டிமான்டி காலனி - பட முன்னோட்டம்

சென்னையில் ஆழ்வார்பேட்டையில் உள்ள 'டிமான்டி காலனி’ என்ற பகுதியில் பேய்கள் நடமாட்டம் இருப்பதாக, பல வருடங்களாக நம்பப்பட்டு வருகிறது. இதை மையமாக வைத்து உருவாகியிருக்கும் திகில் படம் தான் அருள்நிதி நடிப்பில் நாளை வெளியாக உள்ள 'டிமான்டி காலனி’ .

அருள்நிதி, `சூது கவ்வும்’ ரமேஷ் திலக், சனத், அபிஷேக், சிங்கம்புலி, மதுமிதா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்தை அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். பேய் படங்கள் என்றாலே இப்போதெல்லாம் காமெடி ட்ராக்கில் தான் வந்துகொண்டிருக்கிறது. இந்த படம் எப்படி தனித்துவமாக இருக்கும் என இயக்குநரிடம் கேட்டபோது, இப்போதுவரும் காமெடி பேய் படங்கள் போல் இல்லாமல் எப்போதும் மாதிரியான பயமுறுத்தும் பேய் படமாகவும், ‘யாவரும் நலம்’, 13ம் நம்பர் வீடு’, ஈரம்’ பாணியில் இந்த படத்தையும் இணைத்துக் கொள்ளலாம் எனக் கூறினார்.

சென்னையின் ஆழ்வார்பேட்டையில் உள்ள டிமான்டி காலனி இப்போதும் பேய் வீடுகள், பேய் பங்களா என நகரின் நடுவில் இப்படி பயமுறுத்தும் ஒரு ஏரியா இருந்துகொண்டுதான் இருக்கிறது.இரவில் அங்கே வீடுகளில் இருந்து வித்யாசமான ஒலிகள் கேட்கும், கதவுகள் தானாக திறந்து மூடும் என இயக்குநர் திகிலாகவே அறிமுக படுத்திக் கொண்டவர் படம் குறித்து பேசுகையில், இந்த படம் முழுக்க முழுக்க ஹாரர் மட்டுமே.

இந்த ஏரியாவில் தங்கும் அருள்நிதி அவரது நண்பர்கள், அவர்களை சுற்றிய கதையாக படம் நகரும். படத்திற்கு பெயரும் காலனியின் பெயரையே வைத்துவிட்டோம் எனக் கூறும் அஜய்  ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் அருள்நிதியும் ஒரு கட்டத்தில் பேயாக மாறுகிறார் என்பதுதான் சிறப்பு. 

படத்துக்கு மியூசிக் கெபா ஜெரிமியா. மொத்தம் 5 பாடல்கள். அதில் டம்மி பீசு பாடலை டி.இமானும், வாடா வா மச்சி பாடலை அனிருத்தும் பாடியுள்ளனர். படத்திற்கு ஒளிப்பதிவு அரவிந்த் சிங். இப்போது வந்துகொண்டிருக்கும் காமெடி பேய்படங்களுக்கு நடுவில் உண்மையில் திகிலாக இருக்கும் என சொல்லப்படும் ’டிமான்டி காலனி’ ஜெயிக்குமா என்பது மே 22ம் தேதி தெரிந்துவிடும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!