Published:Updated:

``ஒரு கட்டத்தில் தற்கொலை பண்ணிக்கலாமானு நினைச்சேன்..!'' - கலங்கும் மோகன் வைத்யா

மோகன் வைத்யா, தனது பர்ஷனல் பக்கங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.

நடனம், நடிப்பு, பாட்டு எனப் பன்முகத் திறமை கொண்ட மோகன் வைத்யா, கோயம்புத்தூரில் இருந்த தன்னுடைய வீட்டை சென்னைக்கு மாற்றியிருக்கிறார். `இனிமேல் எனக்கு நிறைய வாய்ப்புகளும், நிகழ்ச்சிகளும் வரும் என்கிற நம்பிக்கையில் சென்னைக்கு ஷிஃப்ட் ஆகியிருக்கிறேன்' என்பவரின் முகத்தில் நம்பிக்கை ரேகை... தொடர்ந்து நம்மிடம் பேசுகிறார் மோகன் வைத்யா.

mohan vaidya
mohan vaidya

"நான் பிறந்த முதல் நான்கு வருடங்கள் எனக்கு பேச்சே வரல. பையன் இப்படியே இருக்கானேனு அப்பா சபரிமலைக்குப் போயிட்டு வந்த பிறகுதான் எனக்குப் பேச்சே வந்ததாம். பேச்சு வந்ததும் பெண் குரலில்தான் பேசியிருக்கிறேன். இப்போதெல்லாம் ஆண்கள் பெண்கள் குரலில் பேசுறாங்க. அப்படி நிறைய பேரை பார்த்திருக்கிறேன். அது இயற்கை. ஒண்ணும் பண்ண முடியாது. என்னுடைய 26 வயது வரை பெண் குரலில்தான் பேசுவேன், பாடுவேன். வாணி ஜெயராம் குரலில் பாடுவேன். 1978 முதல் 80 வரை மியூசிக் காலேஜ்ல வயலின் படிச்சேன். 'குரல் இல்லாதவனுக்கு, விரல்தான் ஆயுதம்' என என் பெரியப்பா சொல்லிட்டே இருப்பார். ஒன்றரை வருஷம் படிக்கும்போதே அப்பா என்னை டெல்லிக்கு அனுப்பி வைத்துவிட்டார்.

அப்பா சொன்னதால சம்பாதிக்க டெல்லி போயிட்டேன். அங்கே பரதநாட்டியம் கத்துக் கொடுப்பது, பாடல் கத்துக் கொடுப்பதுனு என் வாழ்க்கை போயிட்டு இருந்தபோது, என் 23வது வயதில் கல்யாணம் நடந்தது. 27 வயதானபோது ஒரு மாமி வீட்டில் உட்கார்ந்து பாடிட்டு இருந்தேன். அப்போ அங்கிருந்த மாமி 'நீ ஆண்குரலில் பாட முயற்சி பண்ணேன். உனக்கு கண்டிப்பாக வரும்'னு சொன்னாங்க. அவங்க சொன்ன மாதிரியே முயற்சி பண்ணேன். `சித்தி விநாயகரே...' பாடலை தொடங்கிய சில நிமிடங்களில் பெண் குரல், ஆண் குரலுக்கு மாறிவிட்டது. அதை அப்படியே தொடர்ந்து பழக ஆரம்பிச்சேன். சங்கீதம்தான் எனக்கு வாழ்க்கையைக் கொடுத்தது'' என்பவர் சீரியலில் தலைகாட்டிய தருணத்தை பகிர்ந்தார்.

mohan vaidya
mohan vaidya

"கே.பாலசந்தர் அவர்களுடைய `பிரேமி' சீரியல் என் வாழ்க்கையில் மறக்க முடியாது. முதல் ஷாட்டில் குடும்பத்தினரின் அறிமுகம் வரும். அதில் ஒவ்வொருவராக ஷோபாவில் உட்காருவாங்க. நான் கீழே உட்காருவேன். இரண்டாவது ஷாட்டில் நான் மட்டும் வருவேன். அக்காவிடம் `என்னவளே...' பாட்டு பாடி செலவுக்குக் காசு கேட்பேன். அந்த சீன் எடுக்கும்போது அழுதுட்டேன். ஒவ்வொரு டேக் அதிகம் ஆகும்போதும் டயலாக் அதிகமாகிட்டே இருக்கும். நான்கு டயலாக்கா இருக்கும்போது நாற்பது டேக் ஆகும். என்னை பக்கத்துல உட்கார வைத்து, `எதுக்கு அழறீங்க. இங்க இருக்கவங்க எவ்வளவு டேக் நடிச்சிருக்காங்க தெரியுமா..? நாளையில் இருந்து எப்படி தூள் கிளப்பப் போறீங்க'னு தட்டிக் கொடுத்தார் கே.பி சார். அவர் சொன்னதுபோல, என் நடிப்பில் முன்னேற்றம் ஏற்பட்டது. கூடவே, அவருடன் 13 நிமிடங்கள் இணைந்து நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அது எனக்கு மிகப்பெரிய பாக்கியம். அவரது நூறாவது படமான `பார்த்தாலே பரவசம்' படத்திற்காக என்னை அழைத்திருந்தார். அன்று அவருடைய பிறந்தநாள். அவரிடம் ஆசீர்வாதமும் வாங்கினேன்'' என்றவர் `மர்ம தேசம்' சீரியல் நினைவுகளைப் பகிர்ந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`` `மர்ம தேசம்’ சீரியலில் (நட்டி) நடராஜ் கேரக்டரில் நடித்தது எனக்கு மிகப் பெரிய சந்தோஷம். அதற்காக நாகா சாருக்கு மிகப்பெரிய நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். நீங்கதான் வேணும்னு அவர் உறுதியா நின்னார். என்னை ஒரு போட்டோ எடுத்து, வித்தியாசமாக வரைந்து பார்த்து, அதற்குப் பிறகு கொடுத்த கதாபாத்திரம் அது. மூன்று சீசன் தென்காசி, குற்றாலம் போயிட்டு வந்தோம். நாங்க தங்கியிருந்த இடத்தின் வலது பக்கம் போனால் குற்றாலம், இடது பக்கம் போனால் கேரளா ஃபாரஸ்ட். 90’ஸ் கிட்ஸ்களுக்கான ஃபேவரைட் சீரியலாக அது இருப்பது எனக்கும் பெருமைதான்.

mohan vaidya
mohan vaidya

`சேது' படத்தின் போதுதான் என் மனைவி காலமானார். ஒன்றரை வருஷம் `சேது’ படத்திற்காக கமிட் ஆகியிருந்தேன். நடித்தது மொத்தமே 13 நாள்கள்தான். தியேட்டரில் போய் பார்க்கும்போது, கோயில் சீன் முடிந்து நான் எழுந்து போனதும் எல்லோரும் தியேட்டரில் கத்தினாங்க. அந்த சீனை ஒரே டேக்கில் முடித்துக் கொடுத்தேன். தெலுங்கில் `சேது’ படத்தை ரீமேக் பண்ணும்போது, 'எல்லா கேரக்டர்களையும் எங்களால பிக்ஸ் பண்ண முடிந்தது. ஆனால், உங்க கேரக்டருக்கு யாரையும் எடுக்க முடியவில்லை' எனச் சொன்னார் ஜீவிதா மேடம். தெலுங்கிலும் நானே பண்ண வேண்டியதாப் போச்சு. அதேபோல ஷங்கர் சார், எனக்கு தெய்வம் மாதிரி. `அந்நியன்' படத்தில் ஹீரோயின் அப்பாவாக நடித்திருந்தேன். அதில் என்னை நல்ல நடிகனாக காட்டியிருப்பார். அவருக்கு எத்தனை நன்றிகள் சொன்னாலும் தகும்'' என்றவரிடம் ஹேர் ஸ்டைலுக்கான காரணத்தைக் கேட்டேன்.

``அதாவது வளருதே என்கிற சந்தோஷம் இருக்கு. `பிரேமி' சீரியலில் `என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேங்கிறீங்களே'னு முடியைக் கோதிதான் சொல்வேன். ஆனாலும், என்னைவிட என் தம்பி ராஜேஷ் வைத்தியாவுக்குதான் அதிகமான முடி. இன்னொரு விஷயம், ஆரம்ப காலத்தில் எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வரும். நம்பிக்கையோடு போகும்போது, ஏனோ அதில் என்னால் நடிக்க முடியாமல் போய்விடும். அப்படி, நிறைய படங்களில் நான் புறக்கணிக்கப்பட்டிருக்கிறேன்.

`` சினிமா வேற மாதிரி ஆகிடுச்சுங்க!’’ - என்ன சொல்கிறார் வைபவ்?

சில நேரங்களில் 'நான் ஏன் வாழணும். பேசாம தற்கொலை பண்ணிக்கலாமா?'னு தோணியிருக்கு. எனக்கு அதிகமா கோபம் வரும்னு சொல்லுவாங்க. நான் நியாயத்துக்காகத்தான் கோபப்படுவேன். கோபத்தினால் நான் நிறைய இழந்திருக்கிறேன். என்னைவிட்டுப் பிரிந்து சென்ற பல நண்பர்கள், குடும்பத்தார் என நிறைய பேர் இப்போது வந்து சேர்ந்துட்டாங்க. சந்தோஷமா இருக்கு'' என்று நெகிழ்ச்சியுடன் முடித்தார் மோகன் வைத்யா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு