சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

சினிமா விமர்சனம்: ஜிப்ஸி.

ஜிப்ஸி
பிரீமியம் ஸ்டோரி
News
ஜிப்ஸி

மெனக்கெடாமல் பகடியை வெளிப்படுத்தும் ஜீவாவின் உடல்மொழி ஜிப்ஸியின் பலம்.

மதங்களை விடுத்து மனித மனங்களை இணைக்க விழையும் ஒரு நாடோடியின் பயணமே ‘ஜிப்ஸி.’

காஷ்மீரின் பனிச்சிகரங்களுக்கிடையே தன் பெற்றோரை இழந்து ஒரு நாடோடிக் குதிரைக் காரரிடம் அடைக்கலமாகும் கைக்குழந்தை, வளர்ந்து வானமே கூரையாக, பாதங்கள் செல்லும் திசைகளெல்லாம் பாதையாக, ஜிப்ஸி ஜீவாவாக மாறுகிறது.

சினிமா விமர்சனம்: ஜிப்ஸி.

குதிரைக்காரரும் ஒருகட்டத்தில் இறந்துபோக, குதிரையை மட்டுமே துணையாகக் கொண்டு சுற்றித்திரியும் ஜீவாவைக் கண்டதும் காதல் கொள்கிறார் நாயகி நடாஷா சிங். பழைமைவாதியான தந்தையிடமிருந்து பிரிந்து, ஜீவாவோடு இந்தியா முழுக்கப் பயணிக்கிறார். ஒரு மதக்கலவரத்தில் கர்ப்பிணி மனைவியை ஜீவா பிரிய நேரிடுகிறது. தொலைந்துபோன தன் உறவுகளையும், அதற்குக் காரணமான மதவாதிகளையும் இசைவழி ஜிப்ஸி தேடுவதுதான் மீதிக்கதை.

தெளிந்த நீரோடையின் அழகியலோடு
காடு, மலை, மனிதர்கள்

மெனக்கெடாமல் பகடியை வெளிப்படுத்தும் ஜீவாவின் உடல்மொழி ஜிப்ஸியின் பலம். முதல்பாதி முழுக்க காதல், ஏக்கம், சோகம் என ஏகப்பட்ட உணர்வு விளையாட்டுகளில் தேர்ச்சி பெறும் அவருக்கு இரண்டாம் பாதியின் கதை பெரிதாக வேலை வைக்கவில்லை. நாயகி நடாஷா சிங் அழுத்தமான அறிமுகம்.

சினிமா விமர்சனம்: ஜிப்ஸி.

பர்தாவுக்குள் அடைபட்ட வாழ்க்கை, ஜிப்ஸியுடனான பயணத்தில் மலரும் புதிய அனுபவம், கலவரத்தின் ரத்த சாட்சியாக மாறும் கொடூரம், வன்முறையில் பாதிக்கப் பட்டு உறைந்த விழிகளோடு சுருங்கும் அவலம் எனப் பரிமாணங்கள் காட்டுகிறார். மிடுக்கான கேரள காம்ரேட் ரோலுக்கு சன்னி வெய்ன் நல்ல தேர்வு. அடிப்படைவாதிகளின் இலக்கணங்களில் அப்படியே பொருந்திப்போகிறார்கள் முத்தலிப்பாக நடித்திருக்கும் லால் ஜோஸும், சோனுகுமாராக நடித்திருக்கும் விக்ராந்த் சிங்கும்.

தெளிந்த நீரோடையின் அழகியலோடு காடு, மலை, மனிதர்கள் அனைவரையும் பிரதிபலிக்கிறது எஸ்.கே.செல்வகுமாரின் ஒளிப்பதிவு. அதற்கு மேலும் அழகு சேர்க்கிறது ரேமண்ட் டெரிக் க்ராஸ்டாவின் படத்தொகுப்பு. நாடோடிகளின் இசை பிணைந்த வாழ்வைக் கொண்டுவருவதற்கு ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். முதல்பாதியில் பாடல்கள் ஈர்க்கின்றன. ஆனால் படத்தின் ஆதாரமான இறுதி இசைநிகழ்ச்சி, பெரிய ஏமாற்றத்தையே தருகிறது. ஒருகட்டத்துக்கு மேல் அடுத்தடுத்து வரும் பாடல்கள் அயர்ச்சியைத் தருகின்றன.

சினிமா விமர்சனம்: ஜிப்ஸி.

எளியவர்களின் காதல், சமகால நிகழ்வுகளைப் பகடி செய்யும் துணிச்சல் என மீண்டும் கவனம் ஈர்க்கிறார் ராஜுமுருகன். ஆனால், கோவையாக அமையாத காட்சிகளும், ஆங்காங்கே தடுமாறும் கதைக்களமும் சோர்வைக் கூட்டுகின்றன. அதிலும் இரண்டாம் பாதியில் ஒரே இடத்தில் கட்டிப்போடப்பட்ட ‘சே’ குதிரை போல், கதை நகர மறுக்கிறது. தனிப்பட்ட இருவரின் முறிந்துபோன உறவை மீட்டெடுக்கும் படமா, மதவாதம் மனித வாழ்க்கையில் ஏற்படுத்தும் பாதிப்பைச் சொல்லும் படமா எனப் பல்வேறு குழப்பங்கள். கலவரத்தின் இருமுனை முகங்களை இணைக்கும் காட்சி, ரொம்பவே செயற்கைத்தனம்.

திரைக்கதையின் திசையைச் சரியாகத் தீர்மானித்திருந்தால் எல்லாரையும் ஈர்த்திருப்பான் இந்த ‘ஜிப்ஸி.’