சினிமா
தொடர்கள்
Published:Updated:

“சூர்யா ‘நிஜமாகவே வித்தியாசமான ஒரு படம் பண்றோம்’னார்!”

தேவி ஸ்ரீபிரசாத்
பிரீமியம் ஸ்டோரி
News
தேவி ஸ்ரீபிரசாத்

ரொம்ப எளிமையான வார்த்தையில சின்னக் குழந்தைகளும் பாடுற மாதிரியான ஒரு லவ் ஸாங்தான் ‘ஓ பெண்ணே.’ நினைச்சது மாதிரியே எல்லா மொழிகளிலும் ரீச் ஆகிடுச்சு.

எப்போது தேவி ஸ்ரீபிரசாத்திடம் பேசினாலும், அந்த எனர்ஜி நமக்கும் தொற்றிக்கொள்ளும். ‘ராக் ஸ்டார் டி.எஸ்.பி’யாக இருந்தவருக்கு ‘புஷ்பா’ திரைப்படம் ‘பேன் இந்தியா ராக் ஸ்டார்’ என்று புரொமோஷன் கொடுத்திருக்கிறது. சென்னையில் உள்ள அவரது ஸ்டூடியோவில், ஆளுயரப் புகைப்படத்தில் நம்மை வரவேற்கிறார் இசைஞானி இளையராஜா. இசைக்கருவிகள் சூழ்ந்த தியானக்கூடம் போலப் பேரமைதி.

பக்கத்தில் இருந்த பியானோ ஒன்றில் பத்து பிலிம்பேர் விருதுகள் நியான் விளக்குகளின் வெளிச்சத்தில் மின்னுகின்றன. அதில், சமீபத்தில் இணைந்திருக்கும் விருதை ‘புஷ்பா’ கொடுத்திருக்கிறார். ‘‘எப்பவுமே நாம செய்யற வேலையை மக்கள் அங்கீகரிச்சு, ஒரு வெற்றியைக் கொடுக்கறதே நமக்குப் பெரிய விருது. அதன்பிறகு கிடைக்கும் மத்த அவார்ட்ஸ் எல்லாமே போனஸ்தான். பத்தாவது பிலிம்பேர் விருது ‘புஷ்பா’வுக்காகக் கிடைச்சது ரொம்ப ஸ்பெஷல். இதுக்கான விழா பெங்களூருல நடந்ததனால புனித் ராஜ்குமார் சாருக்கே அதை அர்ப்பணிச்சேன்” - ஆனந்தமாகிறார் டி.எஸ்.பி.

இப்போது இந்தியில் அஜய் தேவ்கான், சல்மான் கான், ரன்வீர் சிங்... தெலுங்கில் சிரஞ்சீவி - ரவிதேஜா படம், ‘புஷ்பா 2', தமிழில் ‘சூர்யா 42' என டாப் ஹீரோக்கள் படங்களில் டி.எஸ்.பி செம பிஸி. இந்தச் சூழலில் ‘ஓ பெண்ணே’ என்ற பேன் இந்தியா பாப் பாடல் ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார்.

“சூர்யா ‘நிஜமாகவே வித்தியாசமான ஒரு படம் பண்றோம்’னார்!”

``ராக் ஸ்டாரா இருந்த உங்களுக்கு இப்ப ‘பேன் இந்தியா ராக்ஸ்டார்’னு புதுப்பட்டம் கிடைச்சிருக்கு...’’

‘‘இந்த அன்புக்கு நன்றி. எந்தப் படம் பண்ணினாலும், எந்தப் பாட்டு பண்ணினாலும் அது மக்களுக்குப் பிடிச்சு, அவங்க இதயத்துக்குள்ள போனால்தான் அதுக்கு மதிப்பு இருக்கும். ஹீரோ இன்ட்ரோ சாங், குத்துப் பாடல், மெலடின்னு எல்லாப் பாடல்களுக்கும் அவ்ளோ அன்பு கொடுத்து சூப்பர் ஹிட்ஸ் ஆக்கிடுறாங்க. நான் ஸ்டேஜ்ல ஏறி பர்ஃபாம் பண்றப்ப, ‘ராக்ஸ் ஸ்டார்... ராக்ஸ் ஸ்டார்...'னு சொல்லியே ‘ராக்ஸ் ஸ்டார் டி.எஸ்.பி’ன்னு ஆகிடுச்சு. இங்கே பண்ணின ‘ரிங்கரிங்கா', ‘சீட்டிமார்', `டாடி மம்மி'ன்னு பாடல்கள் இந்தியிலும் வந்துச்சு. ‘புஷ்பா'வுக்குப் பிறகு பூஷன்குமார் சார் என்னை ‘பேன் இந்தியா ராக்ஸ்டார்'னு கூப்பிட்டு அதுவே அடைமொழியாகிடுச்சு. அவர் சொன்ன பிறகு, எல்லாருமே அப்படிச் சொல்லிச் சொல்லி அந்தப் பட்டத்தை மக்கள்கிட்ட கொண்டு சேர்த்திட்டாங்க. ஸோ, அவங்களுக்கும் ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ்.''

``இந்தியிலேயே இப்ப அரை டஜன் படங்களுக்கு இசையமைக்கிறீங்க. தெலுங்கு, தமிழிலும் பல படங்கள் கைவசம் வச்சிருக்கீங்க. அவ்வளவு பரபரப்பிலும் ‘ஓ பெண்ணே’ பாப் சாங் பண்ணணும்னு ஏன் தோணுச்சு?’’

‘‘மைக்கேல் ஜாக்சன், பிரிட்னி ஸ்பியர்ஸ், மடோனான்னு பலரும் நம் நினைவுகள்ல காலத்துக்கும் நிலைச்சிருக்காங்கன்னா, அவங்க பாப் மியூசிக் பாடி, ஆடினதாலதான். ஆனா, இந்தியாவுல அப்படியில்ல. படங்களுக்குத்தான் பாடல்கள் பண்றோம். அந்தப் பட கேரக்டர்களின் வெளிப்பாடாகத்தான் பாடல்கள் அமையுது. இந்த வகையில் என் இன்ஸ்பிரேஷன் இளையராஜா சார். என் அதிர்ஷ்டம், நான் படங்களுக்கும் பண்றேன், ஆல்பங்களும் பண்ணிட்டிருக்கேன்.

சென்னையிலதான் நான் படிச்சேன். வடபழனியில் இருந்து தி.நகருக்கு பஸ்ல போறப்ப, வழியில நிறைய போஸ்டர்ஸ் விற்பாங்க. அப்ப ஒரு மைக்கேல் ஜாக்சன் போஸ்டர் வாங்கினேன். அதை பத்திரமா வச்சிருந்து, நான் ஸ்டூடியோ கட்டினதும் பிரேம் செய்து மாட்டியிருக்கேன். அவர் பாடலைக் கேட்டுத்தான் மியூசிக் பண்ணணும், அதுக்கு ஆடணும், பாடணும்னு நினைச்சேன். அதனாலதான் ஸ்டேஜ்ல ஆடிக்கிட்டே பாடறேன். போட்டோகிராபி மாதிரியே எடிட்டிங்கும் என்னோட ஹாபி. எடிட் வரை உட்கார்ந்து ‘ஓ பெண்ணே’ பாடலைக் கொண்டு வந்துட்டேன். அதோட படப்பிடிப்பை ஸ்பெயின், ஆஸ்திரேலியா, அமெரிக்கான்னு மூணு நாடுகளில் நடத்தினோம்.

ரொம்ப எளிமையான வார்த்தையில சின்னக் குழந்தைகளும் பாடுற மாதிரியான ஒரு லவ் ஸாங்தான் ‘ஓ பெண்ணே.’ நினைச்சது மாதிரியே எல்லா மொழிகளிலும் ரீச் ஆகிடுச்சு. அதனாலதான் கமல் சாரை வச்சு பாடலை வெளியிட்டேன். இப்படியான முயற்சியை அவரும் எனர்ஜியா ஊக்குவிப்பார்.’’

“சூர்யா ‘நிஜமாகவே வித்தியாசமான ஒரு படம் பண்றோம்’னார்!”

`` ‘புஷ்பா’ல எல்லாப் பாடல்களும் வைரலாகியிருக்கு. ‘புஷ்பா 2’க்கு இன்னும் பெரிய எதிர்பார்ப்பு இருக்கு. இதனால உங்களுக்கு பிரஷர் அதிகமாகியிருக்குமே?’’

‘‘நாங்களே நினைச்சுப் பார்க்க முடியாத அளவுக்குப் பெரிய வெற்றியை ‘புஷ்பா’ கொடுத்திருக்கு. சுக்குபாய்க்கு (இயக்குநர் சுகுமார்) நன்றியைத் தெரிவிச்சுக்கறேன். அவரோடு ‘ஆர்யா’ படத்திலிருந்து ஒர்க் பண்ண ஆரம்பிச்சேன். அதிலும் அல்லு அர்ஜுன் சார்தான். எங்க காம்பினேஷன் எல்லாமே பிளாக் பஸ்டர்தான். சுக்குபாய்க்கு என் மீது நம்பிக்கை அதிகம். என்னை டார்லிங்னுதான் கூப்பிடுவார். ‘புஷ்பா 2’ வேலையை ஆரம்பிச்சு, கிட்டத்தட்ட பாதிப் படத்தை முடிச்சிட்டோம். நிச்சயம் ‘புஷ்பா 2’ ஆல்பமும் அதிரவைக்கும்.

என் குருக்களான எங்க அப்பா சத்யமூர்த்தியும், மாண்டலின் னிவாசன் அண்ணாவும் ‘உனக்கு பெஸ்டா தெரியறதுதான், உலகத்திலேயே பெஸ்ட்னு நினைச்சுக்கோ’ன்னு சொல்வாங்க. அப்படி பெஸ்ட்டா கொடுக்க முயற்சி செய்வேன். அதனாலேயே பிரஷர் ஏறுறதில்ல. என் இசையில் வரும் ஒரு பாடலை அது ‘ஊ சொல்றீயா’ மாதிரி குத்துப்பாடலாக இருந்தாலும் கூட, அந்தப் பாடல்வரி ரெடியானதும் எங்க அம்மாவுக்கும், என் தங்கச்சிக்கும் போட்டுக் காட்டி அவங்க கருத்து கேட்பேன். ‘இதை அம்மாவுக்கும் தங்கைக்கும் போட்டுக் காட்ட முடியாது’ன்னு தோணுச்சுன்னா, அந்தப் பாடலைக் கையில் எடுக்க மாட்டேன்.’’

``நீங்க தெலுங்கில் இசையமைத்த பல பாடல்களை தமிழ்ல மீண்டும் பயன்படுத்தியிருப்பீங்க. அதை இயக்குநர்கள் கேட்பாங்களா? இல்ல, நீங்களே கொண்டு வந்திடுறீங்களா?’’

‘‘ராஜா சார் பாடல்கள் கேட்டு வளர்ந்ததால என் பல பாடல்களை தமிழ்லதான் கம்போஸ் பண்றேன். சமீபத்திய ‘உப்பெண்ணா’வுல உள்ள ‘ஜலஜல...’பாடலும் தமிழ்ல எழுதி, அப்புறம் தெலுங்குல உருவானதுதான். நான் தெலுங்கா இருந்தாலும், வளர்ந்தது சென்னையிலதான். இயக்குநர்கள், ஹீரோக்கள் கேட்டுத்தான் தெலுங்கில் ஹிட்டான பாடல்கள், தமிழ்லேயும் வந்திருக்கு. உதாரணமா, ‘வில்லு’வில் பிரபுதேவா சார் கேட்டிருக்கார். ‘திருப்பாச்சி’யில் விஜய் சார் கேட்டதாலதான் ‘கட்டுக்கட்டு கீரைக்கட்டு’ வந்துச்சு. அதன் ஒரிஜினல், சிரஞ்சீவி சாரோட ‘சங்கர் தயாள் எம்.பி.பி.எஸ்’ல வந்த பாடல். அதான் வேணும்னு விஜய் சார் விரும்பினார்.

அதைப் போல பாலா சாரும் ‘மாயாவி’யில் கேட்டதாலதான் ‘காத்தாடி போல ஏன்டி’ பாடல் வச்சோம். தெலுங்கில் உள்ள அந்த டியூனை பாலா சார் கேட்டதும் எனக்கு ஆச்சரியம். ‘நீங்களா சார் அப்படி பாடல் கேட்குறீங்க’ன்னு கேட்டால், ‘ஏம்ப்பா, எனக்கு ரொம்பப் பிடிக்கும்பா’ன்னு ஒரிஜினல் தெலுங்குப் பாடலைப் பாடிக் காட்டினார். அதுவே தனி சந்தோஷத்தை ஏற்படுத்துச்சு. அதே போலதான் ‘டாடி மம்மி’யும் இந்தி வரைக்கும் போச்சு. சல்மான் பாய்க்கு ‘ரிங்கரிங்கா’வும் இந்திக்குப் போனது.

டியூனுக்கான பாடல் வரி போடுறப்ப, இசையமைப்பாளருக்கு அந்த மொழியும் தெரிஞ்சிருந்தால் இன்னும் பலம். எனக்குத் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் எல்லாம் எழுதப் படிக்கத் தெரியுறதாலதான் வரிகளிலும், உச்சரிப்பிலும் கவனம் செலுத்துறேன். பாடலாசிரியர்கள் சந்திரபோஸ் சாரும் (தெலுங்கு), விவேகா சாரும் என் வேலையை இன்னும் எளிதாக்கிடுவாங்க.''”

“சூர்யா ‘நிஜமாகவே வித்தியாசமான ஒரு படம் பண்றோம்’னார்!”

``பாலிவுட்ல எல்லாருமே இப்ப தென்னிந்திய டெக்னீஷியன்களை விரும்புறாங்க. ஆனா, இங்கே திறமைசாலி இசையமைப்பாளர்கள் நிறைய பேர் இருந்தும் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுலதான் அங்கே போய் ஒர்க் பண்றாங்க… ஏன்?’’

‘‘பாலிவுட்ல இப்ப சில வருஷங்களாவே, ஒரே படத்துக்குப் பல இசையமைப்பாளர்கள் இருக்காங்க. ஒரு படத்துக்கு ஒரு இசையமைப்பாளர் இருந்தால்தான் ஜீவன் இருக்கும். ஏன்னா, கதை கேட்ட பிறகு இல்லாத சிச்சுவேஷனுக்குப் பாட்டு வைக்கத் தோணும். இல்லனா, போர் அடிக்கற இடத்துல பாட்டு வைக்காமல், அதை வேற இடத்துக்கு நகர்த்துவேன். ஒருத்தரா இருந்தால்தான் அப்படி சுதந்திரம் கிடைக்கும். ஒரு படத்துக்கு நாலஞ்சு பேர் இசைமைக்கறதால, கதை தெரியாமல் பாட்டு போட்டுக் கொடுக்க வேண்டியதாகிடுது. பின்னணி இசையையும் வேற ஒருத்தர் செய்யறார். எதுவுமே படத்துடன் இயல்பா சேராமல்போயிடுது. இது சரியா, தப்பாங்கறது வேற விஷயம். ஆனா, தனித்தனிப் பாடல்களா பண்ணிக்கொடுத்ததும் ஹிட் ஆகிடுது. ‘ரிங்க ரிங்கா’ அப்படி ஹிட் ஆனதுதான்.

‘புஷ்பா’ இந்தியிலும் வெளியானதால, அதோட பின்னணி இசை எனக்குப் பெரிய பெயரை வாங்கிக்கொடுத்துச்சு. அதைப் பாராட்டி கரண் ஜோகர் சார் பெரிய மெசேஜ் அனுப்பியிருந்தார். அப்புறம் அவரைச் சந்திச்சேன். ரெண்டு மணி நேரம் பேசியிருப்போம். ‘ வள்ளி’ பாடலைச் சிலாகிச்சுப் பேசியதோடு, எனக்குப் பாடியும் காட்டினார். அவருக்கு அபார இசை அறிவு இருக்கு. ‘ஒரு பாடலின் ட்யூனைப் பாடும்போது மனசைத் தொட்டால்தான் அது நல்ல பாடல்’னு சொன்னார். இளையராஜா சார்கிட்ட இருந்து நானும் இதைத்தான் கத்துக்கிட்டிருக்கேன்.’’

`` ‘சிறுத்தை' சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கிற படத்துக்கு இசையமைக்கிறீங்க. மியூசிக்கல் அப்டேட் ஏதாவது தரலாமே?’’

‘‘சூர்யா சார் எப்பவும் என்னை நம்புறதுக்கு ஒரு தேங்க்ஸ் சொல்லிக்கறேன். சூர்யா சார் ரொம்ப நாளாகவே, ‘பிரதர், நாம வித்தியாசமான படம் ஏதாவது பண்ணணும்’னு சொல்வார். ‘சூர்யா 42’ பூஜையில் அவர் சிரிச்சுக்கிட்டே ‘நாம சொல்லிச் சொல்லி, நிஜமாகவே வித்தியாசமான ஒரு படம் பண்றோம்’னார். மோஷன் போஸ்டர் பார்த்து மிரண்டிருப்பீங்க. அதைவிட மிரட்டலா ஸ்கிரிப்ட்டை எழுதியிருக்கார் சிவா சார். அதுல நீங்க பார்த்ததைவிட நிறைய ஆச்சரியங்கள் காத்திருக்குன்னு உறுதியா சொல்லமுடியும். அதுல வரக்கூடிய சூர்யா சாரோட லுக், கெட்டப்களை நானும் பார்த்திருக்கேன். உங்களைப் போலவே இந்தப் படத்தைப் பார்க்க ஆவலா இருக்கேன். சூர்யா சாருக்கும் திஷா பதானிக்கும் ஒரு பாடல் போட்டுக் கொடுத்திட்டேன். அதை கோவா ஷெட்யூல்ல படமாக்கிட்டாங்க. மத்த பாடல்களும் ரெடியாகிட்டு இருக்கு.’’

``இப்பல்லாம் படத்தோட பாடல்களை மொத்தமா வெளியிடாமல், சிங்கிள் சிங்கிளா வெளியிடுறாங்க... அப்புறம், ‘லிரிக் வீடியோ’ன்னு பாடல் வரிகளை மட்டும் போட்டு ரிலீஸ் பண்றாங்களே?’’

‘‘இந்த டிரெண்டை ஆரம்பிச்சு வச்சது நான் தான். சிரஞ்சீவி சாரின் கம்பேக் படமான ‘கைதி நம்பர் 150'க்கு இசை வெளியீட்டைப் பெரிய அளவில் வைக்கணும்னு சிலர் சொன்னாங்க. ‘அப்படிப் பண்ணினா, ஒர்க்கவுட் ஆகாது. இப்ப டிரெண்ட் மாறிப்போச்சு’ன்னு சொன்னேன். ஏன்னா, எல்லாப் பாடல்களையும் ஒரே நேரத்துல கொடுத்தால் இப்ப ஜனங்களுக்கு அதைக் கேட்கறதுக்கு நேரமில்லை. ஒவ்வொரு பாடலா கொடுப்போம்னு சொன்னேன். சிரஞ்சீவி சாருக்கு என்மேல அதீத நம்பிக்கை. ‘மை பாய்... உனக்கு என்ன தோணுதோ அதைப் பண்ணு’ன்னார். ‘அம்முடு கும்முடு’ பாடலை ரிலீஸ் பண்ணினோம். ‘அந்தப் பாடல்தான் படத்துலேயே மெயின் ஸாங். அதை அப்புறமா கூட ரிலீஸ் பண்ணியிருக்கலாமே’ன்னுகூட சிலர் சொன்னாங்க. வர்றது நெத்தியடியா இருக்கணும். முதல்ல கொடுக்கறது பிடிச்சுப்போனால், அடுத்தடுத்து என்ன கொடுத்தாலும் ரசிப்பாங்க. இப்ப தமிழ்ல மட்டுமல்ல, இந்தியிலும் ஒவ்வொரு பாடலாகக் கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க!’’