இந்த வாரம் என்ன பார்க்கலாம்? படங்கள்.. ஒரு பார்வை #MoviePreview | Friday Movies Preview #MoviePreview

வெளியிடப்பட்ட நேரம்: 13:03 (24/03/2016)

கடைசி தொடர்பு:13:54 (24/03/2016)

இந்த வாரம் என்ன பார்க்கலாம்? படங்கள்.. ஒரு பார்வை #MoviePreview

மார்ச் 25 அன்று மூன்று தமிழ்ப்படங்கள் வெளியாகின்றன. பெரிய நடிகர்கள், பெரிய செலவு ஆகியனவற்றைக் கொண்ட பெரிய படத்தோடு,2  சின்ன பட்ஜெட் படங்களும் வெளியாகவிருக்கின்றன. அப்படங்களைப் பற்றிய முன்னோட்டம்.

தோழா
 
கார்த்தி, நாகார்ஜுனா, தமன்னா நடிப்பில் நாளை வெளிவர இருக்கும் படம் ‘தோழா’. வம்சி இயக்கியுள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவிருக்கிறது.‘தி இன்டச்சபிள்ஸ்’ என்ற ஒரு ஃப்ரெஞ்ச் படத்தின்  ரீமேக்தான் இந்தப்படம். வழக்கம்போல அந்தப் படத்தின் மையக்கதையை எடுத்துக்கொண்டு நமக்கேற்ப முழுமையாக மாற்றியிருக்கிறோம் என்று சொல்கிறார்கள்.

நட்பின் ஆழம் என்ன என்பதற்கான பதிலை 'தோழா' திரைப்படம் கூறுகிறதாம். பணத்துக்காக அலையும் ஒருவருக்கும் பணத்திலேயே மிதக்கும் ஒருவருக்கும் நட்பு ஏற்பட்டால் எப்படி இருக்கும் என்பதை இந்தப்படத்தில் சுவாரசியமாகச் சொல்லியிருக்கிறார்களாம்.

இந்தப் படத்தில் படம் முழுக்க  வீல் சேரில் உட்கார்ந்தபடி நடித்திருக்கிறார் நாகார்ஜுனா. இதனால் நாகார்ஜுனா குடும்பத்தினர் இந்தப்படத்தில் நீங்கள் நடிக்கவேண்டாம் என்று சொன்னார்களாம்.  அதனால் ‘தோழா’வை பார்க்கும்போது என் குடும்பத்தினர்  என்ன சொல்ல போறாங்களோன்னு எனக்கு ரொம்ப படபடப்பாக இருக்கு” என்கிறார் நாகார்ஜுனா.

நல்ல கதையில் நடிப்பதற்காக ஒரு வருஷம் காத்திருந்தேன். என்னோட தேடல் வீண் போகவில்லை. ‘தோழா’வோட ஒரிஜினல் வெர்ஷனை பார்த்தப்ப, அதை அப்படியே பிரதிபலிக்கிற மாதிரி என்னால் பண்ண முடியுமா? என்று ஒரு சின்ன சந்தேகம் இருந்தது. ஆனால் டைரக்டர் வம்சி செம புத்திசாலி. நமக்கு ஏற்றமாதிரி கதையை மிக அழகாக, அதனோட எமோஷன் குறையாமல் எடுத்திருக்கார், சின்ன வயதில் நாகார்ஜுனா சார் நடித்த படங்களை பார்த்து ரசித்த எனக்கு அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு இப்படம் மூலம் கிடைத்தது. அது நான் செய்த பாக்கியம் என்று தன் பங்குக்கு படத்தைப் பற்றிப் புகழ்ந்து பேசிக்கொண்டிருக்கிறார் கார்த்தி.
 
ஜீரோ
 
இந்தப் படத்தில், நாயகன் அஸ்வின், நாயகியாக நெடுஞ்சாலை படத்துக்குப் பிறகு  ஷிவதா நடித்திருக்கிறார். சக்ரவர்த்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஷிவ் மோஹா இயக்கியிருக்கிறார். 

தமிழ் சினிமாவில் இது வரை சொல்லப்படாத ஒரு புதிய திரைக்கதையின் அடிப்படையில் இப்படம் உருவாகியிருப்பதாகச் சொல்கிறார்கள். அப்படி என்ன கதை என்றால் உண்மையான காதல், தடைகளையெல்லாம் கடந்து பல ஜென்மங்களிலும் வெற்றி பெறும் என்ற கருத்துடன் உருவாகி இருக்கிறது என்கிறார்கள். நாசரின் தேவதை, ராம்சரணின் மாவீரன் ஆகிய படங்களிலும் இதைத் தானே சொல்லியிருந்தார்கள்.  காதல்கதையை அடிப்படையாகக் கொண்ட படமென்பதால், காதலர்தினத்தன்றே வெளியிடத்திட்டமிட்டார்கள். கொஞ்சம் தள்ளிப்போய் நாளை வெளியாகவிருக்கிறது.
 
அடிடா மேளம்
 
அபய் கிருஷ்ணா தயாரித்து, ஹீரோவாக நடிக்கும் படம் .இப்படத்தில் 'நாடோடிகள்' அபிநயா கதாநாயகியாக நடிக்க, இவர்களுடன் ஜெயப்பிரகாஷ், ஊர்வசி, மயில்சாமி, மிப்பு, 'அவன் இவன்' ராமராஜன், கானா பாலா உட்பட பலர் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி ஒளிப்பதிவு செய்துள்ளார் அன்பு. திருமணத் தரகராக வரும் கதாநாயகன் அபய்கிருஷ்ணாவிடம் நாயகி அபிநயா  தனக்கு நடக்கவுள்ள திருமணத்தை ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி நிறுத்திவிடுமாறு சொல்லி அதற்காகப் பணமும் கொடுக்கிறார். 

அபிநயாவை மணக்கத்துடிக்கும் மாப்பிள்ளை மிப்புவோ, அதே திருமணத்தரகரிடம்  எப்படியாவது இந்த திருமணத்தை நடத்தி முடிக்குமாறு அபிநயா கொடுத்த தொகையை விட அதிகமாக கொடுக்கிறார். அதனால், அவர்கள் இருவருக்குமான ஜாதகப்பொருத்தம் சூப்பர் என்று சொல்லி திருமணத்தை நடத்தச் சொல்கிறார் அபய் கிருஷ்ணா. அதன் பிறகு ஒரு உண்மை தெரிய வர அந்த திருமணத்தை தடுத்து நிறுத்த என்னென்ன முயற்சிகள் செய்கிறார் ஹீரோ, கடைசியில் என்ன ஆகிறது என்பதுதான் படம். முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தப்படம் எடுக்கப்பட்டுள்ளதாம்.
 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close