Published:Updated:

சினிமா விமர்சனம் : பெண்குயின்

கீர்த்தி சுரேஷ்
பிரீமியம் ஸ்டோரி
News
கீர்த்தி சுரேஷ்

சினிமா விமர்சனம்

பனிப்புகைக்கு நடுவே தொலைந்துபோன தன் சிசுவைத் தேடி அடையும் தாய்ப் பென்குயினின் பயணமும் பரிதவிப்புமே இந்த ‘பெண்குயின்.’

மலைகள் சூழ்ந்த வெளியில் ஒருநாள் சார்லி சாப்ளின் முகமூடி அணிந்த மர்ம மனிதனிடம் தன் மகனைப் பறிகொடுக்கிறார் கீர்த்தி சுரேஷ். காவல்துறையும் கீர்த்தியின் சுற்றமும் நட்பும் எவ்வளவு தேடியும் அவர் மகனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் குலையும் கீர்த்தியின் திருமண வாழ்க்கை மணவிலக்கில் முடிகிறது. ஆறு ஆண்டுகள் கழித்து அடுத்த மண வாழ்க்கையைக் கீர்த்தி சுரேஷ் தொடங்கியபின் காணாமல்போன மகன் திரும்பிக் கிடைக்கிறான். கூடவே ‘அவனை யார் கடத்தியது, கடத்தியவரிடமிருந்து எப்படித் தப்பித்தான்’ உள்ளிட்ட சில கேள்விகளும். இதனிடையே மீண்டும் அவர் மகனைக் கடத்தும் பிரயத்தனங்களும் நடக்க, வயிற்றில் சுமக்கும் இரண்டாவது குழந்தை சாட்சியாக முதல் குழந்தையைக் காப்பாற்றும் கீர்த்தியின் சாகசமே மீதிக்கதை.

சினிமா விமர்சனம் : பெண்குயின்

தேசிய விருது வாங்கிய நடிகை என்பதை காட்சிக்குக் காட்சி உணர்த்துகிறார் கீர்த்தி சுரேஷ். பயம், ஆற்றாமை, கோபம் என அவரிடம் பொங்கி வழியும் உணர்ச்சிகள்தான் படத்தின் ஆதாரம். தட்டுத்தடுமாறும் படத்தை ஒற்றையாளாய்க் கரைசேர்க்கப் போராடினாலும் அவருக்கு முழுமையான வெற்றி கிடைக்கவில்லை. கீர்த்தியின் முதல் கணவராக வரும் லிங்கா ஓகே ரகம். மாதம்பட்டி ரங்கராஜ், மதி, நித்யா க்ருபா என மற்ற யாருமே தங்கள் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கவில்லை.

பின்னணி இசையில் ஸ்கோர் செய்யும் சந்தோஷ் நாராயணன் பாடல்களில் ஏமாற்றத்தை மட்டுமே பரிசாகக் கொடுத்திருக்கிறார். மலைகளுக்குண்டான இதத்தையும் த்ரில்லருக்குண்டான பதைபதைப்பையும் ஒருசேர விருந்தாக்கி அசத்துகிறார் ஒளிப்பதி வாளர் கார்த்திக் பழனி. இன்டர்கட்களில் விரியும் திரைக்கதையை முடிந்த அளவிற்குச் செம்மை செய்திருக்கிறது அனில் க்ருஷின் படத்தொகுப்பு.

சினிமா விமர்சனம் : பெண்குயின்

த்ரில்லர் படங்களின் அடிப்படையே திரைக்கதையில் இழையோடும் புத்திசாலித்தனம் தான். ஆனால் ‘கொலையாளியைத் தேடுவதே, மறுபடி அவரிடமே குழந்தையை ஒப்படைக்கத் தானா?’ என்று நாம் குழம்பும் அளவுக்கு, ஆறாண்டுகளுக்குப் பிறகு மீட்கப்பட்ட குழந்தையைக் கையாள்வதில் கீர்த்தி சுரேஷ் காட்டும் அலட்சியம், நமக்கு பகீர் என்கிறது. குழந்தையைத் தனியே உறங்கவைக்கிறார்; ஆபத்தான இடங்களுக்கு அழைத்துச் செல்கிறார்; அடிக்கடி தொலைக்கிறார். நியாயமா தாயே?

தமிழ் சினிமா ரசிகர்கள் என்கிற முறையில் லாஜிக் ஓட்டைகளைப் பொறுத்துக்கொள்ளலாம். ஆனால் கொலையாளியோடு நடக்கும் ‘கோடீஸ்வரன்’ டைப் விளையாட்டும் அந்த க்ளைமாக்ஸ் மோட்டிவ்வும் ‘நெஞ்சு பொறுக்குதில்லையே’ ரகம்.

எல்லோரையும் சிரிக்க வைத்த சார்லி சாப்ளினே ‘பெண்குயின்’ படத்தைப் பார்த்தால், ‘என் முகமூடியைப் பயன்படுத்திய படத்தில் இவ்வளவு சொதப்பல்களா?’ என்று குலுங்கிக் குலுங்கி அழுதிருப்பார்.