Published:Updated:

“மக்கள் எனக்கும் நாற்காலி கொடுத்திருக்காங்க!”

ஷான் ரோல்டன்
பிரீமியம் ஸ்டோரி
ஷான் ரோல்டன்

இசை

“மக்கள் எனக்கும் நாற்காலி கொடுத்திருக்காங்க!”

இசை

Published:Updated:
ஷான் ரோல்டன்
பிரீமியம் ஸ்டோரி
ஷான் ரோல்டன்

“மக்கள் மனசில் என்ன இடம் இருக்கோ, அதுதான் என் இடம். இன்னிக்கும் என் பாடலைப் பற்றிப் பேசுறவங்க, நினைக்கிறவங்க மனசுதான் என் இடம். சினிமா ஒரு கூட்டு முயற்சி. என்னுடைய உழைப்பு அதில் நிறைவாக இருந்திருக்கு. பணியில் கொஞ்சமும் மாற்றுக் குறையாமல் இருந்துவருவதுதான் என் அம்சம்.” ஜன்னல் கம்பி பிடித்து தூரத்தில் திரளும் மேகங்களைப் பார்த்துவிட்டுத் திரும்புகிறார் இசையமைப்பாளர், பாடகர் ஷான் ரோல்டன். தமிழ் சினிமாவின் பேசப்படுகிற இசையமைப்பாளர். ‘ஜோக்கர்', ‘பவர் பாண்டி’ தாண்டி இப்போது ‘ஜெய் பீம்’ வரைக்கும் வந்திருக்கிறார்.

“பெரிய எழுத்தாளர் குடும்பத்திலிருந்து வந்தவர் நீங்க. ஆனா, இசைக்கு வந்துட்டீங்க...''

“தாத்தா சாண்டில்யன் பெரிய எழுத்தாளர். ஆனால், அவரே நல்லாப் பாடுவார். மேடையில் பாட முடிகிற அளவுக்கு அவருக்கு ஞானமிருந்தது. அப்பாவும் பாடுவார். தாத்தாவுக்கு எழுத்தில் இருந்த சுதந்திரம் பிடித்துப்போய் முழுநேர எழுத்தாளராக மாறிவிட்டார். சின்ன வயதிலிருந்தே இசையை நான் விரும்பி வந்திருக்கேன். இசை ஃபேன்டஸி இல்லை. அதிலிருக்கிற மந்திரத்தன்மை, பரவசநிலைக்கு பக்கத்தில் போற விதம்னு எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. முழுக்க முழுக்கப் பொருளுக்காகவோ, யாருக்கோ கட்டுப்பட்டோ இதைச் செய்யவில்லை. பாரம்பர்யமாகவே இந்த வசீகரிப்பு நடந்துக்கிட்டே இருக்கு. அப்புறம் ஒரு கட்டத்தில் தேடலாகவும் மாறி நிக்குது.”

“நல்ல கதைகளையே தேடுறீங்க...”

“இப்பவெல்லாம் பிடிச்ச கதையோடு, அந்தத் தயாரிப்போட தொடர்ந்து இருக்கேன். ஒரே நேரத்தில் நாலைந்து படங்களைக் கைகொள்ளாமல்வெச்சுக்கிட்டு தரத்தைக் குறைச்சுக்க விரும்பவில்லை. ‘ஜோக்கர்' பண்ணும்போது கிராமத்துக் கலைஞர்களிடமே பாடலைப் பதிவு செய்யலாம்னு சொன்னேன். இயக்குநர் ராஜூ முருகனுக்குச் சின்ன சந்தேகம் இருந்தது. தேசிய விருது வரைக்கும் அந்தப் பாடல் போனபோது எல்லோருக்கும் ஆச்சர்யமாக இருந்தது பாருங்க! இங்கே நட்சத்திர ஜொலிப்புதான் அதிகமாக இருக்கு. குருசோமசுந்தரம் என்கிற நடிகனை ‘ஜோக்க’ரில் பார்த்தவங்க பிரமாதமான நடிகர்னு நினைச்சாங்க. ஆனால், அதற்குப் பிறகு அவரைத் தொடர்ந்து பயன்படுத்துகிற நிலைமையில் தமிழ் சினிமா இல்லை. அவரை உபயோகப்படுத்த வழியில்லாமல் திணறிக்கிட்டு இருக்கோம். இதெல்லாம் எனக்கு ஒரு வருத்தம்.”

“மக்கள் எனக்கும் நாற்காலி கொடுத்திருக்காங்க!”

“சினிமாவில் எப்போதும் ‘அந்தக் காலத்துல பாட்டெல்லாம் பிரமாதமாக இருக்கும்' என்ற வார்த்தைகள் திரும்பத் திரும்பக் கேட்டுக்கிட்டே இருக்கு. இதில் இருக்கிற உண்மை என்ன?”

“வூடி ஆலன் இதையே ஒரு படம் மாதிரி எடுத்திருந்தார். டைம் மெஷினைப் பயன்படுத்தி பின்னோக்கிப் போனால், ஒவ்வொரு காலத்துலயும், 'முன்னாடி நல்லா இருந்தது'ன்னு சொல்லிக்கிட்டே இருப்பாங்க. அதை நாம் பெரிசாக எடுத்துக்க வேண்டாம். ஆனா, முன்னாடி நல்ல சினிமாவுக்குத் திரைக்கதைதான் அச்சாணின்னு நல்லா புரிஞ்சுக்கிட்டாங்க. ஒரு இசையமைப்பாளரின் முதல் கடமை அவ்வப்போது தன்னை ஒரு பரிசோதனையாக்கிக்கொள்வதுதான். இசையில் நானறியாத தருணங்களைக் கைப்பற்றும்போது பரவசம் கிடைக்கும். அது ஒருபோதும் இன்னொருவருக்குச் சட்டென்று விளங்கக் கூடியதில்லை. ஆனால், உண்மையில் யதார்த்தமான ஒரு பாடல் பிறந்து வெளிவருகிற சூழல், உங்கள் முகத்தைக் கண்ணாடியில் பார்ப்பதுபோல் எளிமையானது. அப்படிப் புரிஞ்சு நின்றதால்தான் இன்னிக்கும் எம்.எஸ்.வி., இளையராஜா, ரஹ்மான் போன்றவர்கள் மேதைகளாக உணரப்படுகிறார்கள்.”

“ஒரு நல்ல பாடலை உணர்வது எப்படி?”

“நாம் நல்ல சங்கதிகளைப் போட்டு டியூன் போட்டுவிடுவோம். அது இயக்குநர்களை அசைச்சிடும். அப்படியே அதில் இன்னும் கவனம் செலுத்திக் கொண்டு போயிடணும். சில நேரங்களில் தாண்டிச் செய்யலாமே என்கிற சுதந்திரம் கிடைக்கும் பாருங்க.... அங்கே புகுந்து விளையாடலாம். மக்கள் சில நாற்காலிகளைக் கொடுப்பாங்க. அந்த நாற்காலியை எனக்கும் கொடுத்திருக்காங்க. அவ்வளவுதான். நல்லதாகச் செய்யலைன்னா இன்னொரு நாள் என்னை எழுந்திருக்கச் சொல்லி இன்னொருத்தக்குக் கொடுப்பாங்க. சில ஏ.எம்.ராஜா பாடல்களைக் கேட்கும்போது அதன் உச்சம் எனக்குத் தெரியும். ‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி' எல்லாம் டியூனைத் தாண்டியது. சங்கதி தாண்டியது. ஆன்மாவைத் தாண்டி நிற்கும். இப்படி உணர்வு ததும்பும் பாடல்களை நீங்களும் உணர முடியும்.”