Published:Updated:

`` `அந்த பத்மா யாரு?’ன்னு அப்பா கேட்கலாம்; ஆனா, எங்க ஆதங்கம் தீரலை!” - எம்.எஸ்.வி மகள் லதா

மகள்களுடன் எம்.எஸ்.வி

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு, அரசின் அங்கீகாரம் உரிய முறையில் செய்யப்படவில்லை என்பது அவர் ரசிகர்களின் ஆதங்கம். இந்நிலையில், பாலக்காடு மாவட்டத்தில் அவருக்கு நினைவிடம் கட்ட, கேரள அரசால் 1 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து எம்.எஸ்.வியின் மகள் லதாவிடம் பேசினோம்.

`` `அந்த பத்மா யாரு?’ன்னு அப்பா கேட்கலாம்; ஆனா, எங்க ஆதங்கம் தீரலை!” - எம்.எஸ்.வி மகள் லதா

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு, அரசின் அங்கீகாரம் உரிய முறையில் செய்யப்படவில்லை என்பது அவர் ரசிகர்களின் ஆதங்கம். இந்நிலையில், பாலக்காடு மாவட்டத்தில் அவருக்கு நினைவிடம் கட்ட, கேரள அரசால் 1 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து எம்.எஸ்.வியின் மகள் லதாவிடம் பேசினோம்.

Published:Updated:
மகள்களுடன் எம்.எஸ்.வி

தமிழ் சினிமாவின் மெல்லிசை மன்னரான எம்.எஸ்.விஸ்வநாதன், கிளாஸிக் காலகட்ட திரையிசையில் கோலோச்சிய இசையமைப்பாளர். எம்.ஜி.ஆர், சிவாஜி உட்பட அப்போதைய உச்ச நாயகர்கள் பலருக்கும், இவர் இசையமைத்த படங்களும், பாடல்களும் ஏற்றம் கொடுத்தது சினிமா வரலாறு. 700 படங்களுக்கு மேல் இசையமைத்திருக்கும் எம்.எஸ்.வி, `தமிழ்த்தாய் வாழ்த்து' பாடலையும் இசையமைத்த பெருமைக்குரியவர். கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்திலுள்ள எலப்புள்ளி கிராமம்தான் விஸ்வநாதனின் பூர்வீகம். இசை ஆர்வத்தால், அங்கிருந்து வந்து தமிழ் சினிமாவில் கால்பதித்தவர், ஆயிரக்கணக்கான மெல்லிசை பாடல்களைக் கொடுத்து, தமிழர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தார்.

மெல்லிசை மன்னர்களுடன், ஜெயலலிதா, ரஜினி, கமல்
மெல்லிசை மன்னர்களுடன், ஜெயலலிதா, ரஜினி, கமல்

தமிழ்த் திரையிசைக்கலைஞர்கள் பலருக்கும் முன்னோடியான விஸ்வநாதனுக்கு, வாழ்ந்த காலத்திலும், மறைவுக்குப் பிறகும், அரசின் சார்பில் உரிய முறையில் அங்கீகாரம் செய்யப்படவில்லை என்பது அவர் ரசிகர்களின் நெடுங்கால ஆதங்கம். இந்த நிலையில், பாலக்காடு மாவட்டத்தில் விஸ்வநாதனுக்கு நினைவிடம் கட்ட 1 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாக, கேரள சட்டமன்ற பட்ஜெட் தாக்கலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து எம்.எஸ்.விஸ்வநாதனின் மகளும் தொழிலதிபருமான லதா மோகனிடம் பேசினோம். தந்தையின் ஆரம்பகால நினைவுகளிலிருந்தே பேச ஆரம்பித்தார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``அப்பாவுக்கு `4 வயசு இருக்கும்போது அவரின் அப்பா இறந்துட்டார். அதனால, மகனுடன் தன் அப்பா வீட்டுல பாட்டி குடியேறினாங்க. அப்பா நாலாவதுவரைதான் படிச்சிருக்கார். இசை மீதான நாட்டத்தால, ஸ்கூல் போகாம பாட்டு வாத்தியார்கிட்ட மியூசிக் கத்துக்கிட்டார். அப்பவே கச்சேரிகள்லயும் வேலை செஞ்சிருக்கார். சினிமா, நாடகத்துறையினருடன் ஏற்பட்ட பழக்கத்துல, சேலம் மாடர்ன் தியேட்டர் உட்பட பல ஊர்கள்லயும் அவர் வேலை செஞ்சிருக்கார். அப்பாவுக்கு நடிக்கிற ஆசையும் இருந்திருக்கு. ஒருசில பட வாய்ப்புகளும் அவருக்கு வந்திருக்கு. ஆனா, அப்பா உயரம் குறைவா இருந்ததால, நடிகைகள் பலரும் அவருடன் நடிக்கத் தயங்கியிருக்காங்க. அதனாலேயே, நடிப்பு ஆசையை விட்டுட்டு, மியூசிக் துறையில மட்டும் கவனம் செலுத்தினார். அதுலயும் அவ்வளவு சுலபமால்லாம் அவருக்கு வாய்ப்புகள் கிடைச்சுடலை.

எம்.எஸ்.வி குடும்பத்தினர்
எம்.எஸ்.வி குடும்பத்தினர்

சினிமாவுல ஜெயிக்கணும்ங்கிற வைராக்கியத்துல, குடும்பத்தினரைப் பிரிஞ்சு, ஊர் ஊரா சுத்தியிருக்கார். `பையன், எங்க, எப்படி இருக்கானோ?’ன்னு அப்பாவின் குடும்பத்தினர் வருஷக்கணக்குல தவிச்சிருக்காங்க. சபாக்கள், ஸ்டூடியோக்கள், தியேட்டர்கள்ல தின்பண்டங்கள் விற்பனை செய்யுற வேலையும் செஞ்சிருக்கார். படப்பிடிப்புகள்ல சின்னச் சின்ன வேலைகள் செஞ்சும், சினிமாக்காரங்க வீட்டுல உதவியாளராவும் சிரமப்பட்டிருக்கார். சுயமா பணம் சம்பாதிக்க ஆரம்பிச்சதும், `நான் உயிரோடுதான் இருக்கேன்'னு குடும்பத்தினருக்கு லெட்டர் அனுப்பினார். பிறகு, தன் குடும்பத்தினரை வரவழைச்சு சேலத்துல தன்னோடவே தங்க வெச்சுகிட்டார். கல்யாணமானதும் குடும்பத்துடன் சென்னையில குடியேறினார்.

இசையமைப்பாளர் சி.ஆர்.சுப்பராமன் ஐயாகிட்ட அப்பா உதவியாளரா இருந்தார். அவரின் திடீர் மறைவால, சுப்பராமன் ஐயாவின் கைவசம் இருந்த சில படங்களுக்கு இசையமைக்கிற வாய்ப்பு அப்பாவுக்குக் கிடைச்சது. புதுமுகம்னு அப்பாவுக்குப் பலரும் வாய்ப்பு கொடுக்கத் தயங்கினாங்க. `எம்.எஸ்.வி மியூசிக் போட்டாதான் படம் ஓடும்'னு அவங்களே சொல்லுற அளவுக்குத் தன் திறமையால அப்பா முன்னேறினார். அதனால, எங்க குடும்பத்தின் கஷ்ட நிலை மாறுச்சு. தன் ஏழு பிள்ளைகளையும் செளகர்யமா வளர்த்தார்.

லதா மோகன்
லதா மோகன்

அப்பாவுக்கு மியூசிக் தவிர வெளியுலகம் எதுவுமே தெரியாது. குழந்தை மாதிரிதான் ரியாக்ட் பண்ணுவார். குடும்பமா உட்கார்ந்து டிவி பார்ப்போம். `இந்தப் பாட்டு வித்தியாசமா இருக்கே'ம்பார். `விளையாடாதீங்கப்பா, இது நீங்க மியூசிக் பண்ண பாட்டுதான்'னு சொல்லுவோம். `அப்படியா, ஞாபகம் இல்லை. இருந்தாலும், ஓரளவுக்கு நல்லாதான் வேலை செஞ்சிருக்கேன்போல'னு சிரிப்பார். வீட்டு நிர்வாகம் மொத்தத்தையும் அம்மாதான் பார்த்துகிட்டாங்க. அவருக்கு எல்லாமுமா இருந்த எங்கம்மா, அப்பாவின் இறப்புக்கு சில வருஷங்களுக்கு முன்பே இறந்துட்டாங்க. அதனால, மனதளவுல வருத்தமாவே இருந்தார். மத்தபடி ரொம்பவே சந்தோஷமாவும், அர்த்தமுள்ளதாவும்தான் அப்பாவின் வாழ்க்கை அமைஞ்சது" என்கிறார் நெகிழ்ச்சியாக.

பல நூறு திரைப்படங்களுக்குத் தனியாக இசையமைத்த விஸ்வநாதன், இசையமைப்பாளர் டி.கே.ராமமூர்த்தியுடன் இணைந்தும் ஏராளமான படங்களில் பணியாற்றியிருக்கிறார். எம்.எஸ்.விஸ்வநாதன் - டி.கே.ராமமூர்த்தி - கவிஞர் கண்ணதாசன் ஆகியோரின் கூட்டணியில் உருவான பாடல்கள், அமுத கானமாக இன்றும் ஒலிக்கின்றன. தன் நண்பர்களுடனான எம்.எஸ்.வி-யின் அன்பு குறித்துப் பேசினார் லதா மோகன்.

டி.எம்.எஸ், எம்.எஸ்.வி, எம்.ஜி.ஆர்
டி.எம்.எஸ், எம்.எஸ்.வி, எம்.ஜி.ஆர்

``அப்பாவுக்கு யாராச்சும் பாராட்டு விழா நடத்த முன்வரும்போது, `ராமமூர்த்தி அண்ணனுக்கும் எனக்கும் சேர்த்து விழா நடத்துறதா இருந்தா வர்றேன்'னு சொல்லிடுவார். அதுமாதிரியான விழாவுக்குப் போறப்போ, ராமமூர்த்தி அண்ணனோட வீட்டுக்குப் போய், அவரையும் அழைச்சுகிட்டுத்தான் போவார். விழாவுல ராமமூர்த்தி அண்ணனுக்குத்தான் முதல்ல மரியாதை செய்யப்படணும்னு சொல்லுவார். அவர்மேல அந்த அளவுக்கு அப்பா உயர்வான மதிப்பு வெச்சிருந்தார். அதேபோல அப்பாவும் கவியரசர் கண்ணதாசன் ஐயாவும் நெருங்கிய நண்பர்களா இருந்தாங்க. எங்க வீட்டுல நடக்கிற நல்லது கெட்டதுனு எல்லா நிகழ்வுலயும் கவியரசர் ஐயா முன்னிலை வகிப்பார். எங்க குடும்பத்துல என் கல்யாணம்தான் முதல்ல நடந்துச்சு. நிச்சயிக்கப்பட்ட கல்யாண தேதியில, சென்னையில மண்டபமே கிடைக்காததால, அப்பா புலம்பிகிட்டிருந்தார்.

தக்க சமயத்துல கவியரசர்தான் ஐடியா கொடுத்தார். அதன்படி, அண்ணாசாலையில திறந்தவெளி மைதானத்துல மண்டபம் மாதிரியே அரங்கு அமைச்சு, என் கல்யாணத்தை அப்பா தடபுடலா நடத்தினார். அதுல, எம்.ஜி.ஆர், சிவாஜி, கருணாநிதி மூவரும் ஒண்ணா உட்கார்ந்து, யேசுதாஸ் அண்ணனோட மூணு மணி நேர கச்சேரியை ரசிச்சுக் கேட்டாங்க. `எம்.எஸ்.வி வகுத்த பாதையிலதான் நான் உட்பட அவருக்குப் பின்னாடி வந்த இசையமைப்பாளர்கள் பலரும் பயணிச்சோம்'னு பெருமிதமா சொல்லுற இளையராஜா அண்ணன், அப்பா மேல ரொம்பவே அன்பு வெச்சிருந்தார். அப்பா மறைவுக்குப் பிறகு, ஒரே வாரத்துல `என்னுள்ளில் எம்.எஸ்.வி'ன்னு நிகழ்ச்சி நடத்தி அப்பாவுக்கு இசையஞ்சலி செலுத்தினதை எங்க குடும்பத்தினரால மறக்கவே முடியாது" என்றவர், கேரள அரசின் தற்போதைய அறிவிப்பு குறித்துப் பேசினார்.

'என்னுள்ளில் எம்.எஸ்.வி' நிகழ்ச்சியில்...
'என்னுள்ளில் எம்.எஸ்.வி' நிகழ்ச்சியில்...

``அப்பாவின் திறமை பத்தி எங்களைவிட, ரசிகர்களைவிட, அவர்கூட வேலை செஞ்ச சினிமா மற்றும் அரசியல் ஜாம்பவான்கள் பலருக்கும் நல்லாவே தெரியும். ஆனாலும், அப்பாவின் திறமைக்கு நியாயமா கிடைக்க வேண்டிய அங்கீகாரம், அவர் வாழ்ந்த காலத்துலயே கிடைக்காத ஆதங்கம் எங்களுக்கு நிறையவே இருந்துச்சு. இது பத்தி அப்பாகிட்ட பலமுறை கேட்டிருக்கோம். `இந்த வருஷம்கூட உங்களுக்கு பத்ம விருது அறிவிக்கப்படலையேப்பா'னு அவர்கிட்ட சொல்லுவோம். `யாரும்மா அந்த பத்மா'னு வெள்ளந்தியா கேட்பார். பத்ம விருதுகள் பத்தி அவர்கிட்ட விளக்கிச் சொன்னா, `மக்களோட அன்புதாம்மா பெரிசு. அது அளவுக்கு அதிகமாவே எனக்குக் கிடைச்சிருக்கே'ன்னு சிரிப்பார்.

அப்பாவின் மியூசிக்ல நிறைய பாடல்கள் பாடியிருக்கிற பின்னணிப் பாடகர் ஜெயச்சந்திரன் சார், அப்பா மேல ரொம்பவே அன்பு கொண்டவர். அப்பாவுக்கு கேரள கவர்ன்மென்ட் சார்பா ஏதாச்சும் அங்கீகாரம் செய்யப்படணும்னு அவர் ரொம்பவே முயற்சி பண்ணியிருக்கார். அதன் பலனா, கேரள அரசாங்கத்தால அப்பாவுக்கு நினைவிடம் கட்டப்படும்ங்கிற அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கு. ரெண்டரை வருஷம் கழிச்சு, குடும்பத்தினரைச் சந்திக்க சமீபத்துல கேரளாவுக்கு வந்திருந்தேன். வந்த இடத்துல, இந்த நல்ல செய்தியைக் கேள்விப்பட்டதும் குடும்பத்தினர் எல்லோரும் கண்கலங்கிட்டோம்.

எம்.எஸ்.வி, டி.எம்.எஸ், பி.சுசீலா...
எம்.எஸ்.வி, டி.எம்.எஸ், பி.சுசீலா...

சில தினங்களுக்கு முன்பு என் குடும்ப உறுப்பினரோட நடன நிகழ்ச்சி திருவனந்தபுரத்துல நடந்துச்சு. அதுல, அம்மாநில கலாசாரத்துறை அமைச்சர் சிறப்பு விருந்தினரா கலந்துகிட்டார். அவர்கிட்ட, அப்பாவுக்கு நினைவிடம் கட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டதுக்காக, கேரள முதல்வருக்கும் அவருக்கும் நன்றி சொன்னேன். அப்பாவுக்கு கட்டப்படும் நினைவிடத்தால, அவரின் புகழ் பல தலைமுறையினருக்கும் போய்ச் சேரும் என்பதில் உறுதியான நம்பிக்கையிருக்கு” என்று மகிழ்ச்சியுடன் முடித்தார் லதா மோகன்.