Published:Updated:

`விளையாட்டா செஞ்சோம்; நல்லது நடந்திருச்சு!’ - இமான் உதவியால் நெகிழும் `வைரல்' பாடகரின் நண்பர்

பார்வையற்ற மாற்றுத்திறனாளி இளைஞருக்கு தனது அடுத்த படத்தில் வாய்ப்பு அளிப்பதாக அறிவித்துள்ளார் இசையமைப்பாளர் டி.இமான். இணையத்தில் வைரலான இளைஞரின் வீடியோவைப் பார்த்து அவருக்கு வாய்ப்பு வழங்கியுள்ளார்.

Thirumoorthy - D.imman
Thirumoorthy - D.imman

சமூகவலைதளம் மூலம் பலருக்கு புதிய வாழ்க்கை கிடைப்பது சமீபகாலமாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த ராணு மோண்டல் (Ranu Mondal) என்பவர் ரயில் நிலையத்தில் லதா மங்கேஷ்கரின் பாடலை பாடிக்கொண்டிருக்கும்போது எதேச்சையாக எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலானது. பின்னர் அவரை தேடிப் பட வாய்ப்புகள் வரத்தொடங்கின தற்போது அவர் சில படங்களில் பாடல் பாடியுள்ளார்.

D.imman
D.imman

இதேபோன்ற ஒரு சம்பவம் தமிழகத்திலும் நடந்துள்ளது. ஒரு பார்வையற்ற மாற்றுத்திறனாளி இளைஞர் பாடிய விஸ்வாசம் பட பாடல் நேற்று முதல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், `இந்தப் பாடலுக்கு இசையமைத்த இமான் மற்றும் பாடலை பாடிய சித்ஸ்ரீராமுக்கும் வாழ்த்துகள். மிகவும் சிறந்த பாடல்’ எனப் பதிவிட்டு இசையமைப்பாளரை டேக் செய்து அந்த வீடியோ பதிவிடப்பட்டிருந்தது.

இதைப் பார்த்த இசையமைப்பாளர் இமான், `அன்புள்ள இணைய வாசிகளே இந்தத் திறமையாளரின் தகவல்களைத் தயவு செய்து பகிருங்கள்’ எனக் குறிப்பிட்டிருந்தார். இந்தப் பதிவுக்குப் பின்னர் அந்த இளைஞரின் வீடியோ சமூகவலைதளத்தை கிட்டத்தட்ட ஆக்கிரமிக்கத் தொடங்கியது. அவருக்கு உலகின் பல்வேறு மூலைகளிலிருந்து வாழ்த்துகள் குவியத் தொடங்கின. மறுபுறம் அந்த இளைஞர் யார் என்ற தேடலும் தொடர்ந்தது.

இமான் கேட்ட அடுத்த சில மணி நேரங்களில் அவருக்கு அனைத்துத் தகவல்களும் கிடைக்கவே, ``அந்தத் திறமையாளரின் தகவல்களை அனுப்பியவர்களுக்கு நன்றி. அந்த இளைஞரிடம் பேசிவிட்டேன், விரைவில் அவரை படத்தில் பாடவைப்பேன். கடவுள் அவருக்குத் துணை இருக்கட்டும். இனி திருமூர்த்திக்கு இனிமையான நாள்கள்தான்” என மீண்டும் பதிவிட்டிருந்தார் இமான்.

’ ’கண்ணான கண்ணே’ பாட்டு டியூன் இதுவே இல்ல!’’ - டி.இமானின் ‘விஸ்வாசம்’ ரகசியம்

இளைஞர் திருமூர்த்தியின் விவரங்களை அறிய நாமும் அவரை தொடர்புகொண்டு பேசினோம். அந்த இளைஞர் பற்றிய தகவல்களை நம்மிடம் பகிர்ந்தார் வைரல் வீடியோவை எடுத்த மதன்,`` அந்த இளைஞரின் பெயர் திருமூர்த்தி. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓட்டங்கரை தாலுகாவில் உள்ள ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்தவர். திருமூர்த்தி சின்ன பையனா இருக்கும்போதே அவங்க அம்மா சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு இறந்துட்டாங்க.

Thirumoorthy
Thirumoorthy

அப்பா எதைப்பத்தியும் கவலைபடாம இருப்பார். அவனுக்கு உறவினர்கள் இருக்காங்க. ஆனால், அவங்களால எந்தப் பயனும் இல்ல. அவன் எங்கள் கிராமத்தின் செல்லப்பிள்ளை. எல்லா வீட்டுக்கும் போவான். எல்லாரும் அவனை அன்பா பாத்துப்பாங்க. எல்லார் வீட்லையும் சாப்டுவான். எங்க பசங்க மாலை வேளையில் அவனைக் கூப்பிட்டு பாடல் பாடச் சொல்லி உற்சாகப்படுத்துவோம். இதுவரைக்கும் அப்படிதான் நடந்துகிட்டு இருந்துச்சு.

நேத்து எதேச்சையா ஒரு வீடியோ எடுத்து விளையாட்டா இணையத்தில் போட்டோம். அதுக்குள்ள அவனுக்கு நிறைய வாய்ப்புகள் வந்துட்டு இருக்கு. நண்பர்கள்தான் அவனுக்கு எல்லாமே. அவர்கள் இல்லைனா திருமூர்த்தி இல்லைனுதான் சொல்லணும். ரொம்ப கஷ்டபடுற குடும்பம் அவனுடையது. பாடலையும் தாண்டி பல தலைவர்களின் குரல்களில் அப்படியே பேசுவான். சூப்பரா மியூசிக் போடுவான். நீங்கள் ஒரு சம்பவத்தை அவன்கிட்ட சொன்னால், அதுக்கு ஏத்தமாதிரி அப்படியே இசையமைப்பான். பத்து வருஷம் கழிச்சு கேட்டாலும் அந்த இசையை மறக்காம மீண்டும் இசைப்பான். அவன் பள்ளிக்கூடம் போனதில்லை. ஆனால், திறமைசாலி.

Thirumoorthy
Thirumoorthy

அவனது பாடலைக் கேட்டு நேத்து நைட் இமான் சாருடைய அப்பா எனக்கு கால் பண்ணி பேசுனாரு. திருமூர்த்தி பத்தின அனைத்து விவரங்களையும் அவரிடம் சொன்னேன். இப்போது இமான் அண்ணா பண்ணிட்டிருக்குற படம் `பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் சம்பந்தப்பட்டது'னு சொன்னாங்க.` தம்பி சரியான நேரத்தில் கவனத்துக்கு வந்திருக்கிறார். கண்டிப்பா ஒரு வாரத்தில் அவனுக்கு வாய்ப்பு தருகிறோம்'னு சொன்னார்.

அதை இமான் சார் ட்விட்டரிலும் அறிவிச்சிட்டார். இமான் சாரும் என்கிட்ட மெசேஜில் பேசினார். விஸ்வாசம் பாடலை கேட்டு நானே ரொம்ப ஃபீல் பண்ணதா சொன்னாங்க. அவரும் திருமூர்த்தியை பத்தின தகவல்களை கேட்டு தெரிஞ்சுகிட்டார். `அவனுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு, அவரை நல்லா பாத்துக்கோங்க; குரல் வளத்தை நல்லா பாத்துக்கோங்க'னு அறிவுரை சொன்னார்.

நேத்து நள்ளிரவு யுவன் சங்கர் ராஜா சார் ஆபீஸிலிருந்து போன் பண்ணாங்க. ஆனா பேச முடியல. இன்னைக்கு மீண்டும் பண்றதா சொல்லியிருகாங்க. திருமூர்த்திக்குச் சிறந்த எதிர்காலம் கிடைச்சா நாங்க ரொம்ப சந்தோசப்படுவோம்” என நெகிழ்ச்சியாகப் பேசிமுடித்தார் மதன்.