பிரசாத் ஸ்டூடியோவின் ஏ.ஸி. அறைக்குள் ரொம்பவும் அமைதியாக இருந்தார் அந்த எளிய மனிதர். ஏகப்பட்ட திரையுலகப் பிரமுகர்கள் பாராட்ட வந்திருந்தனர். ரொம்பவும் பரபரப்போடு இருந்தவர்கள், பாராட்ட வந்திருந்தவர்கள்தான்.
ஆனால், அவரோ அமைதியாக, ஆர்ப்பாட்டமில்லாமல் 'இதெல்லாம் சர்வ சாதாரணம்' என்கிற மாதிரியான ஒரு நிலையிலிருந்தார், 'சிந்துபைரவி'யின் சிறந்த இசைக்காக அகில இந்திய அளவில் சிறந்த இசையமைப்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அந்த மனிதர் - இளையராஜா.

'சிந்துபைரவி'யின் இயக்குநர் கே.பாலசந்தரும், அகில இந்திய அளவில் சிறந்த பாடலாசிரியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாடலாசிரியர் வைரமுத்துவும் ஒருசேர வாழ்த்த வந்தனர். மூன்றாவதாக வந்தவர், இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன். பாலசந்தரும் வைரமுத்துவும் மாலையிட்டுப்பாராட்ட, எம்.எஸ்.வி-யைக் குனிந்து வணங்கினார் இளையராஜா.
அந்த அறைக்குள் இளையராஜாவின் குருநாதரின் வண்ணப் படம் பெரிய அளவில் இருந்தது. சுற்றிலும் மாலைகள், எலுமிச்சம் பழங்கள்... அறையெங்கும் ரோஜா இதழ்கள் இறைந்து கிடந்தன.
சமீபத்தில் இளையராஜா இசை அமைத்த 'ஹவ் டு நேம் இட்?' என்கிற எல்.பி. ரிக்கார்டை 'எக்கோ' இசைத்தட்டு நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. ஆனால், இது கர்னாடக இசைப்பிரியர்களையோ, மேல் நாட்டு இசை ரசிகர்களையோ, இரண்டுமே இல்லாமல் இளைய ராஜாவின் ரசிகர்களையோ முழுமையாகத் திருப்திப்படுத்துமா என்கிற சந்தேகத்தைக் கேட்டபோது...

''இந்த 'ஹவ் டு நேம் இட்?' இசைத்தட்டில் அமைந்துள்ளவை ஒன்பது தனித்தனி இசைப்பகுதிகள். இவை ஒவ்வொன்றும் இசை உலகத்துக்கு இசைக்கலைஞன் ஒருவன் எழுப்பும் கேள்விகள்!என்னுடைய தீர்மானம் எல்லாம் இசை என்பது ஒன்றுதான். அதைக் கர்னாடகம் என்றோ, மேற்கத்திய இசை என்றோ, ஜாஸ் என்றோ, கிராமியம் என்றோ, டப்பாங்குத்து என்றோ தரம் பிரித்துச் சொல்வது சரியில்லை.
ஓர் ஓவியன் எத்தனையோ வண்ணங்களைக் கலந்துதான் ஓர் ஓவியத்தைத் தீட்ட(வேண்டும்)முடியும். எந்த ஓவியனும் ஏழு வண்ணங்களில் சிவப்பு வண்ணத்தை மட்டும் உயர்ந்தது என்று சொல்வதுமில்லை; வாதிடுவதும் இல்லை. ஆனால், நாமோ நமது கர்னாடகம் மட்டுமே உயர்ந்தது என்றும், இந்துஸ்தானிதான் சிறந்தது என்றும் எண்ணிக்கொண்டு வித்தியாசங்களை வளர்த்து, பெரிய வெளி நோக்கை விட்டுவிட்டோம். அதனால் இசைக்கு எந்தத் தாழ்வும் இல்லை; உயர்வும் இல்லை. ஒன்றை உயர்ந்தது என்று சொல்வதாலேயே மட்டும், சொல்லப்படுகின்ற பொருள் உயர்ந்ததாக ஆகிவிடப் போவதில்லை. சொல்லுகின்றவன் கீழே இருக்கிறான் என்பதைத்தான் அது உணர்த்துகிறது.
என்னைப் பொறுத்தவரையில், எல்லாமே சப்தங்கள்தான். எல்லா சப்தங்களும் எனக்கு ஒன்றுதான். இதற்கு நான் எப்படிப்பெயர் சூட்டுவது?
இதில் 'ஸ்டடி ஃபார் வயலின்' என்கிற பகுதி வருகிறது. வெஸ்டர்ன் மியூஸிக்கோடு வயலின் சிங்க்ரனைஸ் ஆகி இழைந்து, பரந்து பரவிப் படருகிற அபூர்வமான 'பிட்' இது. பிரபலமான வயலின் வித்வான்களுக்கே இது ஒரு சவால்!

இந்த 'ஹவ் டு நேம் இட்?' - அணை கட்டி முடித்த பிற்பாடு, இந்த இடத்தில் கட்டியிருக்கலாம், இது ஓட்டை என்று சொல்வது மாதிரியான விமர்சனத்துக்கோ, ஆராய்ச்சிக்கோ அல்ல! கேட்பவர்கள் உள்ளத்தில் அது எந்த மாதிரியான உணர்வை உண்டு பண்ணுகிறதோ, அந்த உணர்வுதான் இந்த இசையின் மூலமாக நான் கொண்டு வர முயற்சித்திருப்பது'' என்கிறார் இளையராஜா.
தென்னகத்திலேயே... ஏன், இந்தியாவிலேயே கம்ப்யூட்டர் கருவியின் மூலம் ரிக்கார்டிங் செய்து வருகிறார் இளையராஜா.
எல்லாவிதமான இசைக்கருவிகளின் இசையையும் ஒலிக்கச் செய்து, ஒரு பாடலையே ரிக்கார்டிங் செய்துவிடும் அளவுக்கு மிக நவீனமான கம்ப்யூட்டர் இது.
பேச்சு 'சிந்துபைரவி' இசை பற்றித் திரும்புகிறது.''பரிசுகளும் பாராட்டுகளும் என்னைப் பாதிப்பதில்லை. பரிசு, விருது கிடைக்கும்னு எதிர்பார்த்து சிந்துபைரவிக்கு இசையமைக்கலே. என்றாலும், இந்த விருதின் மூலம் இந்திய அரசாங்கம் சரியான ஒரு படத்தின் இசைக்குப் பரிசு கொடுத்திருக்கிறது.
ஏன் தெரியுமா... இதுவரையிலும் எத்தனையோ சாகித்யகர்த்தாக்கள் இந்த மண்ணிலே சாகித்யங்கள் செய்திருக்கிறார்கள். 'ஆரோகணமும், அவரோகணமும் இணைந்தால் தான் சாகித்யமே' என்கிற கருத்தை, சிந்துபைரவியில் வரும் ஆரோகணப் பாடலான 'கலைவாணியே' என்ற பாடல் மாற்றியிருக்கிறது.
எல்லாமே எனது செயல் அல்ல. இளையராஜா என்பவன் ஒரு கருவி.
எனக்குள் இருந்துகொண்டு என்னை எவரோ இயக்கிக் கொண்டிருக்கிறார்களே... அவர்களது செயல்.
இது அவர்களது வெற்றி. அவ்வளவுதான்..!''
- இரா.வேலுச்சாமி