பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

சினிமா விமர்சனம்: தர்பார்

Rajinikanth
பிரீமியம் ஸ்டோரி
News
Rajinikanth

ரஜினி - 90களில் பார்த்த அதே சூப்பர்ஸ்டார்.

மும்பை நகரையே அச்சுறுத்தும் போதை மாபியாவுக்கு ரஜினி தன் ஸ்டைலில் கொடுக்கும் தண்டனையே இந்த ‘தர்பார்.’

தர்பார்
தர்பார்

மேலிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க, டெல்லியிலிருந்து மும்பை மாநகரின் கமிஷனராகப் பொறுப்பேற்றுக்கொள்கிறார் ஆதித்யா அருணாசலம். மும்பையின் நாடி நரம்புகளில் ஊறிப்போயிருக்கும் போதைப்பொருள்களை முற்றிலுமாக ஒழிப்பதும் அதற்குக் காரணமானவர்களை எந்தவித அரசியல் குறுக்கீடும் இல்லாமல் தண்டிப்பதும்தான் ரஜினியின் முதலும் முற்றிலுமான மிஷன். போதைப்பொருள் மாபியாவின் மூளை எனக் கருதப்படும் ஒரு தொழிலதிபரின் மகனைத் தட்டித் தூக்குகிறார். இதன்விளைவாக, இருதரப்பிலும் சங்கிலித்தொடர்போல உயிர்ப்பலிகள் நிகழ்கின்றன. சங்கிலியின் மறுமுனையைக் கையில் வைத்திருக்கும் வில்லனை ரஜினி தேடிப்பிடித்து அழிப்பதுதான் மீதிக்கதை.

ரஜினி - 90களில் பார்த்த அதே சூப்பர்ஸ்டார். டிரேடுமார்க் ஸ்டைல், நக்கல் உடல்மொழி, முறைத்த முகம் எனக் காட்சிக்குக் காட்சி மாஸ் மொமன்ட்களைத் தெறிக்கவிடுகிறார். திரையில் அவர் பற்றவைக்கும் எனர்ஜி நெருப்பு நம்மை நாஸ்டாலஜியா பயணத்திற்குத் தயார் செய்கிறது. பெரிய ஹீரோ படத்தில் ஹீரோயினுக்குப் பெரிதாய் வேலையில்லாமல் இருப்பதுதானே வேலை. நயன்தாராவுக்கும் அஃதே!

தர்பார்
தர்பார்

படத்தில் ரஜினிக்கு அடுத்தபடியாய் கவனிக்க, நெகிழ வைப்பவர் நிவேதா தாமஸ். இரண்டாம் பாதியில் அவர் நமக்குள் ஏற்றும் கனம், கலங்க வைக்கிறது. ரஜினியிடம் வந்து அடிவாங்கிச் செல்லும் வரிசையில் கடைசி ஆளாகவே வருகிறார் சுனில் ஷெட்டி. அதனால் அவரின் கேரக்டரும் தாக்கம் ஏற்படுத்தவில்லை. யோகிபாபு ஆங்காங்கே தெளிக்கும் ஒன்லைனர்கள் சிரிக்கவைக்கின்றன.

படத்தின் பலம் அனிருத்தின் இசை. பேக்ரவுண்ட் இசையை அலறவிட்டு கமர்ஷியல் டெம்போவை இரண்டரை மணிநேரமும் தக்கவைக்கிறார். சந்தோஷ் சிவனின் கேமரா பளிச். ரஜினி படங்களுக்கே உரிய விறுவிறுப்பு இதிலும் இருப்பதற்குப் பெரிய காரணம் - கர் பிரசாத்தின் எடிட்டிங்!

முருகதாஸ், ரஜினி ரசிகராக, ரஜினிக்காகவே பார்த்துப் பார்த்துச் செதுக்கியிருக்கும் சில தருணங்கள் ரசிக்க வைக்கின்றன. ஆனால், ரஜினியை எடுத்துவிட்டுப் பார்த்தால் திரைக்கதை அந்தரத்தில் ஊசலாடுகிறது. திட்டமிட்ட என்கவுன்ட்டர்கள் அதிகரித்துவரும் இந்தக் காலத்தில் அவற்றை நியாயப்படுத்தும்விதமாக ஒரு மாஸ் ஹீரோவை முன்னிறுத்தியிருப்பது மிகப்பெரிய உறுத்தல். தட்டிக்கேட்கும் மனித உரிமை ஆணையத்தையும் கேலிப்பொருளாக்கியிருக்கிறார்கள்.

சினிமா விமர்சனம்: தர்பார்

மாநகர கமிஷனருக்கு இன்டர்நேஷனல் லெவலில் அதிகாரங்கள் இருப்பது, டாக்டரே தலையில் அடிபட்டவருக்குக் கெடு சொல்லி, குறைந்தபட்ச ட்ரீட்மென்ட்கூடக் கொடுக்காமல் இருப்பது, பாலியல் வன்முறைக்குள்ளாகும் குழந்தைகளை ஊடகங்கள் புகைப்படம் எடுப்பது என, ‘ச்சும்மா கிழி’யில் லாஜிக்கையெல்லாம் கிழித்துத் தொங்கவிட்டிருக்கிறார்கள்.

திரைக்கதை, லாஜிக் என எதைப்பற்றியும் கவலைப்படாத, ரஜினி ரசிகர்களுக்கான தர்பார் இது.