குட்டிப்புலி

சசிகுமார், லட்சுமி மேனன் நடிப்பில், புதுமுக இயக்குனர் முத்தையா இயக்கி இருக்கும் படம் 'குட்டிப்புலி'. ஜிப்ரான் இசையமைக்க, VILLAGE PICTURES தயாரித்து இருக்கிறது.

ராஜபாளையத்தில் வாழ்ந்த குட்டிப்புலி என்ற ஒரு மனிதரின் உண்மையான கதையை தழுவி, சுவாரஸ்யமாக திரைக்கதை அமைத்து, உருவாக்கி இருக்கிறார்கள்.

மீண்டும் 'சுந்தரபாண்டியன்' கூட்டணியான சசிகுமார், லட்சுமிமேனன் கூட்டணி என்றவுடன் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. அதுமட்டுமன்றி படத்தினை பற்றிய எந்த ஒரு புகைப்படமும், வெளியாகமல் பார்த்துக் கொண்டது படக்குழு.

முதன் முறையாக 'குட்டிப்புலி' படத்தில் கம்பு சுற்றும் விளையாட்டு வீரராகக் நடித்து இருக்கிறார் சசிகுமார். இதற்காக ராஜபாளையத்தைச் சேர்ந்த பிரபல சிலம்பு வீரரிடம் இரண்டு மாதங்கள் பயிற்சி எடுத்திருக்கிறார்.

இப்படம் குறித்து சசிகுமாரிடம் கேட்டதற்கு "'ராஜபாளையம் ஏரியாவில் வாழ்ந்த நிஜமான கேரக்டர்தான் குட்டிப்புலி. அதே ஏரியாவில் படப்பிடிப்பு நடக்கும் போது வேடிக்கை பார்க்கிறவங்ககூட 'சார், கைய நல்லா ஏத்திவிடுங்க... மீசையை குட்டிப்புலி மாதிரியே திருகிவிடுங்க’னு எனக்கு டிப்ஸ் கொடுத்தாங்க.

கைலியும் சட்டையும், சட்டையே பண்ணாத வாழ்க்கையுமாகத் திரியும் பாத்திரம். கட்டுக்கு அடங்காத பையனோட அம்மாவா தெய்வானைங்கிற பாத்திரத்தில் சரண்யா. படத்துக்காக மட்டும் இல்ல... உண்மையாவே உள்ளன்போடு என்னை நேசிக்கிற தாய் அவங்க. 'குட்டிப்புலி’யில் ஹீரோவே அவங்கதான்.

திருவிழா, ஊர்வம்பு, சண்டை சச்சரவுன்னு பக்கா கிராமத்துக் கதையில், 'சுந்தரபாண்டியன்’ படத்தோட ஞாபகமே வராத அளவுக்கு முடி தொடங்கி அடி வரைக்கும் முழுசா என்னை மாத்திருக்கான் இயக்குனர் முத்தையா" என்றார். படம் முழுக்க வேட்டி, கைலியில் வரும் சசிகுமார், ஒரே ஒரு காட்சியில் மட்டும் பேன்ட் சர்ட்டில் வருகிறார். தியேட்டரே சிரிப்பொலியில் நனைகிற காட்சியாம் அது.

இப்படத்திற்கு இருந்த எதிர்பார்ப்பை பார்த்து, VILLAGE PICTURES நிறுவனத்திடம் இருந்து சன் பிக்சர்ஸ் மொத்த உரிமையையும் வாங்கிவிட்டது. அவர்களிடம் இருந்து வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலின் வாங்கி இருக்கிறார். அவர்களிடம் இருந்து NSC ஏரியா உரிமையை ஏ.ஜி.எஸ் நிறுவனம் வாங்கி, அந்த ஏரியாவில் மட்டும் சுமார் 90 திரையரங்குகளில் வெளியிட இருக்கிறது.

90 திரையரங்குகள் என்பது ரஜினி படங்களுக்கு இணையானது என விவரம் அறிந்தவர்கள் வாயை பொளக்குகிறார்கள். அதுமட்டுமன்றி சசிகுமாருக்கு இருக்கும் மார்க்கெட்டை படம் வெளியாகும் முன்பே வியாபாரத்தின் மூலம் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி இருக்கும் படம் 'குட்டிப்புலி'.

இவ்வாறு பல ப்ளஸ்கள் இருக்கும் 'குட்டிப்புலி' படம் மே 30ம் தேதி வெளியாக இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!