Published:Updated:

“அப்பவே அஜித்துக்குத் தெரிஞ்சது!”

இமான்
பிரீமியம் ஸ்டோரி
இமான்

துள்ளல் இசை, மெல்லிசைன்னு எதைப் பாடினாலும் அதில் ஸ்ட்ராங்கா இருக்கணும். ‘மைலாஞ்சி’, ‘ஒங் கூடவே பிறக்கணும்’னு எல்லாமே லகுவா காதில் தேன் பாயுற மாதிரி வந்திடும்

“அப்பவே அஜித்துக்குத் தெரிஞ்சது!”

துள்ளல் இசை, மெல்லிசைன்னு எதைப் பாடினாலும் அதில் ஸ்ட்ராங்கா இருக்கணும். ‘மைலாஞ்சி’, ‘ஒங் கூடவே பிறக்கணும்’னு எல்லாமே லகுவா காதில் தேன் பாயுற மாதிரி வந்திடும்

Published:Updated:
இமான்
பிரீமியம் ஸ்டோரி
இமான்

இமானுக்கு இவ்வாண்டின் தேசிய விருது கிடைத்திருக்கிறது. பூங்கொத்துகள், புன்னகைகள், அலைபேசியின் சிணுங்கல்களை அடுத்தடுத்து ஏற்று நன்றி சொல்கிறார் இமான். “என்னங்க, ‘என் இனிய தனிமையே’ பாட்டு இந்தப் போடு போடுதுன்னுதானே கேக்கப்போறீங்க. அது அப்படித்தான்” என எப்போதைக்குமான இனிமையில் கன்னம் குழிவிழச் சிரிக்கிறார் டி.இமான். உச்சஸ்தாயியின் வேகமும் கீழ்ஸ்தாயியின் சுகமும் இசையில் மட்டுமல்ல, இமானின் இசை வாழ்க்கையிலும் உண்டு. எல்லா விரலுக்கும் சேர்த்து கையில் படம் வைத்திருக்கும் இமானே, இப்போது தமிழ் சினிமாவின் ஹாட் டாபிக்.

‘‘ரஜினி சார் ரெடி ஆகிட்டாராம். ‘அண்ணாத்தே’ மறுபடியும் ஷூட்டிங் ஆரம்பிக்கப் போகுது. நாலு பாட்டு போக இன்னும் சில பாட்டுகள் இருக்கு. வேலை தொடங்கணும். இப்ப சூழலே நல்லா இருக்கு. நல்ல பாடல் உருவாக டைம் வந்திருக்கு. நல்ல பாடல்களுக்கு நல்ல தளம் அமைத்துக் கொடுக்கிறது மட்டும்தான் என் வேலை. முன்னாடியெல்லாம் கட் பண்ணினா பாட்டுன்னு சொல்வாங்க. இப்ப சீனும் அடுத்து வருகிற பாட்டும் ஒண்ணா இருக்கணும். ஆடியன்ஸை எழுந்திருச்சுப் போக விடக்கூடாது. பொறுப்பான வேலை சார்’’ என உரையாடலைத் தொடங்குகிறார். பேரமைதி தவழும் இமானின் மியூசிக் பேக்டரியில் நடந்தது சந்திப்பு.

``இப்போ, ‘டெடி’ வரைக்கும் எப்படியாவது உங்க பாட்டு கண்டிப்பாக ஹிட் ஆகுது. எப்படி?’’

“துள்ளல் இசை, மெல்லிசைன்னு எதைப் பாடினாலும் அதில் ஸ்ட்ராங்கா இருக்கணும். ‘மைலாஞ்சி’, ‘ஒங் கூடவே பிறக்கணும்’னு எல்லாமே லகுவா காதில் தேன் பாயுற மாதிரி வந்திடும். ஆனால் குத்துப்பாடலிலும் அந்தத் தன்மையைக் கொண்டு வரணும். அதான் சவால். ‘காந்தக் கண்ணழகி’ மாதிரி ஒரு குத்துப் பாடலை எத்தனை ஆண்டு கழித்துக் கேட்டாலும் சலிக்காமல் கேட்கணும். அதையெல்லாம் உணர்ந்துதான் செய்கிறேன். வெறும் டியூனைப் பாடிக் கேட்பதே இனிமையாக இருக்கணும். இறைவன் அன்போட இருக்கிறார். அந்தப் பேரன்பைப் பாடல்களில் அவர் தூவிட்டுப் போகவும் ஹிட்டாகிடுதுன்னு நினைப்பேன். அவ்வளவுதான் முடியும். வேற ஒண்ணும் நம்ம கையில் இல்லை.”

`` ‘கண்ணான கண்ணே’ பாட்டு இப்படி ஹிட்டடிக்கும்னு யூகித்தீர்களா?’’

“இந்த மாதிரி உறவுப் பாடல்களுக்குப் பெரிய முன்னுதாரணங்கள் இருக்கு. வாழ்க்கை நமக்குப் பாடங்கள் கற்றுக்கொடுக்கும். நம்மை அடிச்சு நிமித்தும். அதில் சில விஷயங்கள் கிடைக்கும். அக்காவுக்கும் தம்பிக்குமான ‘கண்ணம்மா’, அண்ணன் தங்கச்சிக்கான ‘ஒங் கூடவே பிறக்கணும்’, அப்பாவுக்கும் மகளுக்குமான ‘கண்ணான கண்ணே’, அப்பாவிற்கும் சிறுவயது மகனுக்குமான ‘குறும்பா’ எல்லாமே உறவுகளைச் சொல்லி ஹிட்டடித்ததுதான். இந்தப் பாடல்களைச் செய்யும்போது அழியாத ராகமாக காலத்தோட இருந்துகிட்டே இருக்கணும்னு தோணும். நானே இரண்டு பெண் குழந்தைகளுக்குத் தகப்பனாக இருக்கேன். அப்பா அம்மா மேலே நான் வச்சிருக்கிற அதீத பிரியம் காரணமாக இருக்கலாம். என்ன ராகத்தில் போடலாம்னு ஒண்ணும் எண்ணம் இருக்காது. காலையில ஒரு பிரேயரை முடிச்சிட்டு வந்து வெறுமையா உட்காருவேன். அந்த ஜீவ ஊற்று எங்கே ஆரம்பித்து எப்படி நம்ம கைக்கு வந்ததுன்னு தெரியாது. நானே ஒரு இசை ரசிகனாகக் கையேந்தி நிப்பேன். கீபோர்டை வச்சுக்கிட்டு நல்ல ட்யூன் வந்துடாதான்னு நிப்பேன். அது இறை வழியா வந்து சேரும். நான் வெறும் ஒரு கருவிதான்.”

“அப்பவே அஜித்துக்குத் தெரிஞ்சது!”

`` ‘கண்ணான கண்ணே’ அஜித் பாட்டுதான். ஆனா எமோஷனலாக எல்லா ரசிகர்களுக்கும் போனது. அதுக்கு அஜித் ரியாக்‌ஷன் என்ன?’’

“பாட்டு கேட்ட உடனே அஜித் ‘நம்ம படத்தில் ஒரு நல்ல பாட்டு காலகாலத்துக்கும் கேட்கிற மாதிரி வந்திடுச்சு’ன்னு சொன்னார். ஒரு வைரலான பாட்டு வேணும்னு செய்ததேயில்லை. நல்ல பாடல் அமையும்போது அது ஹிட் பாடல் ஆகும்னு கட்டாயம் கிடையாது. ஹிட்டாகும் பாடல் நல்ல பாடலாக இருக்கணும்னு அவசியம் கிடையாது. இரண்டும் வேற வேற. இதைத் தெளிவாப் புரிஞ்சிருக்கேன். அந்தப் பாடலே அந்தப் படத்திற்குப் பெரிய விலாசமா மாறும்னு அவருக்குத் தெரிஞ்சிருக்கு.”

``ஸ்ரேயா கோஷலுக்கு எப்படியும் பாட்டு கொடுத்துடுறீங்க...’’

“ஒரு பாடல் பாடும்போது ஆண்களுக்கும் பெண் களுக்கும் தனித்தனி ஸ்ருதி இருக்கு. ஆண்கள் எட்டுக் கட்டைகூடப் பாடி விடலாம். பெண்களுக்கு அவ்வளவு தூரம் போக முடியாது. ஸ்ரேயாவுக்கு என்ன சௌகரியம்னா அவங்களுக்கு இந்த ஸ்கேல் எதுவும் கிடையாது. எதைக் கொடுத்தாலும் என்ன சங்கதி போட்டாலும் சுலபமாகப் பாடிடுவார். மொழிப் பிரச்னை கிடையாது. தாய்மொழி பெங்காலி. ஆனால், தமிழ் உச்சரிப்பில் விளையாடுவார். தமிழில், மலையாளத்தில், தெலுங்கில் ஸ்டேட் அவார்டு வாங்கியிருக்கார். நல்லா நேரம் ஒதுக்கி கதை கேட்டு, மூடு தெரிஞ்சு, அர்த்தம் புரிஞ்சு பாடுவார். எனக்கே 80 பாடல்களுக்கு மேலே பாடியிருக்கிறார். அவர் பாடினதெல்லாம் பெரிய ஹிட். எங்களுக்குள்ளே நல்ல புரிதல் உண்டு. ‘என் படத்தில் ஸ்ரேயா பாடணும்’னு மத்த மியூசிக் டைரக்டர்கள் போன் பண்ணி கேட்பாங்க. நான் கேட்டா, எங்கே இருந்தாலும் ‘வெயிட் பண்ணு. அடுத்த பிளைட் பிடிச்சு வந்துடுறேன்’னு சொல்ற அக்கறை ரொம்பப் பெரிசு.”

``இப்படி ஒரு பாட்டு நாம போடணும்னு நினைச்ச பாடல்கள் இருக்கா..?’’

“கர்ணன் படத்தின் ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்’ பாட்டுதான். அவ்வளவு வலி நிறைந்தது. அந்தப் பாட்டு. பாடின விதத்திலும் படத்தின் சூழ்நிலையிலும் இசையிலும் அப்படியே மனதை உலுக்கி எடுக்கும். அப்படி ஒரு வீரியத்தோடு சூழலும் கதையும் அமைஞ்சு அந்த மாதிரி ஒரு பாட்டு போடணும்னு ஆசை.’’

``ஒரே மாதிரியிருக்குன்னு சொல்ற விமர்சகர்கள், ஒரே மாதிரி இருந்தாலும் கேட்டு ரசிக்க all type audience... யாரை மனசில் வைச்சு ஆல்பத்திற்கு உட்காருவீங்க?’’

‘‘பிடிக்காத விஷயத்தை யாரும் கேட்கப் போறதில்லை. பிடிக்காத சாப்பாட்டையும் நாம சாப்பிடப்போறதில்லை. அம்மா கொடுக்கிறது ரசம் சாதம்தான். பிடிச்சு சாப்பிடுவோம். ஒவ்வொருத்தரும் தனிப்பட்டு இயங்குறாங்க. அவரவருக்கான ஸ்டைல் தான் மிஞ்சியிருக்குது. என் பிள்ளை என்னை மாதிரித்தான் இருக்கும். எது வேண்டுமானாலும் சின்னச் சின்ன வெரைட்டி கொடுக்கலாம். வடிவேல் சார் காமெடி மாதிரிதான். கெட்டப் மாத்தினே, மண்டை மேலே இருக்கிற கொண்டையை மாத்தினி யான்னு கேட்பார். டிஷர்ட், ஜிப்பான்னு எதை மேலே போட்டாலும் அது கடைசியில் இமான்தானே!”

“அப்பவே அஜித்துக்குத் தெரிஞ்சது!”

``ஒரு புகாரும் இல்லாத குட் பாய் இமேஜ், டீ டோட்டலர்... எப்படி சினிமாவில் இருக்கீங்க?’’

“எங்க அப்பா அம்மாவை அவ்வளவு நேர்மையாகப் பார்த்திருக்கேன். நான் யாருக்கும் அட்வைஸ் பண்றது கிடையாது. வீட்டில் யாரும் எனக்கு அறிவுரை சொன்னதில்லை. இங்கே அறிவுரை சொல்லிட்டு, நீ யோக்கியமான்னு திருப்பிக் கேட்டு மௌனமாகியிருக்காங்க. கண்டிக்கிற தன்மை இழந்திருக்காங்க. என்னோட தொழிலைவிட எனக்குப் பெருமை என்னன்னா, என்னை யாரும் விரல் நீட்டி எந்தக் கேள்வியும் கேட்டுவிட முடியாது. இந்த சினிமாவில் இது எனக்குப் பெருமையும் தகுதியும் தரக்கூடிய விஷயமாக, கர்வமாகவே நினைக்கிறேன்.”