வாழ்றதுதான் கஷ்டம்னு நினைச்சா... இப்போ பேள்றதுமா!? - ஜோக்கரின் பளீர் பகடி (டிரெய்லர் விமர்சனம்)

ரசியல் என்பது என்ன? ஒரு கட்சியைச் சார்ந்து அல்லது சாராமல் வாழ்ந்து தேர்தல் வரும்போது ஓட்டு போடுவதா? இல்லவே இல்லை. நாம் விடும் மூச்சுக்காற்று உட்பட எல்லாவற்றிலுமே இங்கு அரசியல் கலந்திருக்கிறது. மூச்சுக்காற்றில் என்னடா அரசியல் என்பவர்களுக்கு, வாகனப் பெருக்கத்தால் காற்று மாசடைந்து, நீங்கள் சுவாசிக்கும் காற்றுகூட , உங்களுக்கே தெரியாமல் கொஞ்சம் கொஞ்சமாக மாசடைந்துவிட்டது. நூல் பிடித்துப் போனால் அதில் எப்படி அரசியல் கலந்திருப்பதென்று உணரலாம்.

அரசியலைப் பேசச் சொன்னால், ‘நமக்கெதற்கு’ என்கிற மனோபாவம் பலருக்கும் இருக்கிறது. ஒருவித பயம் இருக்கிறது. சாக்கடையை குற்றம் சொல்லும் எவரும், அந்தச் சாக்கடையின் அழுக்கைக் கழுவ வேண்டாம்..  குறைந்தபட்சம் குரல்கொடுக்கக் கூட முன்வருவதில்லை.

சமூகத்திற்கு எதிரான எவற்றிற்கும் குரல் கொடுக்க யாருக்கு பொறுப்பிருக்கறதோ இல்லையோ, படைப்பாளிகளுக்கு நிச்சயம் உண்டு. வெகுசிலரே அதற்குத் தயாராக இருக்கிறார்கள். அந்த சொற்பமான பேர்களுடன்  இப்போதும் தானும் கைகோர்த்து இணைந்திருக்கிறார் ராஜு முருகன். குக்கூ படத்தில் கண் தெரியாதவர்களின் உணர்வுகளைப் பற்றிப் பேசியவர், இதில் கண்ணிருந்தும் குருடர்களாக வாழும் மக்களுக்காக பேசியிருக்கிறார் என்பது டிரெய்லரிலிருந்து தெரிகிறது.

”நாம ஓட்டுப்போட்டுத்தானே ஆட்சிக்கு வர்றான்? அதுக்கு மட்டும் நமக்கு உரிமை இருக்கு. அவன்  அநியாயம் பண்ணினா டிஸ்மிஸ் பண்றதுக்கு நமக்கு உரிமை இல்லயா?” - என்று ஏக்கத்தைத் தன் உடைந்த  குரலிலேயே வெளிப்படுத்தி குரு சோமசுந்தரம் பேசுவதில் இருந்து ஆரம்பிக்கிறது டிரெய்லர். தொடர்ந்து  சாட்டையடி வசனங்கள்தான்.

‘வாழறதுதான் கஷ்டம்னு நினைச்சோம் இப்ப பேள்றதயும் கஷ்டமாக்கீட்டானுவளா? சிறப்ப்பு! / நீங்க காசடிக்ககறதுக்கு எங்களுக்கு ஒரு  திட்டம் போடுவீங்களா நீங்கள்லாம்?  என்று அரசியல் நையாண்டிகளும் சரி.. ‘ஒருத்தியோட அன்புக்கு சமானமா இந்த உலகத்துல ஒண்ணுமே கெடையாது’ என்று உணர்வுகளைக் கிண்டும் வசனங்களும் சரி படம் முழுக்க விரவி பார்வையாளர்களைக் கொதித்தெழ, பரவசப்படுத்தச் செய்யும் என்பது டிரெய்லரில் வெளிப்படுகிறது.  அரசியல்வாதிகளை மட்டுமல்ல..  ‘இந்த சனங்க எப்பவுமே இப்படித்தான்.. தீயதுக்கு பின்னாடி போகும்.. கெட்டதையும் ஜெயிக்க வைக்கும் அபத்தங்களைக் கொண்டாடும்’ என்று மக்களையும்.. ஏன் கடவுளையும் சாடத் தவறவில்லை வசனங்கள்.

தேர்தல் சமயத்தில், வெளிவருவதால் இன்னும் எதிர்பார்ப்பிற்கு உள்ளாகும். பேசப்படும். சமூகமாற்றம் வருமா என்பதெல்லாம் மிக மிகப்பெரிய கேள்விக்குறி.

படத்தில் மன்னர்மன்னன் கேட்கும் கேள்விகளை மக்கள் கேட்க ஆரம்பித்தாலே மாற்றங்கள் வரும். ஆனால், படைப்பைக் கொடுக்கிற படைப்பாளிக்கு அதைப் பற்றிய கவலையெல்லாம் இருப்பதில்லை. இருக்கவும் கூடாது. ’ஆனா இதுல சர்வதேச சதி இருக்குன்னு.. சரமாரியான அரசியல் இருக்குன்னு பேசிக்கறாங்களே பாஸ்’ என்பதில் முடிகிறது டிரெய்லர்.

இந்தப் படத்தின் டிரெய்லரைப் பார்த்த மக்கள், இதில் பேசப்பட்ட அரசியலைக் கேட்க, அதை விவாதிக்கத் தயாராய் இணையதளங்களில் கொண்டாடிக்கொண்டிருக்கிற அதே சமயம், வெறும் வசனங்கள் மட்டுமே ஒரு சினிமாவின் முழுமையான உணர்வைக் கொடுக்குமா என்று தீவிர சினிமா ஆர்வலர்களும் தங்கள் கருத்துக்களைப் பதித்துக் கொண்டிருக்கிறார்கள். அதை முழு படத்தையும் பார்த்துவிட்டு முடிவெடுக்கலாம். இப்போதைக்கு கடுகடுவென தாளிக்கும் வசனங்களுக்காகவே டிரெய்லரை மீண்டும் பார்க்கலாம்.

வெல்கம் ஜோக்கர்!

-பரிசல் கிருஷ்ணா
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!