தரமணியைக் கடந்து வந்தவர்கள்!


ஓர் இயக்குனர் தன் படத்தோட முதல் டீசரை வெளியிட்டா, அவர் ரசிகனோ /  ரசிகையோ என்னங்க பண்ணுவாங்க...?

லைக் போடுவாங்க. நல்லாவோ / மோசமாவோ ஒரு கமென்ட் போடுவாங்க.. ஆனா, தரமணி டீசரை பார்த்த ஒரு பொண்ணு, தன் சக தோழியை டேக் பண்ணி இப்படி கமென்ட் போட்டு இருக்காங்க, “பார்த்துக்கோ... லவ் பண்ணா இப்படி தான் நடக்கும்...”

இன்னொரு பையன்... “நாங்க இப்பவெல்லாம் அப்படியில்லை ராம், நாங்க திருந்திட்டோம்னு...” சீரியஸா ஓர் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து இருக்கிறார்.

வழக்கமா விழுற லைக், கமென்ட்டுகளை தாண்டி, அடர்த்தியான, ஆழமான கமெண்டுகள் தரமணிக்கு வந்து விழுவது, ஒன்றை மிக தெளிவாக சொல்கிறது. ஆம். “எங்கள் ஊர் கன்னியாகுமரியாகவோ இல்லை கும்மிடிபூண்டியாகவோ இருக்கலாம். ஆனால், நாங்கள் அனைவரும் தரமணியை கடந்து வந்திருக்கிறோம்...” என்பதை ரசிகன் தன் மொழியில் சொல்கிறான்.

தரமணி என்பது வெறும் ஊர் பெயர் மட்டுமல்ல. அது ஒரு நாகரிகம். தாராளமய பொருளாதார கொள்கையின் அடையாளம். ராமின் மொழிகளில் சொல்ல வேண்டுமென்றால், “இந்தியாவின் வரைபடத்திலிருந்து களவாடப்பட்டு, அமெரிக்க வரைபடத்தில் பொருத்தப்பட்ட ‘யோயோ’ பாய்ஸ், கேர்ள்ஸ் வாழும் ஊர்...”

அந்த நாகரிகத்தை காதலிப்பவர்கள், வெறுப்பவர்கள், அல்லது சகித்துக் கொண்டு வாழப்பழகியவர்களிடம், இந்த டீசர் எப்படி உரையாடி இருக்கிறது...? அவர்கள் ஆன்மாவை எப்படி அசைத்து பார்த்து இருக்கிறது...? அது தான் அந்த கமென்ட்டுகளில் பிரதிபலித்து இருக்கிறது.


 
தாராளமய அரசியல் ஒவ்வொரு வீட்டின் படுக்கையறை வரை ஊடுருவி இருக்கிறது. மனிதர்களின் ஆளுமையில் அது ஒரு பெரும் தாக்கத்தை உண்டாக்கி இருக்கிறது. அது நல்லதா, தீயதா என்ற விவாதத்தை தாண்டி, இப்படம் அந்த தாக்கத்தை பதிவு செய்து இருக்கிறது என்பதைத்தான் இந்த டீசர் எந்த குறியீடுகளும் இல்லாமல், நேரடியாக உணர்த்துகிறது.

தாராளமயமாக்கலுக்கு பின், பெண்கள் வாழ்வில் குறிப்பிடத்தகுந்த பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால், அதை எப்போதும் அப்படியே ஓர் ஆண் மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. முற்போக்கு பேசும் பல கணவன்களின் கைகளில் தான், மனைவியின் ஏடிஎம் கார்டுகள் இருக்கின்றன. உண்மையில், இப்போதெல்லாம், பெண்கள் பாதுகாப்பற்ற மனநிலையில் இருப்பதில்லை. பெரும்பாலான ஆண்கள் தான் எப்போதும் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கிறார்கள். பாதுகாப்பு என்று குறிப்பிடுவது, உறவு சார்ந்தது. அவள் என்னை விட்டு சென்றுவிடுவாளோ என்கிற பயம் சார்ந்தது. இதை வெறும் பொசசிவ்நெஸ் என்று மட்டும் கடந்து சென்று விட முடியாது. இதை பல இலக்கியங்கள் பதிவு செய்து இருக்கின்றன.

இந்த உறவு சிக்கல் என்பது இந்திய சூழல் சார்ந்தது மட்டுமல்ல, நவீனத்தின் உச்சத்தில் இருக்கும் அமெரிக்காவிலும் அத்தகைய பிரச்னைகள் இருக்கின்றன். அதனால் தான் அவர்களால், ‘American beauty' என்கிற படத்தை எடுக்க முடிகிறது. இந்த நவீன பொருளாதார கொள்கைகள் ஏற்படுத்தி உள்ள உறவு சிக்கல்களை பதிவு செய்யும் படமாக தான் தரமணி இருக்கலாம் என்று அந்த 1.52 நிமிட டீசர் உணர்த்துகிறது. டீசர் குறித்த பெரும்பாலான கமென்ட்டுகள், அதை உணர்ந்து அப்புள்ளியிலிருந்து தான் இப்படத்தை விவாதிக்கிறது. ஏற்கனவே  இயக்குநர் ராம் அவரது இந்தப் பேட்டியிலும் ‘தரமணி ஐ.டி.இளைஞர்கள் பற்றிய படம் இல்லை’ என்றுதான் சொல்லியிருக்கிறார்!

அதே சமயம், ‘இப்போதெல்லாம் யுவன்களும், யுவதிகளும் மாறிவிட்டார்கள். ராம் போன்றவர்களால் தான் அவர்களை புரிந்துகொள்ள முடியவில்லை’ போன்ற பின்னூட்டங்களையும் காணமுடிகிறது. இந்த மாதிரி பின்னூட்டம் இடுபவர்கள், பெங்களூரில் ஒரு ஐ.டி. கணவன் தன் மனைவியின் போன் குறுஞ்செய்திகளை சோதிக்கப்போக, மனைவி கொந்தளித்து அவன் கையை கத்தியால் பல இடங்களில் கீறிய செய்தியைப் பார்க்கத் தவறியவர்களாக அல்லது அந்தச் செய்தியை அரசியலுடன் பொருத்திப் பார்க்க மறுப்பவர்களாகத்தான் இருப்பார்கள்.

அடர்த்தியான கமென்ட்டுகளுக்கு இடையே சில கமென்ட்டுகள், யுவனைக் கொண்டாடுகின்றன.. அபூர்வ செளமியாவை தேடுகின்றன. ஆம். பார்த்தவர்கள் பார்த்தவுடன் மரிக்கும் அளவிற்கு போஸ்டர்களில் சிரிக்கும் செளமியாவை அடுத்த டீசரிலாவது காட்டுங்கள் ராம்.


- மு. நியாஸ் அகமது

Do you like the story?

Please Appreciate the Author by clapping!