சினிமா
Published:Updated:

சினிமா விமர்சனம்: கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
பிரீமியம் ஸ்டோரி
News
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்

மொத்தத்தில், `கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ கலர்ஃபுல் என்று அர்த்தம்!

டெக்னிக்கலான ஓட்டைகளில் நுழைந்து டெக்னிக்கலாக ஆட்டையைப் போடும் இரு இளைஞர்களின் இதயங்களை இரு பெண்கள் கொள்ளையடிக்க, டெக்னிக்கல் திருட்டை ஒரு போலீஸ் கண்டுபிடிக்க, அந்த இளைஞர்களை அவர் பிடிக்க நினைக்க, இளைஞர்களோ காதலிகளுடன் புதுவாழ்வு வாழ நினைக்க, அவர் ஒண்ணு நினைக்க, இவர் ஒண்ணு நினைக்க, கடைசியில் நாம் நினைக்காததெல்லாம் நடந்துமுடிந்தால், `கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்.’

ஆப் டெவலப்பர், கேம் டிசைனர் எனும் போர்வைக்குள் ஊரை அடித்துப் பொட்டலம் கட்டுகிறார்கள் சித்து மற்றும் காளீஸ். திருடிச் சேர்த்த காசையெல்லாம் குளிக்கிறோம், குடிக்கிறோம், தூங்குறோம் எனத் தண்ணீராய் இறைக்கிறார்கள். இந்நிலையில், சித்துவுக்கு மீரா எனும் பெண்மீது காதல். மீராவோ, `ஒரு ரூபாயா இருந்தாலும், உழைச்சு சம்பாதிச்சதை ஏமாறுவதும் பிடிக்காது. ஏமாத்துறதும் பிடிக்காது’ என்கிற கொள்கையுடன் வாழ்பவர். இந்தக் கோடே அவர்களின் காதலுக்குக் கேடாய் முடியுமோ என நாம் கன்னத்தில் கை வைத்து அமர்ந்திருக்க, இடைவெளியிலோ கண் கட்டுவித்தை காட்டிவிடுகிறார் இயக்குநர் தேசிங் பெரியசாமி. அதன்பின் திரைக்கதையில் நடப்பதெல்லாம் திருப்பங்கள்தான்.

சினிமா விமர்சனம்: கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்

கதையில் நாயகன் ஏமாற்றுவதைப் போலவே, கதையை வைத்துப் பார்வையாளர்களையும் ஏமாற்றி `தேல்பத்ரிசிங்’ என்கிறார் இயக்குநர் தேசிங். ஆனால், அது ரசிக்கும்படியாக இருப்பதுதான் படத்தின் பலம். கோடிகள் புரளும் ஒரு கதையை, ஒவ்வொரு ஃப்ரேமிலும் ரிச்சாகக் காட்சிபடுத்தியிருப்பதிலும் கவர்கிறார். எதிர்பாராத, சுவாரஸ்யமான திருப்பங்கள், மென்மை யான ஒரு காதல், ஆபாச, இரட்டை அர்த்தங்களற்ற ஜாலி, கேலியென நன்றாகவே நகரும் படத்தில், `தர்மம்; அறம்’ எனும் விஷயம்தான் தர்ம அடி வாங்குகிறது.

சித்துவாக துல்கர் சல்மான், கதாபாத்திரத்திற்கான சர்வ லட்சணங்களும் பொருந்தியிருக்கின்றன. அவர் நண்பர் காளீஸாக ரக்‌ஷன். நாயகனுக்கு இணையான கதாபாத்திரம், மீரா, மதுமிதா, ?-ஆக ரிதுவர்மா, முக்கியத்துவம் நிறைந்த நாயகி கதாபாத்திரம். முதலில் தடுமாறுபவர், பிறகு சமாளித்துவிடுகிறார். மீராவின் தோழி ஸ்ரேயாவாக, நிரஞ்சனி அகத்தியன். நால்வருமே, திரையை அழகாக ஆக்கிரமிக்கிறார்கள். அலட்டல் இல்லாமல் நடித்து, அப்ளாஸும் அள்ளுகிறார்கள். படத்தின் மிகப்பெரிய சர்ப்ரைஸ், கௌதம் வாசுதேவ் மேனன். போலீஸ் படங்களாக எடுத்துத் தள்ளியவருக்கு ஏற்ற வேடம்.

Dulquer Salmaan, Ritu Varma
Dulquer Salmaan, Ritu Varma

கே.எம்.பாஸ்கரனின் ஒளிப்பதிவு நம் கண்களைக் கொள்ளையடிக்கிறது. மூன்று மணி நேரத்துக்கு இருபது நிமிடங்களே குறைவான ஒரு படத்தை, அலுப்புத்தட்டாமல் பார்க்க வைத்ததில் ஜெயித்திருக் கிறார் படத்தொகுப்பாளர் பிரவீன் ஆண்டனி. மசாலா கஃபேவின் இசையில் பாடல்கள் பெரிதாய் ஈர்க்கவில்லை. ஹர்ஷவர்தன் ராமேஸ்வரின் பின்னணி இசை சில இடங்களில் கவர்கிறது. டி.சந்தானத்தின் கலை வடிவமைப்பும், நிரஞ்சனி அகத்தியனின் ஆடை வடிவமைப்பும் படத்தின் ரிச்னஸைக் கூட்டுகின்றன.

மொத்தத்தில், `கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ கலர்ஃபுல் என்று அர்த்தம்!