Published:Updated:

“ஹீரோவின் பாப்புலாரிட்டியை வைத்தே பாடலின் வெற்றி மதிப்பிடப்படுது!”

லியோன் ஜேம்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
லியோன் ஜேம்ஸ்

இசை

“ஹீரோவின் பாப்புலாரிட்டியை வைத்தே பாடலின் வெற்றி மதிப்பிடப்படுது!”

இசை

Published:Updated:
லியோன் ஜேம்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
லியோன் ஜேம்ஸ்

புன்னகைக்கும் கண்கள், சிரிக்க மறக்காத உதடுகள்... இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் ஹீரோபோலவே இருக்கிறார். இன்றைக்கு வரைக்கும் ‘கதைப்போமா' பாடல் காதலர்களின் காலர் டியூனாகக் கொஞ்சுகிறது.

“சின்ன வயசுலருந்தே பியானோ, கீபோர்டுனு வாசிச்சுட்டு இருந்தேன். பள்ளி, கல்லூரி எங்கே பார்த்தாலும் விழாக்களில் கலந்துகொண்டு பாடுவேன். இசையும் பாடுவதும் தொடர்ந்துக்கிட்டே இருந்தது. இசையோடுதான் பயணம் செய்யப் போறேன்னு எப்படியோ தெரிஞ்சுடுச்சு. ஏ.ஆர்.ரஹ்மான்கிட்டே என் அப்பா மேனேஜராக இருந்தார். எப்பவும் ஈஸியா ரஹ்மானைப் பார்க்க முடியும். அவரோட புகழ், அவர் அதைத் தலையில் ஏத்திக்காமல் இருக்கிறதெல்லாம் சின்னக் குழந்தையாக இருந்தபோதே கூட இருந்து பார்த்திருக்கேன். அதுவும் பாதித்திருக்கலாம். அவரோட பாதையில் நாமும் போகணும்னு நினைச்சிருக்கேன். விளைவு, ஒரு இசையமைப்பாளராக உங்களோடு பேசிக்கிட்டு இருக்கேன்.” நிதானமாகப் பேசுகிறார் லியோன் ஜேம்ஸ்.

“ஹீரோவின் பாப்புலாரிட்டியை வைத்தே பாடலின் வெற்றி மதிப்பிடப்படுது!”

“ஒரு நல்ல பாடல் அமைவது எப்படி?”

“ஒவ்வொரு பாடலையும் ரசிச்சுத்தான் ஆரம்பிக்கிறோம். நல்ல மியூசிக் வரணும்னு ஆர்வம் இருந்துக்கிட்டே இருக்கும். பிறகு, பாடலின் வெற்றி என்பது படத்தோட சக்சஸ், படம் வெளியாகிற நேரம், சூழலோட சேர்ந்து அமையும். நாம் என்னதான் பார்த்துப் பார்த்து செய்தாலும் மீதி எல்லாமும் கடவுள் கையில் இருக்கு என்றுதான் சொல்லவேண்டி வரும். இப்படிப் பார்த்தால் இளையராஜா, ரஹ்மானெல்லாம் ‘லெஜண்ட்’னு சுலபமாகச் சொல்லிவிடலாம். நம்ம தமிழ் மக்களின் அன்றாட வாழ்க்கையில் இசை ஊடுருவி இருக்கிறதைப் பார்த்தாலே தெரியும். ஒவ்வொரு பாடலையும் ரசிச்சு செய்தாலே போதும். ஒரு பாட்டு பண்ணும்போது நிச்சயம் நல்லா வந்துடும்னு தெரியும். ஹிட் ஆகிடும்னு யூகிக்கிறது கஷ்டம். நான் ஒரு பாடலிலிருந்து இன்னொரு பாட்டு மாறுபட்டு இருக்கணும்னு மட்டும்தான் நினைப்பேன். ‘மறப்பதில்லை நெஞ்சே’ பாட்டெல்லாம் இப்படி வந்ததுதான்.”

“ ‘கதைப்போமா’ பாட்டு இப்படி ஹிட்டடிக்கும்னு யூகித்தீர்களா?”

“இப்படியான நல்ல காதல் பாடல்களுக்குப் பெரிய முன்னுதாரணங்கள் இருக்கு. நல்ல காதல் பாடல்கள் அதிகமாகவே தாக்குப்பிடிக்கும். அந்தப் பாட்டு இவ்வளவு ஹிட் ஆகும்னு நினைக்கவே இல்லை. ஆனால் நிச்சயமாக மக்களுக்குப் போய்ச் சேரும்னு நினைச்சேன். போடுகிற எல்லா பாட்டும் எல்லாருக்கும் பிடிக்கும் என்று சொல்லவே முடியாது. சமயங்களில் உட்காருகிற வரைக்கும், என்ன ராகத்தில் போடப்போறோம்னுகூட தெரியாது. அந்த ராகம் எங்கே ஆரம்பித்து, எப்படி நம்ம கைக்கு வந்தது என்றுகூட அறிய முடியாது. ரொம்ப உட்கார்ந்து பண்ணின பாட்டுக்கூட ‘ஓகே’ என்ற அளவில் ஆகியிருக்கு. இந்த மாதிரி பெரிய ஹிட்டடிக்கிற பாட்டுக்கு கம்மியான நேரம்தான் உட்கார்ந்து போட்டிருப்போம். அதிகபட்சமாக பத்து நிமிஷத்தில் வந்த டியூன்கூட ஹிட்டானதை நான் பார்த்திருக்கேன். நானே ஒரு ரசிகனாக மாறி அந்தக் கணங்களுக்காகக் காத்திருப்பேன். அது ஒரு மேஜிக். ஒரு பாடல் செறிவு அடைவதற்கு மிக்ஸிங், மாஸ்டரிங்னு சில விஷயங்களும் இருக்கு. கடைசியாக எப்படியோ இறைவன் வழியாக வந்து சேர்ந்தது என்றுதான் முடிக்கிற மாதிரி இருக்கும்.”

“ஹீரோவின் பாப்புலாரிட்டியை வைத்தே பாடலின் வெற்றி மதிப்பிடப்படுது!”

“மற்ற இசையமைப்பாளர்களின் இசையைக் கேட்க வித்தியாசமாக உணர முடியுதா?”

“நான் முதற்கொண்டு எல்லோரும் புதுமையைத் தேடுறோம். அது ரசிக்கும்படியாக இருக்கான்னு மக்கள்தான் சொல்லணும். நான் படைப்பாளி என்பதோடு நல்ல ரசிகனும்கூட. இங்கே சமயங்களில் பாடலின் வெற்றி என்பது ஹீரோவின் பாப்புலாரிட்டியை மட்டும் வைத்து மதிப்பிடப்படுகிறது. ‘இந்த மாதிரி இதுக்கு முன்னாடி கிடையாது’னு சொல்ற மாதிரி இன்னும் பாடல்கள் வரணும். மக்களின் அங்கீகாரத்துக்காகக் காத்திருக்கத்தான் வேண்டும். அந்தக் காத்திருப்பு நீண்டுவிடாமல் இருக்க, கடவுளின் அருள் தேவைப்படும். அவ்வளவுதான்.”