Published:Updated:

ஓடிடி நேரடி ரிலீஸில் அமிதாப் முதல் கீர்த்தி சுரேஷ் வரை... ஆனால் டோலிவுட் மட்டும் மிஸ்ஸிங்... ஏன்?

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் இந்தியத் திரைப்படங்கள்

பாலிவுட்டில் அமிதாப் பச்சன், அக்‌ஷய் குமார், அபிஷேக் பச்சன் மாதிரியான உச்ச நட்சத்திரங்களின் படங்களையே சூழல் அறிந்து நேரடியாக ஆன்லைன் தளங்களில் வெளியிடுகிறார்கள்.

ஓடிடி நேரடி ரிலீஸில் அமிதாப் முதல் கீர்த்தி சுரேஷ் வரை... ஆனால் டோலிவுட் மட்டும் மிஸ்ஸிங்... ஏன்?

பாலிவுட்டில் அமிதாப் பச்சன், அக்‌ஷய் குமார், அபிஷேக் பச்சன் மாதிரியான உச்ச நட்சத்திரங்களின் படங்களையே சூழல் அறிந்து நேரடியாக ஆன்லைன் தளங்களில் வெளியிடுகிறார்கள்.

Published:Updated:
நேரடியாக ஓடிடியில் வெளியாகும் இந்தியத் திரைப்படங்கள்

கொரோனாவால் சினிமாத்துறையில் ஏற்பட்டிருக்கும் அசாதாரணச் சூழல் ஓடிடி ரசிகர்களுக்குப் பெரிய ப்ளஸ்ஸாக அமைந்திருக்கிறது. தியேட்டர் ரிலீஸுக்காகக் காத்திருக்கும் பல படங்களும் ஓடிடி-யில் நேரடியாக ரிலீஸாக இருக்கிறது. அந்தவகையில் அமேஸான் அடுத்த 60 நாள்களுக்குள் நேரடியாக ரிலீஸ் செய்யப்போகும் தன்னுடைய படங்களின் லிஸ்ட்டை வெளியிட்டிருக்கிறது. ஆனால், இந்த லிஸ்ட்டைக் கொஞ்சம் கவனத்தால் ஒரு இண்டஸ்ட்ரி மட்டும் மிஸ்ஸிங் என்பது தெரியும். இந்தியாவில், பாலிவுட், கோலிவுட், டோலிவுட் அதாவது இந்தி, தமிழ், தெலுங்கு சினிமா மார்க்கெட்தான் மிகப்பெரியவை. இதில் இந்தி, தமிழ் சினிமாக்கள் நேரடி ரிலீஸுக்கு வந்துவிட்ட நிலையில் ஆந்திரா மட்டும் அசையாமல் இருக்கிறது. அது ஏன் எனப் பார்ப்பதற்கு முன்பு அமேஸான் வெளியிட்டிருக்கும் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ லிஸ்ட்டைக் கொஞ்சம் பார்த்துவிடுவோம்!

பொன்மகள் வந்தாள் :

பொன்மகள் வந்தாள்
பொன்மகள் வந்தாள்

சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஜே.ஜே.ஃப்ரெட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா முதல்முறையாக வழக்கறிஞராக நடிக்கும் படம் இது. இதில் பாக்யராஜ், பாண்டியராஜன், பார்த்திபன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ராம்ஜி ஒளிப்பதிவு, கோவிந்த் வசந்தாவின் இசை என டெக்னிக்கலாகவும் படம் ஸ்ட்ராங். அன்றாட வாழ்க்கையில் பெண்கள் சந்திக்கும் முக்கியமான சமூகப் பிரச்னைகளைப் பற்றிப் பேசும் கோர்ட் ரூம் டிராமாதான் இந்த `பொன்மகள் வந்தாள்.' மார்ச் 27-ம் தேதி திரையரங்கில் வெளியாக இருந்த இப்படம் தற்போது, அமேசான் ப்ரைமில் மே 29-ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த லாக் டெளனில் முதன்முதலாக ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளத்தில் நேரடியாக வெளியாகும் படம் இது.

பெண்குயின் :

பெண்குயின்
பெண்குயின்

2018-ல் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் கீர்த்தி சுரேஷ் நடித்த ஆறு படங்கள் வெளியாயின. ஆனால், 2019-ல் இவரின் ஒரு படம் கூட வெளியாகவில்லை. `நடிகையர் திலகம்' படத்துக்கு தேசிய விருது பெற்ற பிறகு, நடிப்பதற்கு அதிக முக்கியத்துவம் இருக்கிற படங்களில் மட்டும் நடிப்பேன் என்று முடிவெடுத்தார் கீர்த்தி சுரேஷ். அதனால், கதைகள் தேர்ந்தெடுப்பதில் அதிக கவனம் செலுத்தி வந்தார். அப்படி அவருக்கு மிகவும் பிடித்து நடித்திருக்கும் படம்தான் `பெண்குயின்'. கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பு, அறிமுக இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கம், சந்தோஷ் நாராயணன் இசை என நல்ல கூட்டணி. ஹீரோயின் சென்ட்ரிக் த்ரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் இப்படத்தில் மொத்தம் ஏழே கேரக்டர்கள்தானாம். அதில் `மெஹந்தி சர்க்கஸ்' ஹீரோ ரங்கராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கொடைக்கானலில் நடக்கும் இந்த த்ரில்லர் படம் ஜூன் 19 ரிலீஸ்.

குலாபோ சிதாபோ :

குலாபோ சிதாபோ
குலாபோ சிதாபோ

சூஜித் சிர்கர் இயக்கத்தில் அமிதாப் பச்சன், ஆயுஷ்மான் குரானா நடிக்கும் படம் இது. ஏற்கெனவே, அயூஷ்மான் குரானாவை வைத்து `விக்கி டோனர்', அமிதாப் பச்சனை வைத்து `பிகு' உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார் சூஜித். ஆயுஷ்மானை அறிமுகப்படுத்தியவரும் இவர்தான். தந்திரக்காரர்கள் இருவரின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள், பிரச்னைகளை முழுக்க முழுக்க நகைச்சுவையுடன் எடுத்திருக்கிறாராம் இயக்குநர். அமிதாப் பச்சன் - ஆயுஷ்மான் இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படம். காமெடி டிராமா ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தை ஏப்ரல் 17-ம் தேதி திரையரங்கில் வெளியிட இருந்தனர். ஆனால், தற்போது ஜூன் 12-ம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாக இருக்கிறது.

ஃப்ரெஞ்ச் பிரியாணி :

ஃப்ரெஞ்ச் பிரியாணி
ஃப்ரெஞ்ச் பிரியாணி

நேரடியாக ஆன்லைன் தளத்தில் வெளியாகும் முதல் கன்னடத் திரைப்படம் `ஃப்ரெஞ்ச் பிரியாணி'. நடிகர் புனித் ராஜ்குமார் தயாரிப்பில் பன்னாகா பரனா இயக்கியிருக்கிறார். ஒரு ஆட்டோ ஓட்டுநருக்கும் ஃப்ரான்ஸில் இருந்து வந்த வெளிநாட்டவருக்கும் இடையே மூன்று நாள்கள் நடக்கும் நகைச்சுவை கதை. அந்தக் கதாபாத்திரத்தில் தனிஷ், சால் யூசூப் ஆகியோர் நடித்துள்ளனர். வரும் ஜூன் 24-ம் தேதி அமேசானில் வெளியாக இருக்கிறது.

லா :

லா
லா

ஹீரோயின் சென்ட்ரிக் க்ரைம் த்ரில்லர் ஜானர். இதுவும் புனித் ராஜ்குமார் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம்தான். ரகு சமர்த் இயக்கியிருக்கும் இப்படத்தில் ராகினி சந்திரன் எனும் ஹீரோயின் அறிமுகமாகிறார். வழக்கறிஞராக இருக்கும் நாயகி, ஒரு வழக்கில் மாட்டிக்கொள்கிறார். அதனால் அவர் சந்திக்கும் பிரச்னைகள், அதிலிருந்து எப்படி வெளியே வருகிறார் என்பதுதான் 'லா' படத்தின் ஒன் லைன். இந்தத் திரைப்படம் ஜூன் 26ம் தேதி ரிலீஸாகிறது.

சகுந்தலா தேவி :

சகுந்தலா தேவி
சகுந்தலா தேவி

கணித மேதை சகுந்தலா தேவியின் பயோபிக் இது. அனு மேனன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் சகுந்தலா தேவியாக வித்யா பாலன் நடித்துள்ளார். மனிதக் கணினி எனச் செல்லமாக அழைக்கப்படுபவர். சோனி பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படம் மே 8-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்தது. ஆனால் இப்போது நேரடி ஓடிடி ரிலீஸில் இடம்பிடித்திருக்கிறது.

சுஃபியும் சுஜாதாயும் :

சுஃபியும் சுஜாதாயும்
சுஃபியும் சுஜாதாயும்

நரணிபுழா ஷானவாஸ் இயக்கியிருக்கும் `சுஃபியும் சுஜாதாயும்' படம்தான் நேரடியாக ஆன்லைன் தளத்தில் வெளியாகும் முதல் மலையாளப் படம். ஜெயசூர்யா, அதிதி ராவ் ஆகியோர் லீட் ரோலில் நடித்திருக்கின்றனர். 2006-க்குப் பிறகு, அதிதி மலையாளத்தில் நடிக்கும் படம் இது. ரொமான்ட்டிக் த்ரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்தில் அதிதி கதக் நடனக்கலைஞராக நடிக்கிறார். தவிர, இசைக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும் படம்.

இவை போக, பாலிவுட்டில் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அக்‌ஷய் குமார் நடிக்கும் `லக்‌ஷ்மி பாம்', அமிதாப் பச்சனின் `ஜுண்ட்', அபிஷேக் பச்சன், ராஜ்குமார் ராவ் நடிக்கும் `லூடோ', ஜான்வி கபூரின் `கஞ்சன் சக்சேனா' உள்ளிட்ட படங்களும் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகக் காத்திருக்கின்றன. தமிழில் `பொன்மகள் வந்தாள்' படம் நேரடியாக ஆன்லைனில் வெளியாக இருக்கிறது என்ற பேச்சுகள் ஆரம்பகட்டத்தில் இருக்கும்போதே ஏகப்பட்ட எதிர்ப்புகள் கிளம்பின. ஆனால், பாலிவுட்டில் அமிதாப் பச்சன், அக்‌ஷய் குமார், அபிஷேக் பச்சன் மாதிரியான உச்ச நட்சத்திரங்களின் படங்களையே சூழல் அறிந்து நேரடியாக ஆன்லைன் தளங்களில் வெளியிடுகிறார்கள். வெப் சீரிஸ்களிலும் உச்ச நடிகர்கள் நடிக்கத் தயாராகிவிட்ட இந்நிலையில், இவ்வாறு நேரடியாக ஆன்லைனில் படங்களை வெளியிடுவது அங்கே பெரிய விஷயமாகப் பார்க்கப்படவில்லை. சூழலுக்குத் தகுந்தாற்போல் பாலிவுட் தன்னை அப்டேட் செய்துகொண்டே இருக்கிறது.

அமேஸான் வெளியிட இருக்கும் திரைப்படங்களின் பட்டியல்தான் இது. அதுபோல, நெட்ஃபிளிக்ஸ், ஜீ5 உள்ளிட்ட நிறுவனங்களும் நிறைய தயாரிப்பாளர்களோடு பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து சினிமாத்துறையும் படங்களை நேரடி ஆன்லைன் தளங்களில் வெளியிட முன்வந்துவிட்டனர். ஆனால், டோலிவுட் அப்படியில்லை. அங்கேயும் நானியின் `V', நாக சைதன்யாவின் `லவ் ஸ்டோரி', பவன் கல்யாணின் `வக்கீல் சாப்' உள்ளிட்ட படங்கள் கோடை விடுமுறையை டார்கெட் செய்து ரிலீஸுக்குக் காத்திருந்தன. இப்போது மற்ற மொழிகளில் இருந்து நேரடியாக ஆன்லைன் தளங்களில் வெளியாகும் படத்திற்கும் இந்தக் கலாசாரத்திற்கும் மக்களிடையே என்ன வரவேற்பு கிடைக்கிறது என்பதைப் பார்த்துக்கொண்டு பிறகு, ஒரு முடிவை எடுக்கலாம் என்ற மனநிலையில் இருக்கிறதாம் டோலிவுட். அங்கே தனிப்பட்ட முறையில் ஒரு தயாரிப்பாளரோ, நடிகரோ முடிவெடுக்க முடியாது என்பதால் சங்கங்களின் முடிவுக்காகக் காத்திருக்கிறது டோலிவுட்.