
படம் சொல்லவரும் கருத்தை, கடைசிவரை முழுமைப்படுத்த முடியாமல் தடுமாறியிருக்கிறார் இயக்குநர் சஞ்சய் பாரதி.
வேற்றுமொழி பேசும் கன்னி ராசிப் பெண்ணைக் கரம் பிடிக்கத் துடிக்கும் ஓர் இளைஞனின் கதையே `தனுசு ராசி நேயர்களே.’
தாத்தாவின் சொல்கேட்டு சிறுவயதிலிருந்தே ஜோதிடத்தை நம்பும் ஹீரோ ஹரீஷ் கல்யாண். கன்னி ராசிப்பெண் அமைந்தால்தான் அவரின் வாழ்க்கை செழிக்கும் என ஜோதிடர் சொன்னதால், டேட்டிங் செல்லும் எல்லாப் பெண்களிடமும் `நீங்க என்ன ராசி’ எனக் கேட்டு டார்ச்சர் செய்கிறார். இவருக்கும் செவ்வாய் கிரகம் செல்லும் கனவுடன் இருக்கும் நாயகி டிகங்கனா சூரியவன் ஷிக்குமிடையே பாலுறவு நிகழ்ந்துவிட, அதன்பிறகு கல்யாணம் ஆகிறதா இல்லையா என்பதே மீதிக்கதை.
ஜோதிடத்தை மட்டுமே நம்பும் அர்ஜுனாக ஹரீஷ் கல்யாண். தனக்கான அதே டெம்ப்ளேட்டில் நடித்திருக்கிறார். கதையும், திரைக்கதையும் சொதப்பியதால் இவரது நடிப்பும் படத்துக்குப் பெரிதாய் கைகொடுக்கவில்லை.

செவ்வாய்க் கிரகத்துக்குப் பறக்க நினைக்கும் விண்வெளி வீராங்கனையாக டிகங்கனா சூரியவன்ஷி. வருகிறார், ஹீரோவுடன் தண்ணி யடிக்கிறார், கம்ப்யூட்டரில் அவ்வப்போது சாட்டிலைட், மார்ஸ், சோலார் சிஸ்டம் என கூகுள் செய்கிறார், இறுதியில் டாட்டா காட்டிவிட்டு செவ்வாய்க் கிரகம் கிளம்புகிறார். அவ்வளவே. கதாபாத்திர வடிவமைப்பை நிர்ணயித்த இயக்குநர் அதற்கான உருவத்தை உருக்குலைத்துவிட்டார். தோழியாக வரும் ரெபா மோனிகா ஜானின் நடிப்பில் குறைகள் இல்லை. கடைசியில் பேசும் எமோஷன் காட்சிக்காக மட்டும் முனீஸ்காந்துக்கு ஒரு ஸ்லோ க்ளாப்ஸ். முழுக்க முழுக்க யோகி பாபு காமெடியை நம்பி வரும் ரசிகர்களுக்கு மிஞ்சியதெல்லாம் ஏமாற்றமே.
படம் சொல்லவரும் கருத்தை, கடைசிவரை முழுமைப்படுத்த முடியாமல் தடுமாறியிருக்கிறார் இயக்குநர் சஞ்சய் பாரதி. கடமைக்கென்று கதை நகர்ந்து, ஏகப்பட்ட குழப்படிகளோடு, எப்படி முடிக்க என்று தெரியாமல், புதிதாக கேரக்டர் ஒன்றைப் புகுத்திப் படத்தை முடிக்கிறார்கள்.

ஜிப்ரான் இசை, பி.கே.வர்மாவின் ஒளிப்பதிவு, குபேந்திரனின் எடிட்டிங் என்று எதுவும் படத்தைக் காப்பாற்றவில்லை.
படத்தின் ஸ்க்ரிப்ட்டை எடுத்துக்கொண்டு ஒரு நல்ல ஜோதிடரை அணுகி யிருக்கலாமோ?!