தீயா வேலை செய்யணும் குமாரு

இயக்குனர் சுந்தர்.சியும் யு.டி.வி மோஷன் பிக்சர்ஸும் இரண்டாவதாக இணையும் படம் ‘’தீயா வேலை செய்யணும் குமாரு’’. ஏற்கனவே ’கலகலப்பு’ படத்தில் இணைந்தவர்கள், இப்போது குஷ்பூ சுந்தரின் அவினி சினிமாக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த படத்தையும் தயாரிக்கிறார்கள்.

நடிகர் சித்தார்த், ஹன்சிகா மோத்வானி, சந்தானம், கணேஷ் வெங்கட்ராம் நடிக்க இயக்குனர் சுந்தர்.சி இயக்கும் 27 ஆவது படம் இது.

காதலித்து திருமணம் செய்யும் குடும்பத்தில் இருந்து வந்த ஒரு இளைஞன், ஐ.டி. கம்பெனியில் வேலை செய்கிறான், உடன் வேலை பார்க்கும் ஹீரோயினை காதலிப்பவனுக்கு துணை புரிகிறான் அவனது நண்பன்.  அந்த காதல் வெற்றி பெற்றதா, இல்லையா? என்பதை காதல், காமெடியுடன் ரொமான்ஸ் கலந்தும் சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

வழக்கம் போல சந்தானம் ஹீரோவின் நண்பன் தானே என்றால் ’இல்லை, இதில் ஒரு ட்விஸ்ட் வைத்திருக்கிறேன், அது ரொம்ப சஸ்பென்ஸ்’ என்கிறார் சுந்தர்.சி.

தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் தயாராகி வரும் படத்திற்கு தெலுங்கில் ‘சம்திங் சம்திங்’ என பெயரிடப் பட்டுள்ளது. தெலுங்கு வெர்ஷனில் சந்தானத்திற்கு பதில் தெலுங்கு நடிகர் பிரமானந்தா நடிக்க, நடிகர் விஷாலும், சமந்தாவும் நடிகர், நடிகைகளாகவே இரு மொழிகளிலும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்கள்.

கடந்த ஜனவரி மாதம் தொடங்கிய படப்பிடிப்பு, சுந்தர்.சியின் செண்டிமெண்டல் கும்பகோணம், சென்னை, ஹைதராபாத் என ஐந்து மாதங்களில் தயாராகி விட்டது. பாடல் காட்சிக்காக ஜப்பானிற்கும் சென்று வந்திருக்கிறார்கள் படக்குழுவினர்.

’எங்கேயும் எப்போதும்’ படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் சத்யா இந்த படத்திற்கும் இசையமைக்க பாடலாசிரியர் பா.விஜய் அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளார்.

’சூதுகவ்வும்’ படத்திற்கு வசனம் எழுதிய இயக்குனர் நலன் -ஸ்ரீ  கூட்டணி இந்த படத்திற்கும் வசனம் எழுதியுள்ளனர். ’பீட்சா’ படத்தின் கேமரா மேன் கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஆடியோ ரிலீஸ் அன்று பேசிய சுந்தர்.சி ‘சித்தார்த் என் தம்பி மாதிரி, நிறைய அறிவுரைகள் கூறினேன். குஷ்பூவிற்கு அடுத்து உருவம், நடிப்பு என எல்லாவற்றிலும் என்னை கவர்ந்தவர் ஹன்சிகா தான். ரொம்ப சின்சியர்’ என  அவரை குட்டி குஷ்பூ என்று சொல்வதில் தவறே இல்லை என சொல்ல எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது படத்திற்கு.

வழக்கம் போல இதுவும் காமெடி படம் தானா என்றால்  ”அப்படியில்லை. நான் பண்ணின ‘கலகலப்பு’ விழுந்து விழுந்து சத்தம் போட்டு சிரிக்கிற மாதிரியான படம். ’இதுல எப்படின்னா படம் ஓடுற இரண்டரை மணி நேரமும் ஆடியன்ஸ்கிட்ட ஒரு மென்சிரிப்பு வந்துட்டே இருக்கும். அதாவது ‘ஃபீல் குட் மூவி’னு சொல்வாங்கள்ல, அப்படியொரு படம் பண்ணணும்னு ரொம்ப நாள் ஆசை. அதுக்கேற்ற கதை இப்பதான் கிடைச்சது. உடனே பண்ணிட்டேன். தமிழுக்கு இது கொஞ்சம் புதுசுதான்.”என்கிறார்.

ட்ரெயிலர், பாடல் என ஏற்கனவெ ரசிகர்கள் எதிர்பார்ப்பை அதிகரித்த ’தீயா வேலை செய்யணும் குமாரு’ தில்லு முல்லு படம் ரிலீசாகும் அதே ஜூன் 14 அன்று தியேட்டர்களில் ரிலீசாகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!