வை ராஜா வை - பட முன்னோட்டம்!

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் இரண்டாவது படம் “ வை ராஜா வை”. கெளதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த், டாப்ஸி, சதீஷ், இயக்குநர் வசந்த் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிக்கின்றனர். மே 1ல் இப்படம் வெளியாகவிருக்கிறது.

மலையாளம், கன்னட படங்களில் பிஸியாக இருந்த டேனியல் பாலாஜி நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். ’வேட்டையாடு விளையாடு’, ’பொல்லாதவன்’, படத்திற்குப் பிறகு பேசப்படும் வில்லனாக இப்படத்தில் நடித்திருக்கிறார் என்று படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்தில் மற்றொரு ஸ்பெஷல் என்னவென்றால், ஒரே படத்தில் ஐந்து இயக்குநர்கள் பணிபுரிந்திருகின்றனர். விஐபி படத்தின் இயக்குநர் வேல்ராஜ், முன்னாள் இயக்குநர் மனோபாலா, எஸ்.ஜே.சூர்யா, அப்பு, ரிதம் போன்ற படங்களை இயக்கிய வசந்த் இவர்களுடன் ஐஸ்வர்யா தனுஷ்.

இவர்களில் வேல்ராஜ் படத்தில் ஒளிப்பதிவாளராக இருக்கிறார், மனோபாலா மற்றும் வசந்த் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர், மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஒரு பாடலுக்கு நடனமாடியிருக்கிறார் என்பது கூடுதல் செய்தி.

இப்படத்தைப் பற்றி இயக்குநர் ஐஸ்வர்யா தனுஷ் கூறும் போது, “ படம் முழுக்க பெரிய ஸ்டார்ஸ் தான் நடிக்கிறாங்க. அட்வெஞ்சர் த்ரில்லர் படமாக இருக்கும். விடுமுறைக்கான ஸ்பெஷல் கமர்சியல் படமா நிச்சயம் வை ராஜா வை படம் இருக்கும். அதுமட்டுமில்லாம, தனுஷ் பண்ண கதாபாத்திரத்துலயே எனக்கு ரொம்ப பிடிச்சது புதுப்பேட்டை கொக்கி குமாருதான். இந்தப் படத்துலயும் ஒரு காட்சிக்கு அவரை வைச்சு பண்ணலாம்னு தோணுச்சு. ஏன் விடணும்னு அவர்கிட்டயே கேட்டேன். அப்போ தமிழ் - இந்தினு ரொம்ப பிஸியா இருந்த நேரம். 5 மணி நேரத்துல உங்களை விட்டுருவேன்னு சொன்னேன். உடனே படப்பிடிப்புக்கு ஓகே சொன்னார். படப்பிடிப்பே மிரட்டலா போச்சி. கொக்கி குமார திரும்ப கொண்டுவர்றதுல எனக்கு சந்தோஷமே, தனுஷூம் படத்தில் இருப்பதால் இன்னும் எதிர்பார்ப்பு கூடியிருக்கு. கண்டிப்பா இந்த எதிர்பார்ப்பை நிறைவு செய்யும்” என்று கூறியுள்ளார்.

படத்தில் தனுஷ் பாடல் எழுதி இளையராஜா ஒரு பாடல் பாடியுள்ளார். தனுஷும், ஐஸ்வர்யாவும் கெஞ்சாத குறையா கேட்டதுனால பாடல் பாட சம்மதித்தாராம் இளையராஜா.

இப்போ படத்தோட கதை, ஐடியில் வேலை செய்யுற மிடில் க்ளாஸ் பையனா கார்த்திக் (கெளதம் கார்த்திக்). அவனுக்கு உள்ள மனநிலை, அதுனால ஏற்படுற பிரச்னை அதுலருந்து எப்படி தப்பிக்கிறாங்கிறது தான் மீதி கதை.

யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் ஐந்து பாடல்கள் இப்படத்தில் உள்ளன. கானாபாலா மற்றும் ஹிப்ஹாப் தமிழா இருவரும் பாடல் எழுதி பாடியும் உள்ளனர். வி.டி.விஜயன் படத்தொகுப்பை கவனிக்க கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரித்திருக்கிறார். உத்தமவில்லன் மற்றும் வை ராஜா வை இரண்டுமே மே 1ல் வெளியாகவிருப்பதால் படத்திற்கான போட்டியும் எதிர்பார்ப்பும் கூடியிருக்கிறது.படத்தின் நீளம் இரண்டு மணி நேரங்களுக்கு இரண்டு நிமிடங்கள் குறைவு என்பதால் படத்தின் எடிட்டிங் நறுக்கென இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம், இப்படத்தை மே 1ம் தேதி வெளியிடுகிறது. மேலும் இதே நாளில் வெளியாக உள்ள ‘உத்தம வில்லன்’ படத்தையும் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் வெளியிட உள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!