சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

சினிமா விமர்சனம்: லாக்கப்

லாக்கப்
பிரீமியம் ஸ்டோரி
News
லாக்கப்

சந்தானம் சேகரின் ஒளிப்பதிவு இன்னும் நேர்த்தி கூட்டியிருக்கலாம். அரோல் கரோலி. இசை ஓகே ரகம்.

ரு காவல்துறை அதிகாரியின் கொலைக்குப் பின்னால் உள்ள மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும்போது காவல்துறையில் உள்ள கறுப்பாடுகளின் முகமூடிகளும் அவிழும் கதை ‘லாக்கப்.’

சினிமா விமர்சனம்: லாக்கப்

கிழக்குக் கடற்கரைச் சாலையின் ஒரு பங்களாவில் கொலையாகிக் கிடக்கும் இன்ஸ்பெக்டர், தற்கொலை செய்து கொண்டதாகச் சொல்லப்படும் ஒரு பெண் - இந்த இரண்டு மரணங்களையும் விசாரிக்கிறார் காவல்துறை அதிகாரி ஈஸ்வரி ராவ். ஒருகட்டத்தில் இரண்டு மரணங்களுக்கும் இடையில் உள்ள பொதுவான புள்ளிகளை அடையாளம் காண்கிறார். குற்றங்களுக்கான பின்னணி என்ன, குற்றவாளிகள் யார் என்பதை இரண்டுமணி நேரத்துக்கும் குறைவான நேரத்தில் விறுவிறுப்பாகச் சொல்கிறது படம்.

ஒரு கொலையில் ஆரம்பிக்கும் விசாரணை, அடுத்தடுத்து மரணங்கள், அதற்குப் பின்னணியில் இருப்பவர்களின் குற்றங்கள் எனப் பரபரப்பான முடிச்சுகளுடன் நகர்கிறது. தொடர்ச்சியாக அடுத்தடுத்த திருப்பங்களே இந்தப் படத்தின் முக்கியமான பலம்.

சினிமா விமர்சனம்: லாக்கப்

ஈஸ்வரிராவுக்கு மீண்டும் ஒரு கம்பீரமான கம்பேக். அதிரடியான போலீஸ் அதிகாரியாக குற்றவாளிகளை வெளுத்துக்கட்டுவதாகட்டும், போலீஸ் ஸ்டேஷனுக்குள் உள்ள அரசியலை சாமர்த்தியமாக சமாளிப்பதாகட்டும், தன்னை அழுத்தமாக நிறுவுகிறார். எப்போதும் ஜாலிகேலியாகப் பார்த்த வெங்கட்பிரபுவுக்கு வித்தியாசமான, வில்லங்க வேடம். நன்றாக நடித்திருக்கிறார். படத்தின் எதிர்பாராத திருப்பங்களில் வைபவ் பங்கு முக்கியமானது. ஆனால் பல வருடமாகப் பழகின பாடி லாங்குவேஜை மாத்தலாமே பிரதர்! பூர்ணா, மைம் கோபி போன்றவர்களுக்கு குறைவான வாய்ப்புகள்தான் என்றால் வாணிபோஜனோ வாய்ப்புகளே இல்லாமல் வந்துபோகிறார்.

சந்தானம் சேகரின் ஒளிப்பதிவு இன்னும் நேர்த்தி கூட்டியிருக்கலாம். அரோல் கரோலி. இசை ஓகே ரகம்.

ஈஸ்வரிராவின் பாத்திரப்படைப்பு தொடக்கத்தில் கவனிக்கவைக்கிறது. ஆனால் அவரது பாத்திரமும் விசாரணையும் பாதியிலேயே அந்தரத்தில் நிற்க, கதை வேறு ரூட்டில் பயணிக்கிறது. தடகள வீராங்கனையாகவே இருந்தாலும் பைக் வேகத்திற்கு சைக்கிள் ஓட்டமுடியுமா, அந்த இன்ஸ்பெக்டர் ஈசிஆர் பங்களா வரும் வழியில் எங்குமே சிசிடிவி கேமரா இல்லையா, எஸ்.ஐ ‘மூர்த்தி’யைக் கொலை செய்யும் ரவுடியின் தம்பி என்ன ஆனார், படத்துக்கு ஏன் லாக்கப் என்று டைட்டில் வைத்தார்கள் என்று எக்கச்சக்க கேள்விகள்.

ஆனால் திரைக்கதையின் திருப்பங்களும் சுவாரஸ்யங்களும் குறைகளை மன்னிக்க வைக்கின்றன.

- விகடன் விமர்சனக்குழு