ்டன்ட் டைரக்டர்ஸ், கேமராமேன்னு என் டீம்ல இருக்கும் பத்து பேருடன்தான் சாப்பிடுறது, பேசுறதுனு எப்போதும் நேரம் செலவிடுவேன். மத்த டெக்னீஷியன்ஸ் யாருடனும் பெரிசா பேச மாட்டேன். `இவன் தொந்தரவு புடிச்சவன்’னு பலரும் நினைச்சாலும், படம் நல்லா எடுத்திடுவேன்னு என்னை நம்பினாங்க. யாரோ என்னமோ நினைச்சுட்டுப் போங்கன்னு என் வேலையில மட்டுமே கவனமா இருப்பேன். இந்த நிலையில, ஒருவழியா எங்க கல்யாணம் முடிவானப்போ, ஏகப்பட்ட ட்விஸ்ட்டுகள் நடந்துச்சு.

Roja - R.K.Selvamani
Roja - R.K.Selvamani

ஜெயலலிதா மேடம் முதன்முறை ஆட்சியிலே இருந்த காலகட்டத்துல அரசியலை மையப்படுத்தி நான் எடுத்த படங்களாலும் ஜெயலலிதா மேடத்துக்கு என்மேல செம கோபம். ஆனா, ரோஜா மேல அவங்க அதிக அன்பு வெச்சிருந்தாங்க. அதனால, எங்க கல்யாணத்துக்கு அவங்களைக் கூப்பிடணும்னு ரோஜா உறுதியா இருந்தாங்க. 2002-ல் ஜெயலலிதா மேடம் மறுபடியும் முதல்வரா இருந்த நேரம். அவங்களுக்கு அழைப்பிதழ் கொடுக்க நாங்க ரெண்டு பேரும் அவங்க வீட்டுக்குப் போனோம். வாசல்ல சசிகலா மேடம் எங்களை வரவேற்று வீட்டுக்குள்ள கூட்டிட்டுப்போனாங்க.

`உங்களுக்கு என்னைப் பிடிக்காதுனு நினைக்கிறேன்'னு பேச ஆரம்பிச்ச ஜெயலலிதா மேடம், போகப்போக ரொம்பவே அன்பா பேசினாங்க. `நெடுங்காலமா ஒரு பெண்ணைக் காதலிச்சு, காத்திருந்து அவங்களையே நீங்க கல்யாணம் செஞ்சுக்கிறதுக்கு என் வாழ்த்துகள்'னு என்கிட்ட சொன்னவர், அடுத்து சொன்னது எங்க ரெண்டு பேருக்குமான பயனுள்ள கருத்து.

``நீங்க காதலிச்ச காலம் வேற. அப்போ ஒருத்தர் இன்னொருத்தர்கிட்ட பிடிச்ச விஷயங்களைத்தான் அதிகம் பகிர்ந்திருப்பீங்க. ஆனா, கல்யாணத்துக்கு அப்புறமா, ரெண்டு பேரும் ஒரே வீட்டுல ஒண்ணாவே இருக்கிறதால நிச்சயமா உங்களுக்குள்ள கருத்து வேறுபாடுகள் வரும். அதையெல்லாம் பெரிசா வளர விடாம, எப்போதும் ஒத்துமையா இருக்கணும்"னு சொன்னார். நாங்க பேசிக்கிட்டிருந்தபோதே அதிகாரிகள் பலரும் அவரைப் பார்க்க அடுத்தடுத்து வந்து போனாங்க. கண்களாலேயே அவங்களையெல்லாம் கன்ட்ரோல் செஞ்ச ஜெயலலிதா மேடம், எங்ககிட்ட தாயுள்ளத்தோடு அவ்வளவு வாஞ்சையா பேசினாங்க. அதனால, அன்பின் உச்சமாகவும் அதிகாரத்தின் உச்சமாவும் அவங்களைப் பார்த்துப் பேசின அந்த 15 நிமிட சந்திப்புக்குப் பிறகு, அவங்கமேல எனக்கிருந்த எதிர்மறையான எண்ணமெல்லாம் முழுமையா நீங்கிடுச்சு" என்பவரை இடைமறிக்கும் ரோஜா, திருமணத்தில் நடந்த சுவாரஸ்யம் ஒன்றை சிரிப்புடன் பகிர்ந்தார்.

ரோஜா - செல்வமணி
ரோஜா - செல்வமணி

``நாங்க அழைப்பிதழ் கொடுத்தபோதே, எங்களை வாழ்த்த வருவதா ஜெயலலிதா அம்மா சம்மதம் சொன்னாங்க. அடுத்த நாளே இந்தத் தகவல் எல்லா நியூஸ் பேப்பர்லயும் வெளியாச்சு. அப்புறமா, இவர் விருப்பபடி கலைஞருக்கும் அழைப்பிதழ் கொடுத்தார். ஜெயலலிதா அம்மா எங்க கல்யாணத்துக்கு வரவிருப்பதைச் சுட்டிக்காட்டி, `அவங்க வரும்போது நானும் வர்றது சரியா இருக்காது. அதில்லாம, திருப்பதிவரை டிராவல் பண்ண என் உடல்நிலையும் ஒத்துக்காது’னு கலைஞர் ஐயா கனிவோடு சொல்லிட்டார்.

ஜெயலலிதா அம்மா சொன்னதுபோலவே எங்க கல்யாணத்துல கலந்துகிட்ட அவங்க, `என் பொண்ணு எந்தச் சூழல்லயும் கண்கலங்கவே கூடாது. ரோஜாவை நல்லா பார்த்துக்கணும்'னு இவர்கிட்ட சொன்னாங்க.

இதேபோலவே அடுத்தடுத்து மேடையேறி வாழ்த்திய பலரும் இவர்கிட்ட சொல்லவே, ஒருகட்டத்துல செல்வா கடுப்பாகிட்டார். `செல்வாவை நல்லா பார்த்துக்கோ'ன்னு ஒருத்தர்கூட உன்கிட்ட சொல்ல மாட்டேங்கிறாங்களே...'னு கொஞ்சலா கேட்டார். இவர் ஆரம்பத்திலிருந்தே ரொம்பவே சைலன்ட் டைப்; அளவாதான் பேசுவார். ஆனா, அவருக்கும் சேர்த்து வெச்சு நான் அதிகமா பேசுவேன். வீட்டுலயும் சரி, வெளியிலயும் சரி... என்னை எந்த விதத்துலயும் இவர் கட்டுப்படுத்தியதில்லை. ஏன்னா, இவரோட வளர்ப்புமுறை அப்படி.

ரோஜா - செல்வமணி
ரோஜா - செல்வமணி

`பெண்களுக்குச் சம உரிமை கொடுக்கும்போதுதான் இந்தச் சமூகத்துல எல்லோருக்கும் எல்லாமும் முழுமை பெறும். எனக்குப் பிறகு, உன்னோட அம்மா, குங்குமம், பூ உட்பட எதையும் இழக்காம, எல்லா விசேஷ நிகழ்ச்சிகள்லயும் முன்னிலை வகிக்கவும் நீ உறுதி செய்யணும்'னு செல்வாகிட்ட இவர் அப்பா அடிக்கடி சொல்லுவார். அந்தக் குடும்பத்திலிருந்து வந்ததாலயும், பெரியார்மேல கொண்ட பற்றாலயும் எல்லா வகையிலும் இவர் எனக்குச் சுதந்திரம் கொடுத்தார்" என்று கணவர்மீதான அன்பை அடுக்கும் ரோஜா, ``இவர் பேச்சைக் கேட்டுக் கேட்டு, தன் உரிமைகளுக்காக எங்க பொண்ணு என்னைவிட பயங்கரமா வாய்பேசுவா" என்கிறார் செல்லமாக.

பல வெற்றிப் படங்களைக் கொடுத்தும், சினிமாவில் தனக்கு நிறைவேறாத ஆசையைப் பகிர்ந்தார் செல்வமணி.

`` `ஜல்லிக்கட்டு’ படத்துல இயக்குநர் மணிவண்ணன் சாரின் அசிஸ்டன்ட் டைரக்டரா நான் வேலை செஞ்சேன். எம்.ஜி.ஆர் சார் மேல எனக்கு அளவுகடந்த அன்பு. அந்தப் படத்தின் வெற்றி விழாவுல எம்.ஜி.ஆர் கலந்துக்கிறார்னு கேள்விப்பட்டு, அவர் கையால கேடயம் வாங்கிடலாம்னு ரொம்பவே ஆசையா இருந்தேன். சென்னையிலுள்ள வள்ளுவர் கோட்டத்தைக் கட்டிய கலைஞரை, அந்த நினைவுச் சின்னம் திறக்கப்படுறதுக்கு முன்தினம் அவரோட ஆட்சியை டிஸ்மிஸ் பண்ணிட்டாங்க. அதே வள்ளுவர் கோட்டத்துல `ஜல்லிக்கட்டு’ படத்தோட வெற்றி விழா, எம்.ஜி.ஆர் தலைமையில நடந்துச்சு. தி.மு.க விசுவாசியான என் அப்பா, அந்த நிகழ்ச்சியில என்னைக் கலந்துக்கக் கூடாதுனு கண்டிப்புடன் சொல்லிட்டார்.

ரோஜா - செல்வமணி
ரோஜா - செல்வமணி

அதனால, வள்ளுவர் கோட்டத்துக்கு வெளியே நின்னு எம்.ஜி.ஆர் கையால விருது வாங்க முடியலையேனு வருத்தப்பட்டேன். என் துரதிர்ஷ்டம், பல வெற்றிப் படங்களை இயக்கியும்கூட, அந்தப் படங்களின் வெற்றி விழா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செஞ்சும்கூட, ஏதேதோ காரணத்தால திட்டமிட்ட நிகழ்ச்சிகள் தடைபட்டுவிடும். சினிமாத்துறையில இதுவரை ஒரு கேடயம், பரிசுகூட நான் வாங்கினதில்லை" என்று ஆதங்கத்துடன் கூறும் செல்வமணி, பேச்சை முடிக்கும் முன்னரே,

``நானே உங்களுக்குப் பெரிய பரிசுதானே? 'எனக்குப் பரிசே கிடைச்சதில்லை'னு ஏன் பொய் சொல்றீங்க?" என்று ரோஜா தமாஷாகக் கூற, சிரிப்பலை வெடித்தது.

அவள் விகடனில் வெளியான ரோஜா - செல்வமணியின் விரிவான பேட்டியைப் படிக்க, இங்கு க்ளிக் செய்யவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism