தொலைந்துபோன சகோதரனைத் தேடும் டெம்ப்ளேட் கதையில், ஜீத்து ஜோசப் ஸ்டைல் த்ரில்லர் திரைக்கதையைக் கலந்தால், ‘தம்பி.’

மேட்டுப்பாளையத்தின் முக்கிய அரசியல்வாதி சத்யராஜுக்கு அளவான குடும்பம்; ஆயிரம் ஏக்கர் சொத்து. சிறுவயதிலேயே மகன் தொலைந்துபோய்விட, மொத்தக் குடும்பமும் சோகத்திலேயே காலத்தைக் கடத்துகிறது. 15 ஆண்டுகளுக்குப் பின் கோவாவில் சின்னச் சின்னத் திருட்டுகளில் ஈடுபட்டுவரும் கார்த்திதான் சத்யராஜின் மகன் எனக் காவல்துறை கண்டுபிடிக்க, மகனை வீட்டுக்கு அழைத்துவருகிறார் சத்யராஜ். அவர்தான் உண்மையில் காணாமல்போன அந்த இளைஞனா, இல்லையா என்பதில் சிலருக்குச் சந்தேகம். 15 ஆண்டுகளுக்கு முன்பும் சமகாலத்திலும் நடக்கும் பல சிக்கல்களின் முடிச்சுகளை அவிழ்க்கிறான் ‘தம்பி.’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஅலட்டிக்கொள்ளாத ‘டோன்ட் கேர்’ ஹீரோவாய் காமெடி கலந்து நடிப்பது கார்த்திக்கு பக்கெட் பிரியாணி சாப்பிடுவதுபோல... பிரித்து மேய்கிறார். இவரின் எனர்ஜிதான் படத்தை அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்த்துகிறது. பாசக்கார - கோபக்கார அக்காவாக ஜோதிகா. காட்சிகள் குறைவென்றாலும் முகத்தில் மிளிரும் உணர்ச்சிக் கலவை திரையில் தெறிக்கிறது.

கார்த்திக்கு ஜோடியாய் வரும் நிகிலா விமலுக்கு ஹீரோவைச் சுற்றிச் சுற்றி வரும் அதே பழைய கேரக்டர். கிடைக்கும் இடைவெளிகளிலெல்லாம் அசத்தி, மிரட்டுகிறார் சத்யராஜ். சீதா, இளவரசு, பாலா, ஹரீஷ் பெராடி என மற்ற கேரக்டர்களும் பக்கா பொருத்தம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
பாடல்களும் பின்னணி இசையும் ‘80களின் படம் பார்க்கிறோமா?’ என்ற உணர்வை ஏற்படுத்துகின்றன. என்னாச்சு கோவிந்த் வசந்தா சாரே? ஆர்.டி ராஜசேகரின் ஒளிப்பதிவு ஓகே ரகம். வி.எஸ். விநாயக்கின் படத்தொகுப்பு நெடுந்தொடர் உணர்வையே கொடுக்கிறது.

ட்விஸ்ட், அதற்குள் ஒரு ட்விஸ்ட் என நம்மை யோசிக்கவைத்துக்கொண்டே இருக்கும் திரைக்கதை மட்டுமே படத்தின் பெரிய பலம். இவரா, அவரா எனக் கணிப்பதிலேயே இரண்டாம்பாதி வேகமாகச் செல்கிறது. ஆனால் முதல்பாதி முழுக்க ஏற்கெனவே பார்த்துச் சலித்த காட்சிகள். அதுவும் ஆமை வேகத்தில் நகர்வதுதான் சிக்கல். ஜீத்து ஜோசப்பின் லாஜிக்குகளை மறக்கடிக்கும் மேஜிக் இந்தப் படத்தில் மிகக்குறைவு.
‘தம்பி’யின் புத்திசாலித்தனம் சூப்பர். ஆனால், அந்தத் த்ரில் மட்டும் மிஸ்ஸிங்!