சிங்கம் 2 | சிங்கம் 2, சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா, சந்தானம், ஹரி

வெளியிடப்பட்ட நேரம்: 16:55 (11/06/2013)

கடைசி தொடர்பு:16:55 (11/06/2013)

சிங்கம் 2

2010ஆம் ஆண்டு வெளியான சிங்கம் பார்ட் ஒன்னில் தூத்துக்குடி, சென்னை ரவுடிகளை பின்னி பெடலெடுத்த சூர்யா, இந்த முறை சர்வதேச ரவுடிகளை ரவுண்டு கட்ட போகிறார்.

சிங்கம் பார்ட் ஒன்னின் அதே டீமான சூர்யா, இயக்குனர் ஹரி, அனுஷ்கா, விவேக் என களமிறங்க, இந்த முறை ஹீரோயின்களின் எண்ணிக்கை ஒன்று கூடுகிறது. அனுஷ்காவுடன் ஹன்சிகா மோத்வானியும் ஜோடி சேர, நடிகை அஞ்சலியும் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருக்கிறார். காமெடிக்கு விவேக்குடன் சந்தானமும் கூட்டணி சேர பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது சிங்கம்- 2.

கடந்த முறை வில்லனாக சூர்யாவோடு முட்டி மோதிய பிரகாஷ் ராஜ் இந்த முறை மிஸ்ஸிங். அவருக்கு பதிலாக வில்லனாகி இருப்பவர் ஹாலிவுட் நடிகர் டேனி சபானி. நாசர், ராதாரவி, நிழல்கள் ரவி, தலைவாசல் விஜய், ரஹ்மான், மன்சூர் அலிகான், மனோரமா என கடந்த கால சினிமா பட்டாளம் ஒன்று இந்த படத்தின் மூலம் இரண்டாவது பிரவேசம் எடுக்கிறார்கள்.

தூத்துக்குடி, திருநெல்வேலி, காரைக்குடி, கேரளா  என நடந்த ஷூட்டிங் சண்டைக் காட்சிகளுக்காகவும், படத்தின் சில அதிரடியான முக்கிய காட்சிகளுக்காகவும் மலேசியா, கென்யா, தென் ஆப்பிரிக்காவின் டர்பன், கேப் டவுன், டோபர்க் போன்ற இடங்களுக்கும் சென்று வந்துள்ளது.

முதல் பாகத்திற்கு இசையமைத்த தேவி ஸ்ரீ பிரசாத்தே இந்த பாகத்துக்கும் இசையமைக்க எல்லா பாடல்களையும் பாடலாசிரியர் விவேகா எழுதியுள்ளார். பெரும்பாலும் எல்லா பாடல்களும் மசாலா ரகத்திலேயே இருக்க ‘புரியவில்லை’ பாடலும், ‘கண்ணுக்குள்ளே’ பாடலும் ஓ.கே ரகத்தில் ஏற்கனவே நெட்டில் ஹிட் அடித்து விட்டன.

பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பாக படத்தை தயாரித்திருக்கிறார் எஸ்.லஷ்மணன். படத்தின் டீஸர் ரிலீஸான மூன்றே நாட்களில் 10 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்களால் பார்க்கப் பட்டு ஹிட் ஆனது.

தமிழ் தவிர்த்து தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் டப் செய்யப் பட்டு ரிலீசாகிறது சிங்கம் -2.  ஜூன் 28 படம் ரிலீஸ் என சொல்லி வந்த நிலையில் தெலுங்கில் ரவி தேஜா - ஸ்ருதி ஹாசன் நடிப்பில் தயாராகி உள்ள ’பலுபு’ படமும் 28ந் தேதி ரிலீஸ் ஆவதால் பட ரிலீஸ் தேதி இன்னும் தள்ளி போகலாம் என சொல்லப் படுகிறது.

’சிங்கம் - 2 உருவாகும் என்று நான் நினைத்துக் கூட பார்க்க வில்லை, ஆரம்பித்த வேகத்தில் தரமாக முடித்து விட்டோம். இதற்காக எல்லோருடைய உழைப்பும் மிக பிரமிப்பானது. இயக்குனர் ஓ.கே சொன்னால் மூன்றாம் பாகத்தில் நடிக்கவும் தயார். மூன்றாம் பாகம் கண்டிப்பாக வரும் என்றே நினைக்கிறேன்’ என சூர்யா ஆடியோ வெளியிட்டு விழாவில் கூற படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு இன்னும் அதிகரித்திருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close