Published:Updated:

சூப்பர் ஹீரோ, ஃபேன்டஸி, பீரியாடிக்... எட்டும் எட்டு ரகம்! - டிசம்பர் வாட்ச் லிஸ்ட்

2019-ம் ஆண்டின் இறுதி மாதமான டிசம்பரிலும் சில நல்ல படங்கள் வெளியாகவிருக்கிறது. ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கும் இந்தியப் படங்களின் லிஸ்ட் இதோ!

1
இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு

இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு :

இந்த வருடம் வெளியான இந்திய சினிமாக்களின் பட்டியலை எடுத்துப் பார்த்தால் விமர்சன ரீதியாகவும் வசூல்ரீதியாகவும் பல நல்ல படங்கள் வெற்றியடைந்திருக்கின்றன. அந்த வரிசையில் 2019-ம் ஆண்டின் இறுதி மாதமான டிசம்பரிலும் சில நல்ல படங்கள் வெளியாகவிருக்கிறது. ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கும் படங்களின் லிஸ்ட் இதோ! 

தொழிலாளர்கள் சுரண்டல், முதலாளித்துவம், தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்னைகள், இதற்கு மத்தியில் காதல் ஆகிய விஷயங்களைப் பேசும் படமே, `இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு.' அதியன் ஆதிரையன் இயக்கியிருக்கும் இப்படத்தில், `அட்டக்கத்தி' தினேஷ், `கயல்' ஆனந்தி, ரித்விகா எனப் பலரும் நடித்துள்ளனர். `பரியேறும் பெருமாள்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் பா.இரஞ்சித் தயாரித்துள்ள படம் என்பதால் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பைப் பெற்றுள்ளது. 

2
ஹீரோ

ஹீரோ:

விஜிலாண்டே ஆக்‌ஷன் த்ரில்லர் பட ஜானரில் உருவாக்கப்பட்டுள்ள படம் ஹீரோ. சிவகார்த்திகேயன், கல்யாணி பிரியதர்ஷன், அர்ஜுன் ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்தை மித்ரன் இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயின் 'நம்ம வீட்டு பிள்ளை' ஃபேமிலி ஆடியன்ஸை கவர்ந்தது. ஹீரோ, இன்றைய கல்வி பிரச்னைகள், அரசியல் எனப் பேசியுள்ளது. குழந்தைகளுக்கும் பிடிக்கும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளதாம். டிசம்பர் இறுதியில் திரைக்கு வரவிருக்கிறது ஹீரோ.

3
தம்பி ( )

தம்பி:

ஃபேமிலி ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் தான் ஒரு சிறந்த இயக்குநர் என்பதை `த்ரிஷ்யம்' படத்தின் மூலம் நிரூபித்தவர், ஜீத்து ஜோசஃப். தமிழ் வெர்ஷனில் கமல் நடிக்க, `பாபநாசமா'க வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து தமிழில் நேரடியாக இவர் இயக்கியிருக்கும் படம் `தம்பி'. கார்த்தியும் ஜோதிகாவும் சேர்ந்து நடிக்கும் முதல் படம். இவர்களைத் தவிர சத்யராஜ், சௌகார் ஜானகி எனப் பல முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். `ஹீரோ'வுக்குப் போட்டியாக டிசம்பர் 20-ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

4
சைக்கோ ( )

சைக்கோ:

மிஷ்கின் படங்களென்றாலே டார்க்காகவும் ராவாகவும் இருக்கும். அந்த வகையில் உதயநிதி ஸ்டாலின் முதல் முறையாக  மிஷ்கினுடன் இணைந்திருக்கும் படம் `சைக்கோ.' தவிர, `அருவி' படப் புகழான அதிதி பாலன், நித்யா மேனன்  போன்றவர்களும் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். `நந்தலாலா', `ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' ஆகிய மிஷ்கின் படங்களுக்குப் பிறகு இளையராஜா இதற்கு இசையமைத்திருக்கிறார். டிசம்பரின் இறுதியில் வெளியாகிறது `சைக்கோ.'  

5
தபாங்-3

தபாங்-3:

பாலிவுட் வட்டம் செல்லமாக அழைக்கும் `சல்லு பாய்' என்கிற சல்மான் கானின் பட வரிசையில் `தபாங்' மிகவும் முக்கியமான படம். ரசிகர்கள் கொண்டாடும் இப்படத்தை பிரபு தேவா இயக்கியிருந்தார். முதல் இரு பாகத்துக்குக் கிடைத்த வரவேற்பையும் வெற்றியையும் தொடர்ந்து 3-வது முறையாகக் கைகோத்துள்ளது இந்தக் கூட்டணி. காமெடி - ஆக்‌ஷன் ஜானரில் உருவாகியிருக்கும் இப்படத்தை சல்மான் கானே தயாரித்துள்ளார்.  வரும் டிசம்பர் 20-ம் தேதி வெளியாகிறது `தபாங் 3'. 

6
பானிபட்

பானிபட்:

`ஜோதா அக்பர்', `லகான்' போன்ற ஐக்கானிக் படங்களை இயக்கியவர் ஆஷுதோஷ் கௌரிக்கர். தற்போது மூன்றாவது பானிபட் போரை மையமாகக்கொண்டு `பானிபட்' என்ற படத்தை இயக்கியிருக்கிறார். அர்ஜுன் கபூர், சஞ்சய் தத், க்ரித்தி சனோன் போன்றவர்கள் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வரும் வெள்ளிக்கிழமை இப்படம் வெளியாகிறது. 

7
மாமங்கம்

மாமாங்கம்:

18-ம் நூற்றாண்டின்போது கேரளாவில் உள்ள பாரத்புழா எனும் ஆற்றங்கரையில் கொண்டாடப்பட்ட விழாவே மாமாங்கம். பழம்பெறும்  இவ்விழாவை மையமாகக்கொண்டு பீரியட் - ஆக்‌ஷன் ஜானரில் உருவாகியிருக்கும் படமே மம்மூட்டி நடித்த `மாமாங்கம்'. உன்னி மேனன், அனு சித்தாரா, சித்திக் எனப் பல சீனியர் நடிகர்கள் இதில் நடித்துள்ளனர். `ஜோசஃப்', `ஆகாச மிட்டாய்' உள்ளிட்ட பல படங்களை இயக்கிய பத்மகுமார் இதை இயக்கியுள்ளார். டிசம்பரின் இறுதியில் இப்படம் வெளியாகவிருக்கிறது. 

8
அவனே ஶ்ரீமன் நாராயணா

அவனே ஶ்ரீமன் நாராயணா:

கன்னட சினிமாவில் `உளிடவரு கண்டன்டே' எனும் ஒற்றைப் படத்தை எடுத்து இயக்கி நடித்து அனைவரையும் கவனிக்க வைத்தவர் ரக்‌ஷித் ஷெட்டி. இவர் நடிப்பில் சச்சின் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் ஃபேன்டஸி - காமெடி ஜானர் படமே `அவனே ஶ்ரீமன்நாராயணா.' இப்படத்தின் ஸ்க்ரிப்ட்டிலும் இவர் பணியாற்றியுள்ளார். கன்னடம் உட்பட இந்தி, தெலுங்கு, மலையாளம், தமிழ் ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது இப்படம். 80 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ள இப்படத்தின் டிரெய்லர், யூடியூபில் சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கிறது. இப்படம் டிசம்பர் இறுதில் வெளியாகிறது. 

``ஹீரோ VS தம்பி..!'' - இந்த வாரம் வரவிருக்கும் தமிழ்ப் படங்கள்!
அடுத்த கட்டுரைக்கு