Published:Updated:

இளையராஜா - ஓர் அலசல்... ஒரு பேட்டி!

Music Director Ilaiyaraaja Exclusive Interview
பிரீமியம் ஸ்டோரி
Music Director Ilaiyaraaja Exclusive Interview

ராஜா சார்கிட்ட ரொம்ப தில்லாவே ஒரு கேள்வி கேட்ருக்காங்க ..!

இளையராஜா - ஓர் அலசல்... ஒரு பேட்டி!

ராஜா சார்கிட்ட ரொம்ப தில்லாவே ஒரு கேள்வி கேட்ருக்காங்க ..!

Published:Updated:
Music Director Ilaiyaraaja Exclusive Interview
பிரீமியம் ஸ்டோரி
Music Director Ilaiyaraaja Exclusive Interview

மிழ் சினிமாவின் ஹீரோக்களுக்கு இணையாக இன்றைக்கு இசையமைப்பாளர் இளையராஜாவுக்கும் அறுபதடி கட் - அவுட்டுகள் வைக்கிறார்கள். படத்தின் பூஜை விளம்பரத்திலிருந்து நாளிதழ் விளம்பரம் வரை பெரிதாக இவரது முகத்தை இடம்பெறச் செய்கிறார்கள். இவரை இசையமைப்பாளராகப் போட்டாலே போதும், ஏரியாக்கள் விற்கும் படம் ஓகோவென ஓடும் என்று பயங்கர எதிர்பார்ப்போடு காத்துக்கிடக்கிறார்கள்.

இசையையே சுவாசித்து இசையையே உண்டு, இசையிலேயே வாழ்வதால்தான் இளையராஜாவால் இன்று இசை சாம்ராஜ்யத்தின் அரியணையில் அமர்ந்து, ஆலாபனை செய்து கொண்டிருக்க முடிகிறது.

மதுரையை அடுத்த பண்ணைபுரம் கிராமத்தில் பிறந்து... படித்துவந்த இளையராஜா, குடும்பத்தின் வறுமைச் சூழல் காரணமாகத்தான் ஆர்மோனியப் பெட்டியைத் தொட்டிருக்கிறார். அப்போதுதான் அந்தக் கலைஞனுக்கு இசையின் அறிமுகமே கிடைத்தது.

அடுத்து - கம்யூனிஸ மேடைகளிலும், நாடகக் கொட்டகைகளிலும் அவரது அண்ணன் பாவலர் வரதராசனோடு அந்தக் கலைஞனின் இசைப் பயணம் தொடர ஆரம்பித்திருக்கிறது!

அந்தப் பயணம்தான், வாழ்க்கை நிலையை உயர்த்துவதற்காக இளைய ராஜாவைத் தன் சகோதரர்களுடன் சென்னைக்குக் குடிபெயர வைத்திருக்கிறது!

பஞ்சு அருணாசலத்தின் 'அன்னக்கிளி' படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் இளையராஜா. கிராமத்திலிருந்து வந்தவர் என்பதால், அந்தக் காலகட்டத்தில் வந்த கிராமத்துப் படங்கள் அவருக்குப் பெரிதும் உதவின!

Music Director Ilaiyaraaja Exclusive Interview
Music Director Ilaiyaraaja Exclusive Interview

அடுத்து, 'சிகப்பு ரோஜாக்கள்' 'மூடுபனி' போன்ற க்ரைம், த்ரில்லர் படங்களில், அவரது மேற்கத்தியப் புலமையின் மூலம் அமைத்த இசை... ரசிகர்களை ஆங்கிலப் படங்களுக்கு இணையாகத் தமிழ்ப் படங்களைப் பேச வைத்தது!

தியாகய்யரின் கீர்த்தனையான 'மரிமரி நின்னே'யை 'சிந்து பைரவி' படத்தில் 'பாடறியேன், படிப்பறியேன்..' என்ற நாட்டுப்புறப் பாடலோடு கலந்து, ஒரு புதிய பரிமாணத்தைத் தமிழ் மக்களுக்கு அவரது கைவண்ணம் காட்டியது.

இப்படிப்பட்ட சாதனைகள் இளையராஜாவுக்கு எப்படிச் சாத்தியமானது? அவரது இசைக் குருவான ஜி.கே. வெங்கடேஷ் கூறினார்."என்கிட்டே வந்து சேர்ந்த புதுசுல அவனுக்கு ஆர்மோனியம் மட்டும்தான் வாசிக்கத் தெரியும். நான்தான் அவனை 'கிடார் கத்துக்கடா'ன்னு சொல்லி அனுப்பினேன்.

அதுக்கப்புறம் என்கிட்டே வேலை பார்க்கறச்சயே, அவனுடைய திறமையைக் கண்டு வியந்து போயிருக்கேன். இப்ப ரொம்ப டெவலப் ஆயிட்டான். கவிதை எழுதறாப்பலே... ஆர்மோனியத்துப் பக்கம் போகாமலே  நோட்ஸ் எழுதிக் கொடுத்துடறான்..." அடுத்து, இளையராஜாவின் உடன் பிறப்பான கங்கை அமரனைச் சந்தித்துப்  பேசியபோது... "அண்ணனோட சின்சியாரிடி, மியூஸிக்கில் புதிது புதிதாக ஏதாவது செய்து கொண்டிருக்க வேண்டுமென்கிற மனவேகம்... மொத்தத்தில் இசைக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டது... இதெல்லாம்தான் அண்ணன் இவ்வளவு தூரத்துக்கு வளர்ந்ததுக்குக் காரணம்..." என்றார். 

இசையமைப்பாளர் எஸ்.ஏ. ராஜ்குமாரைச் சந்தித்தபோது, அவரது கருத்து வேறுவிதமாக இருந்தது! 

"இளையராஜாவால் இந்த நிலையைச் சாதிக்க முடிந்ததற்கு முக்கிய காரணம், அவர் அறிமுகமான கால கட்டத்தில் பாரதிராஜா, பாலுமகேந்திரா, மகேந்திரன், பாக்யராஜ் என்று பல புதிய இயக்குநர்கள் வித்தியாசமான கற்பனைகளோடு வந்தார்கள். அது இளையராஜாவுக்குப் பெரிதும் உதவியது. இதுமாதிரியான வாய்ப்புகள் கிடைக்காத பட்சத்தில், எத்தனையோ இசையமைப்பாளர்கள் வீணாகிக் கொண்டிருக்கிறார்கள், தெரியுமா?" என்று முடித்துக் கொண்டார் ராஜ்குமார்.

எடிட்டரும், டைரக்டருமான லெனின், "இன்றைக்குத் தங்கள் கதைக்குத் தேவையான சூழலை, இசையமைப்பாளர்களிடம் சரியாகச் சொல்லி, அவர்களிடமிருந்து வேலை வாங்கும் திறமையுள்ள இயக்குநர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்! 

ராஜா, மற்றவர்கள் அரைகுறையாய்ச் சொன்னாலும் அதைப் புரிந்துகொண்டு, அவர்கள் நினைப்பதைவிட இரண்டு மடங்கு இசையில் கொண்டு வந்துவிடுகிறார்...

மற்ற இசையமைப்பாளர்களால் இந்த அளவுக்கு செயல்பட முடிவதில்லை..." என்றார். 

இளையராஜாவைப் பற்றி இன்னொரு கோணத்திலும் பேசப்படுகிறது. 

"பொதுவாக இளையராஜா யாரையும் மதிப்பதில்லை. டைரக்டர்களைக் கேவலப்படுத்துகிறார், அனைவரும் காலில் விழவேண்டும் என்று எதிர்பார்க்கிறார். அவருடைய பேச்சைக் கேட்காத தயாரிப்பாளர்களைப் படாத பாடு படுத்துகிறார்..." என்று வரிசையாய்ப் புகார்ப் பட்டியல்கள்...

அவரை வைத்துப் பல படங்களைத் தயாரித்து, இயக்கிய பெயர் சொல்ல விரும்பாத இயக்குநர் ஒருவர், "தன்னை விட்டால் இண்டஸ்ட்ரியில் வேறு நல்ல மியூஸிக் டைரக்டரே கிடையாது என்கிற ஆணவத்தில் நடந்து கொள்கிறார் இளையராஜா.

அவருடைய இஷ்டத்துக்குத் தேதிகளை மாற்றுகிறார். எனக்குத் தெரிந்த ஒரு பட கம்பெனி படம் முழுதையும் எடுத்து முடித்து விட்டு, இளையராஜா பாடல்கள் ரிக்கார்ட் பண்ணித் தரவில்லை என்பதற்காக, வட்டிக்குப் பணத்தைக் கொட்டிவிட்டுக் காத்திருக்கிறது" என்றார் கோபமாக! "இதற்கு இளையராஜாவை மட்டும் விரல் நீட்டிக் குற்றம் சாட்ட முடியாது” என்றார் ஜி.கே. வெங்கடேஷ். 

"இளையராஜா எத்தனை மறுத்தும் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள் விடாப்பிடியாக 'நீங்கள்தான் மியூஸிக் போடவேண்டும்' என்று கெஞ்சுகிறார்கள்! 'நீங்கள் எப்போது மியூஸிக் போட்டாலும் பரவாயில்லை' என்று வற்புறுத்துகிறார்கள். பாவமாக இருக்கிறது என்று இவனும் ஏற்றுக்கொண்டு, சிலருடைய ஏச்சையும் வாங்கிக் கட்டிக் கொள்கிறான்..." என்ற ஜி.கே. வெங்கடேஷிடம்,"இளையராஜா இசையமைக்கும் பல படங்களுக்கு எம்.எஸ். விஸ்வநாதன், கங்கை அமரன், நரசிம்மன் போன்றவர்கள்தான் ரீ ரிக்கார்டிங் பண்ணுகிறார்கள் என்று சொல்லப்படுகிறதே...?" என்று கேட்டோம் "உண்மைதான்" என்ற ஜி.கே. வெங்கடேஷ். ஆனால், அது எப்போதும் நடப்பது அல்ல. நெருக்கடியான சமயங்களின்போதுதான் நடக்கிறது. தவிர, சம்பந்தப்பட்ட படங்களில் அனைத்தும் இளையராஜாவின் ஸ்டைலில்தான் பின்னணி இசை அமைககப்பட்டிருக்கும்..." என்றார்.

இறுதியாய் இளையராஜாவை சந்தித்துப் பேச விரும்பினோம்.

பிரசாத் ஸ்டுடியோவில் அவரது தனி அறையில் கம்போஸிங்கில் இருப்பதாகச் சொன்னார்கள். உள்ளே நுழைந்தோம். 

Music Director Ilaiyaraaja Exclusive Interview
Music Director Ilaiyaraaja Exclusive Interview

 ஏதோ தியான மண்டபம் போல அமைதியான சூழ்நிலை.. அறை முழுவதும் விரிக்கப்பட்டிருந்த விரிப்புகள் மேல் ஆங்காங்கே நான்கைந்து திண்டுகள் போடப்பட்டிருந்தன. சுவரில் சேலம் மாயம்மா, ரமண மகரிஷியின் படங்கள்... அறையின் மையத்தில் ஒரு ஆர்மோனியப் பெட்டி வைக்கப்பட்டிருந்தது. அதற்குப் பின்னால் விரித்துப் போடப்பட்டிருந்த மான்தோல் ஆசனத்தில்... வெள்ளை வேட்டி ஜிப்பா சகிதம் சம்மணம் போட்டபடி இளையராஜா அமர்ந்து மியூஸிக் நோட்ஸ் எழுதிக் கொண்டிருந்தார். மெள்ள தொண்டையைச் செருமினோம். சத்தம் கேட்டுத் திரும்பியவர் நம்மை தீர்க்கமான ஒரு பார்வை பார்த்தார். வந்த விவரத்தைச் சொன்னதும், ஒரு சின்ன புன்முறுவல் பூத்தவர்...  "வேண்டாமே" என்றார்.

"சரி, பேட்டியாக வேண்டாம்... எங்களுக்குள்ள சந்தேகங்களை நிவர்த்தித்துக் கொள்ளலாம் அல்லவா?" என்றோம்.மீண்டும் ஓர் ஆழமான பார்வை!

"ஏன் பத்திரிகையாளர்களைப் பார்ப்பதைத் தவிர்க்கிறீர்கள்?" 

"பத்திரிகைகளில் நான் சொல்வதையா அவர்கள் எழுதுகிறார்கள்? அவர்களாகவே அதைத் திரித்து எழுதுகிறார்கள். அதனால்தான் வீணாக அதற்கு நேரம் செலவழிப்பது இல்லை..." 

"எல்லாப் பத்திரிகைகளுமா அப்படிச் செய்கின்றன?"

"இல்லை... ஒரு முறை நான் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் 'இசை என்பது எல்லோருக்கும், எல்லாவற்றுக்கும் பொதுவானது. ஒரு ஆடு 'ம்மே..' என்பதும், மாடு 'ம்மா' என்று அடிவயிற்றிலிருந்து குரல் கொடுப்பதும் கூட இசையின் ஒரு வடிவம்தான். தெருவில் நாய் எழுப்புகின்ற ஊளைச்சத்தத்தைக்கூட நான் ஸ்வரமாய் உணர்கிறேன். ஒரு கர்னாடக சங்கீதப் பாடகர் பாடுகின்ற பாடலைப்போல அதுவும் இசைதான்' என்று கூறியிருந்தேன். ஆனால், சம்பந்தப்பட்ட அந்த நிருபர் பத்திரிகையில் எழுதும்போது 'பாகவதர் குரலும், நாய் ஊளையிடுவதும் ஒன்றுதான்' என்று தலைப்பு தர... அந்தச் சம்பவம் என் மனத்தில் ஆழமான காயத்தை ஏற்படுத்தியது. அதனால்தான் நான் பத்திரிகையாளர்களைச் சந்திப்பதைத் தவிர்த்துவிடுகிறேன்.

"சப்ஜெக்டை மாற்ற விரும்பி, "ரமண மகரிஷி தமது பன்னிரண்டாவது வயதில் மரணபயம் ஏற்பட்டு அதிலிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ளத் தேடலை ஆரம்பித்தார் என்று சொல்கிறார்கள். சமீபகாலமாக நீங்களும் ஆன்மீகத்தில் அதிகமாக ஈடுபட்டிருக்கிறீர்கள்... எதனால்?" 

"ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான தேடல்கள். அதற்கான காரணங்களைச் சொல்ல முடியாது." 

"நீங்கள் தொடர்ந்து பதினைந்து வருடங்களாக சினிமாவில் நம்பர் ஒன்னாக இருந்து வருகிறீர்கள். உங்களின் இந்தப் பிரமிக்கத் தக்க வளர்ச்சிக்கு எது காரணமென்று நினைக்கிறீர்கள்?"

"அதைப் பற்றி நினைப்பதற்கெல்லாம் எனக்கு நேரமில்லை. என்னுடைய வேலையை நான் செய்து கொண்டிருக்கிறேன்."

"இண்டஸ்ட்ரியில் நீங்கள் இயக்குநர்களை டாமினேட் பண்ணுவதாகவும், மற்றவர்கள் உங்கள் காலில் விழ வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பதாகவும் சொல்கிறார்களே...  அது உண்மையா?”

கேட்டு முடித்து அவரையே பார்த்தோம்... மெள்ளக் கண்களை மூடிச் சிந்தனையில் ஆழ்ந்தார். நிமிடங்கள் கரைந்து கொண்டிருந்தன. மெள்ளக் கண் திறந்தவர், தனது வலது கையை நீட்டிய படி 'சொல்கிறவர்கள் சொல்லிவிட்டுப் போகட்டும்' என்பது போல சைகை செய்துவிட்டு எழுந்தார்.

ஆர்மோனியத்தின் மேலிருந்த மியூஸிகல் நோட்ஸை எடுத்துக் கொண்டு நடக்க, அவரை மெளனமாய்ப் பின் தொடர்ந்தோம்.

ரிக்கார்டிங் தியேட்டரை அவர் நெருங்கியதும் உள்ளே அதுவரை பேசிக் கொண்டிருந்தவர்கள், பேச்சை நிறுத்திய படி ஓரமாய் ஒதுங்கி நின்றார்கள்.

அந்தச் சூழ்நிலையே ரொம்பவும் அமைதியாய் மாற... மிக்ஸிங் ரூமுக்குள் இளையராஜா நுழைந்தார். பின்னால் நாமும்..!

மிக்ஸர் எக்யூப்மெண்டுக்குப் பக்கத்தில் ஒரு சுழல் நாற்காலி போடப்பட்டு, அதிலும் மான்தோல் விரித்து வைக்கப் பட்டிருந்தது. உள்ளே நுழைந்த இளையராஜா அந்தச் சுழல் நாற்காலியில் போய் அமர்ந்து கொண்டு கண்ணாடித் தடுப்பு வழியாய் தியேட்டரைப் பார்க்க... வாத்தியக் கலைஞர்கள் ரெடியானதை கைவிரலால் சமிக்ஞை செய்தார் உள்ளிருந்த மியூஸிக் கண்டக்டர்.

அடுத்த நிமிடம்... இளையராஜா மெள்ளத் தன் பக்கத்திலிருந்த தலைமை ஒலிப்பதிவாளரிடம், "டேக் போகலாம்" என்றார்.

அனைவரும் ரெடியாக... 1,2,3,4 என்று கண்டக்டர் சொல்ல, கண்ணாடித் தடுப்புக்குப் பக்கத்திலிருந்த மாக்னடிக் டேப் ஓட ஆரம்பித்தது.

அடுத்த நிமிடம்... காவேரிப் பிரவாகமாய்ச் சுழித்துக்கொண்டு ஓடிய நாத வெள்ளத்தில் இளையராஜா தன்னை மறந்தது மட்டுமல்ல, மற்றவர்களையும் அந்த இன்பத்தை உணரவைத்தார்..!

ரு முறை ஜப்பானுக்கு இளையராஜா போயிருந்தபோது, அங்கே எலெக்ட்ரானிக்ஸ் வாத்தியக் கருவிகள் தயாரிக்கப்படும் தொழிற்சாலைக்கு விசிட் செய்தாராம். தங்களின் லேட்டஸ்ட் கண்டுபிடிப்பான எலெக்ட்ராணிக் வாத்தியக் கருவியை இளைய ராஜாவிடம் காட்டினார்களாம். அத்த ஒரே வாத்தியக் கருவியில் பல வாத்தியக் கருவிகளை உபயோகித்து எடுத்த 2000 எஃபெக்ட்ஸ் கம்ப்யூட்டரின் மூலம் பதிவு செய்யப்பட்டிருந்தது.

அதை வாசித்துப் பார்த்துக் கொண்டிருந்த இளையராஜா... சிறிது தேசத்தில் கிளாஸிக்கல் மியூஸிக்கையும், வெஸ்டர்ன் மியூஸிக்கையும் இணைத்து அந்த வாத்தியக் கருவியில் இல்லாத ஒரு புது எஃபெக்ட்டை 2001 - வதாகக் கண்டு பிடித்து வாசிக்க... ஜப்பான் இன்ஜினியர்கள் ரொம்பவும் பிரமித்துப் போய்விட்டார்கள்!

ளையராஜா ரிலாக்ஸ் பண்ணுவது என்பதே ஒவ்வொரு பெளர்ணமிக்கும் சேலத்துக்குச் சென்று மாயம்மாவைத் தரிசிப்பதும், புரவிப்பாளையம் சாமியைப் பார்ப்பதும், ரமண மகரிஷி ஆசிரமம் செல்வதும்தான்! சில சமயங்களில் ஒரே ஒரு நாள் ஓய்வு கிடைக்கும்போது திருவண்ணாமலையில் இருக்கிற ரமணமகரிஷி ஆசிரமத்துக்கு மட்டும் போய் தியானம் செய்துவிட்டு வந்துவிடுவாராம்.

- ந. சண்முகம்

அட்டை வண்ணப்படம்: ஆர். கிருஷ்ணா

(16.12.1990 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் இருந்து...)
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism