பட முன்னோட்டம் : மரியான் | மரியான், தனுஷ், பார்வதி, பரத்பாலா, ஏ.ஆர்.ரஹ்மான்

வெளியிடப்பட்ட நேரம்: 14:56 (16/07/2013)

கடைசி தொடர்பு:14:56 (16/07/2013)

பட முன்னோட்டம் : மரியான்

தனுஷ் - பார்வதி நடிப்பில், பரத்பாலா இயக்கி இருக்கும் படம் 'மரியான்'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, மார்க் கோனிக் என்ற பெல்ஜியம் ஒளிப்பதிவாளர் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். ஆஸ்கர் நிறுவனம் இப்படத்தினை பிரம்மாண்டமாகத் தயாரித்து இருக்கிறது.

'மரியான்' படப்பிடிப்பு தொடங்கியது முதலே இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. காரணம் இயக்குனர் பரத்பாலா தான். ஏ.ஆர்.ரஹ்மானை வைத்து, 'தாய் மண்ணே வணக்கம்’ என்று 'வந்தே மாதரம்’ ஆல்பம் அடித்து இந்தியாவையே உணர்ச்சிவசப்பட வைத்தவர் பரத்பாலா. முதன் முதலாக தனுஷை நாயகனாக வைத்து 'மரியான்' படத்தினை இயக்கி இருக்கிறார்.

'மரியான்' படம் குறித்து இயக்குனர் பரத்பாலா, " 'மரியான்’ என்றால் மரணம் இல்லாதவன்னு அர்த்தம். மீனவர்கள் வாழ்க்கைதான் கதை. கன்னியாகுமரி, ஆப்பிரிக்கானு ஒண்ணுக்கொண்ணு சம்பந்தம் இல்லாத இடங்களில் பயணிக்கும் கதை. ஆசியாவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் என்ன முடிச்சு? இதுதான் திரைக்கதை ட்ரீட்மென்ட். பேரலல், நான்-லீனியர், அது... இதுனு குழப்பிக்காம தெளிவா, சிம்பிளா ஒரு கமர்ஷியல் கதை. அவ்வளவுதான் படம். கதை நிச்சயம் புதுசா இருக்கும். அட்லஸ்லகூட நீங்க பார்க்காத இடங்களுக்கு ஜாலி டூர் போயிட்டு வந்த மாதிரி இருக்கும் 'மரியான்’ '' என்று தெரிவித்து இருக்கிறார்.

படத்தின் FIRST LOOK POSTER, TEASER என எதுவுமே வெளியிடாமல் இருக்க, படத்திற்கு எதிர்பார்ப்பு கூடிக் கொண்டே போனது. முதன் முதலாக படத்தின் TEASER-ஐ வெளியிட்ட போது, மிகப்பெரிய எதிர்பார்ப்பு கிடைத்தது.

தனுஷின் தத்ரூப நடிப்பு, ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை என இளைஞர்கள் மத்தியில் 'மரியான்' பேசும் பொருளாக மாறியது. அதனைத் தொடர்ந்து வெளியான TEASERS, டிரெய்லர் என அனைத்துமே மக்களிடம் ஹிட்.

ஏ.ஆர்.ரஹ்மானின் வெரைட்டியான பாடல்கள் இளைஞர்களின் ரிங் டோனாக மாறியது. 'கடல் ராசா', 'இன்னும் கொஞ்ச நேரம்', 'நெஞ்சே எழு', 'சோனாப்பீரியா', 'நேற்று அவள் இருந்தாள்' என அனைத்து பாடல்களுமே ஹிட்.

'மரியான்' படத்தினைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு முதலில் U/A சான்றிதழ் அளித்தார்கள். இதனை படக்குழு சிறிதும் எதிர்பார்க்கவில்லை. உடனே படத்தில் சிறு மாற்றங்கள் செய்து மீண்டும் சென்சாருக்கு அனுப்பினார்கள். உடனே 'U' சான்றிதழ் வழங்கியது சென்சார் குழு.

சென்சார் முடிந்தவுடன் படம் எப்போது வெளியாகும் என்று பல்வேறு தேதிகள் குறிக்கப்பட்டன. இறுதியாக ஜுலை 19-ம் தேதியை தேர்வு செய்து இருக்கிறது 'மரியான்' படக்குழு.

தயாரிப்பாளரான ஆஸ்கர் ரவிச்சந்திரன் படத்தினை அதிக திரையரங்குகளில் வெளியிடும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். எப்போதுமே ரேடியோ, டிவி என பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்தும் ஆஸ்கர் நிறுவனம், 'மரியான்' படத்திற்கு அந்தளவிற்கு விளம்பரம் செய்யவில்லை. 'படத்தின் கதை அந்த மாதிரி. மக்களே இப்படத்தினை விளம்பரப்படுத்திக் கொள்வார்கள்' என்று முடிவு செய்து இருக்கிறதாம்.

ஏ.ஆர்.ரஹ்மானின் வித்தியாசமான இசை, தனுஷின் நடிப்பு, பரத்பாலாவின் இயக்கம் என அனைத்துமே 'மரியான்' படத்திற்கு ப்ளஸ்ஸாக இருக்கின்றன. அதுமட்டுமன்றி மொத்த படக்குழுவும் படத்தினை டிவிட்டர் இணையத்தில் விளம்பரப்படுத்தி வருகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close