Published:Updated:

மோகன்லால் மகள் எழுதிய கவிதை நூல்! - எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அட்டைப்படம்

மோகன்லால் மகள் விஸ்மாயா
மோகன்லால் மகள் விஸ்மாயா

மோகன்லாலின் மகள் விஸ்மாயா பொதுவெளியில் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பாதவர். பொது நிகழ்ச்சிகள் எதிலும் தலைகாட்டாமல் ஒதுங்கியிருந்த அவருக்குள் கவிதை, ஓவியம் போன்ற கலைகள் புதைந்து கிடந்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

பொதுவாக திரைப்பட நட்சத்திரங்களின் வாரிசுகள் அதே துறையைத் தேர்வு செய்வதே வழக்கமாக இருக்கிறது. அதன்படி, மலையாளம் மற்றும் தமிழ்த்திரை உலகின் முன்னணி நட்சத்திரமாகத் திகழும் மோகன்லால் மகன் பிரனவ் மோகன்லால், தன் தந்தையைப் போலவே திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார்.

மோகன்லால்
மோகன்லால்

மோகன்லாலின் மகள் விஸ்மாயா இதுவரை பொதுநிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொள்ளாமல் மீடியா வெளிச்சத்திலிருந்து ஒதுங்கியே இருந்துவந்தார். அவர் திரைப்படங்களில் நடிப்பார் என அவ்வப்போது தகவல்கள் வெளியானபோதிலும், திரையுலக விழாக்கள் உள்ளிட்ட எதிலும் கலந்துகொள்ளாமல் இருந்துவந்தார்.

சமீபத்தில் ஒரு திரைப்பட விழாவின்போது தந்தை, தாய் மற்றும் சகோதரருடன் விஸ்மாயாவும் பங்கேற்றார். அதன் பின்னர் அவர் திரைப்படங்களில் நடிக்க இருப்பதாகத் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வந்தன.

மோகன்லால் குடும்பம்
மோகன்லால் குடும்பம்

இந்த நிலையில், தனக்கு இருக்கும் கவிதை எழுதும் ஆற்றல் மற்றும் ஓவியத் திறமை பற்றி முதல்முறையாக வெளியில் தெரியப்படுத்தியுள்ளார். விரைவில் கவிதை மற்றும் ஓவியங்கள் அடங்கிய புத்தகத்தை வெளியிட இருப்பதாக இன்ஸ்டாகிராமில் அறிவிப்புச் செய்துள்ளார், விஸ்மாயா.

கிரைன்ஸ் ஆஃப் ஸ்டார்டஸ்ட் (Grains of Stardust) என்ற தலைப்பில் வெளியாகவுள்ள கவிதைப் புத்தகத்தின் அட்டைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். அதில், `நான் எனது சில கவிதைகள் மற்றும் ஓவியங்களைப் புத்தகமாகத் தொகுத்திருக்கிறேன். இது பற்றிய விவரங்களை விரைவில் அறிவிப்பேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

புத்தகத்தின் அட்டைப்படம்
புத்தகத்தின் அட்டைப்படம்

விஸ்மாயாவின் இந்தப் புத்தகம், மோகன்லால் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதனால் விஸ்மாயா புத்தகத்தின் அட்டைப் படம் இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.

அடுத்த கட்டுரைக்கு