நிக்டோபோபியா என்னும் இருட்டைக் கண்டு அஞ்சும் நோயால் பாதிக்கப்பட்ட தடயவியல் நிபுணர் கண்டறியும் விநோதமான கொலைவழக்குதான் `வி1.’
லிவிங் டுகெதர் உறவில் வாழும் இளம்பெண் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். கொலை செய்தவர் யார் என்பதைக் கண்டுபிடிக்கப் போராடுகிறது காவல்துறை. நிக்டோபோபியா நோயால் பாதிக்கப்பட்டவர் அக்னி (ராம் அருண் கேஸ்ட்ரோ). தடயவியல் துறையில் கில்லாடி அதிகாரி. அவரும் இன்னொரு அதிகாரியான லூனா (விஷ்ணுபிரியா)வும் இணைந்து இளம்பெண் கொலை குறித்து துப்புதுலக்க ஆரம்பிக்கிறார்கள். டிடெக்டிங் படங்களுக்கே உரிய பாணியில் கொலையாளி இவராக இருக்குமோ அவராக இருக்குமோ என எல்லோர்மீதும் சந்தேகப்பட்டு, கடைசியில் யாருமே எதிர்பார்க்காத அப்பாவி ஒருவர்தான் கொலையாளி என்பதாகப் படம் முடிகிறது!
நடிகராகப் பல படங்களில் முத்திரை பதித்த பாவல் நவகீதனுக்கு இயக்குநராக இது முதல்படம். ஒரு துப்பறியும் கதையில் அரசியல் பேசித் தனித்துவம் காட்டியிருக்கிறார். கொலைவ ழக்குகளில் தடயவியல் நுணுக்கங்கள் எப்படி உதவுகின்றன என்பதைப் பதிவுசெய்திருப்பது பாராட்டுக்குரிய பக்கா டீட்டெயிலிங்.

வெளிநாட்டு வெப்சீரிஸ் களைப்போல வெவ்வேறு மனிதர்களின் பார்வைகளில் ராக்கெட் வேகத்தில் தொடங்குகிற படம்… போகப்போக, படமாக்கலாலும் தொய்வான திரைக்கதையாலும் தள்ளுவண்டியாகத் தளர்ந்துவிடுகிறது! பார்வையாளருக்குக் கண்ணாமூச்சி ஆட்டம் காட்ட வேண்டிய புதிர்களெல்லாம் கண்ணைக் கட்ட வைக்கின்றன. முக்கியமான அரசியலைப் பேச நினைத்த வகையில் ஓகே. ஆனால் அதற்கான காட்சிகளை இன்னும்கூட ஆழமாகப் படம்நெடுக விதைத்திருக்க வேண்டுமே…
அலட்டிக்கொள்ளாத முகபாவனைகளோடு ராம் அருண் கேஸ்ட்ரோவுக்கு நல்ல அறிமுகம். காதலெல்லாம் இல்லாமல் மிடுக்கான காவல்துறை அதிகாரியாக விஷ்ணுபிரியாவின் பாத்திர உருவாக்கமும் அவருடைய நடிப்பும் நிச்சயம் பாராட்டத்தக்க முயற்சி! படம் நெடுக ஏராளமான புதுமுகங்கள் என்பதும் அவர்களுடைய சற்றே மிகையான நடிப்பும் பல இடங்களில் மைனஸ். அளவான பர்ஃபாமென்ஸ் இருந்திருந்தால் க்ளைமாக்ஸ் அதிரவைத்திருக்கும். இசையும் ஒளிப்பதிவும் சுமார் ரகம்.

போலீஸ் விசாரணை அறையில் வைத்துப் பெண்களிடம் ஜொள்ளுவிடும் ‘யோ யோ பாய்’ கேரக்டரெல்லாம் ரொம்ப ஓவர் பாஸ். உளவியல் சிகிச்சையின்போதான மனக்காட்சிகள், அக்னியின் ப்ளாஷ் பேக் காட்சிகள் சொல்லப்பட்ட அதே கச்சிதத்தில் முழுப்படமும் சொல்லப்பட்டிருந்தால், விறுவிறுப்பு கூடியிருக்கும்.
கேஸ் பிடித்த வகையில் ஓகே. ஆனால், விசாரணையை இன்னும் நேர்த்தியாகச் செய்திருக்கலாம்.