பாகுபலி - பட முன்னோட்டம்!

 ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன் , சத்யராஜ், நாசர், சுதீப் உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரம்மாண்ட படமாக உருவாகி வருகிற வெள்ளியன்று தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என நான்கு மொழிகளில் வெளியாக உள்ள படம் ‘பாகுபலி’. படத்திற்கு இசை எம்.எம். கீரவாணி. ஒளிப்பதிவு கே.கே.செந்தில் குமார். இந்த படத்திற்கு ரசிர்கள் மட்டுமின்றி இந்திய திரையுலகமே காத்திருப்பில் உள்ளனர். 

சரி அப்படி என்ன இருக்கிறது படத்தில் , 100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட். பிரம்மாண்ட கிராபிக்ஸ் வேலைகள் , பல போர் காட்சிகள் என படம் கண்களுக்கு விருந்தாக இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இந்த படம் தமிழ் சினிமா ரசிர்களுக்கு ரொம்ப முக்கியமான படம். ஏனெனில் இந்தப் படம் தமிழ் மன்னன் ’பாகுபலி’யின் கதை என்பதுதான் சிறப்பு. 

அதே போல் படத்தில் அனுஷ்கா, தமன்னா, ராணா, ரம்யா கிருஷ்ணன் , நாசர், சத்யராஜ் என பலரும் தமிழ் சார்ந்த , தமிழுக்கு அறியப்பட்ட முக்கிய நடிகர்கள் இந்த படத்தில் மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இந்தியாவின் முன்னணி இயக்குநரான ராஜமௌலி இயக்கிய படம் என்பது அடுத்த சிறப்பு.

ஆர்கா மீடியா வொர்க்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை இந்தியில் கரண் ஜோஹரின் தர்மா புரடக்‌ஷன்ஸ் வெளியிடுகிறது. அதே போல் தமிழில் ஸ்டூடியோ க்ரீன், உவி கிரியேஷன்ஸ், ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் இந்த படத்தை 500 திரையரங்குகளில் வெளியிடுகிறது. இந்த படத்தின் அனைத்து மொழி வெர்ஷன்களுக்கும் தணிக்கை தரப்பு U/A கொடுத்துள்ளது. காரணம் அதிக போர் , யுத்தக் காட்சிகள் இருப்பதே காரணம். கேரளாவின் அதிரபில்லி அருவி, ஓர்வாக்கல் பாறை பூங்கா , மகாபாலேஷ்வர் நகரம் என இந்தியாவின் முக்கிய இடங்கள் பலவற்றில் படப்பிடிப்புகள் நடந்துள்ளன.  

இதுபோன்ற வரலாற்று கதைகள் புத்தகங்களில் படிப்பதைக் காட்டிலும் இப்படி படமாக பார்க்கையில் இன்றைய தலைமுறையினருக்கு அவர்களுக்கு பிடித்த விதத்தில் சென்று நமது இந்திய வரலாறுகள் சேரும் என்பதே உண்மை. இப்படி பட்ட படங்கள் நம் இந்தியாவில் 5 வருடங்களுக்கு ஒருமுறை வருவதே கொஞ்சம் அரிதுதான். 

இதன் காரணமோ என்னமோ படத்தின் டிக்கெட் புக்கிங்குகள் ஆரம்பித்தவுடனேயே தமிழின் பெரிய நடிகர்கள் படத்திற்கு நிகராக அனைத்து டிக்கெட்டுகளும் திங்கள் வரை புக்காகி விட்டன. இந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களில் மட்டும் இயக்குநர் உள்ளிட்ட 25 பேர் தேசிய விருது பெற்றவர்கள் என்பது கூடுதல் சிறப்பு. 

படத்தின் நீளம் 2 மணி நேரம் 38 நிமிடங்கள் 41 நொடிகள் என்பது அடுத்த ஆச்சர்யம். ஏனெனில் இதுபோன்ற வரலாற்று அடிப்படைக் கொண்ட படங்கள் என்றாலே கொஞ்சம் அதிக நீளமாக இருக்கும் உதாரணத்திற்கு இந்தியில் வெளியான ‘ஜோஹ்தா அக்பர்’ படத்தின் நீளம் மூன்று மணிநேரம் 33 நிமிடங்கள். இரண்டு இடைவேளைகள் பல திரையரங்குகளில் விடப்பட்டன. 

அப்படி இருக்கையில் இந்த படம் அந்த விஷயத்திலும் கொஞ்சம் நுணுக்கமாகவே கையாளப்பட்டுள்ளது. எதுவாக இருப்பினும் ‘ஈ’ யை வைத்து இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்த ராஜமௌலியின் மேஜிக் இந்த படத்தில் எப்படி இருக்கும் என்பதைக் காணவே சினிமாவை எப்போதாவது பார்க்கும் ரசிகர்கள் கூட இந்த படத்திற்காக காத்திருக்கிறார்கள். பார்ப்போம் படம் வெளியாக இன்னும் இரு தினங்களே உள்ளன. அனைத்தும் ஜூலை 10ம் தேதி தெரிந்துவிடும்.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!