Published:Updated:

“இசையோடு பின்னப்பட்ட மொழி தமிழ்!”

சித்துகுமார்
பிரீமியம் ஸ்டோரி
சித்துகுமார்

இசை

“இசையோடு பின்னப்பட்ட மொழி தமிழ்!”

இசை

Published:Updated:
சித்துகுமார்
பிரீமியம் ஸ்டோரி
சித்துகுமார்

“சும்மா வாங்க பேசலாம்.... நேர்காணலாக அமைஞ்சா வெச்சுக்கலாம்.” வெளிப்படையாகப் பேசுகிறார் இளம் இசையமைப்பாளர் சித்துகுமார். இயக்குனர் சசியின் ‘சிவப்பு மஞ்சள் பச்சை'யில் அத்தனை பாடல்களிலும் புதுமையையும், கொண்டாட்டத்தையும் கொண்டுவந்து சேர்த்தவர்.

“மதுரையில் மிடில் கிளாஸ் ஃபேமிலி. அதிகபட்சம் சார்ட்டட் அக்கவுன்டன்ட் ஆகியிருக்கலாம். ஆனால், மனசுக்கு இசைதான் பிடித்தமானதாக இருந்தது. ரவிவர்மன்கிற நண்பர்தான் ‘உனக்கு இசையில் ஆர்வம் இருக்கு. பாட்டு வரும். சூட்சுமம் கத்துக்க... போதும்’னு சொன்னார். அவருக்குத்தான் நன்றி சொல்லணும். இல்லேன்னா ஒரு கம்ப்யூட்டர் இன்ஜினீயராக இருந்திருப்பேன். சவுண்ட் இன்ஜினீயரிங் படிச்சுட்டு இன்டர்ன்ஷிப் செய்யும்போது, தனிஷ் பாக்ஸியின் நட்பு கிடைத்தது. மும்பையில் அவருடன் உதவியாளராக மூணு வருஷம் இருந்தேன். இசையின் நுணுக்கங்களை அறியத்தந்த இடம் அதுதான். என்னுடைய தனிப்பாடல் ஒன்றைப் பார்த்துவிட்டு இயக்குநர் சசி என்னைத் திரைப்படத்துக்காக அழைத்தார். எப்பவும் எளிமையாக என் இசை எல்லோருக்கும் போய்ச் சேரணும்னு நினைப்பேன். இளையராஜா, ரஹ்மான் இப்படி எல்லார்கிட்டேயும் ஆழமாகப் பார்த்தால் இந்த அருமையான எளிமை தெரியும். ஆனால், எனக்கு சினிமாவுக்கு வரணும்னு தூண்டுதலாக இருந்தது யுவன் சங்கர் ராஜாவின் இசை.’’ மேலும் தொடர்கிறார் சித்துகுமார்.

“ஒரு படத்தைத் தேர்ந்தெடுப்பது எப்படி?”

“அவர்களும் நம்மை முதலில் தேர்ந்தெடுக்கணும். நமக்கு இதில் என்ன வரைக்கும் ஸ்கோப் இருக்குன்னு பார்க்கலாம். இப்ப ‘ஆனந்தம் விளையாடும் வீடு'ன்னு படம் பண்ணிக்கிட்டு இருக்கோம். உறவுகளுக்கும் உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் தருது. தீர்க்கமான பாடல்களுக்கு இடமிருக்கு. இப்ப இருக்கிறது நல்ல சீஸன். எல்லோருமே புதுமையைத் தேடுகிறார்கள். ஜனரஞ்சகமாகவும், தரமாகவும் கொடுக்க நினைக்கிறது சுலபமான காரியம் இல்லை. அதற்கான மெனக்கெடல்தான் இங்கே எல்லாமே. இங்கே எல்லோருமே அதற்கான வேலைகளில்தான் ஈடுபட்டுட்டிருக்கோம். வரக்கூடிய புதுமை உங்களுக்குத் திறமை இருந்தாத்தான் கூட வரும்.”

“இசையோடு பின்னப்பட்ட மொழி தமிழ்!”

“சக இசையமைப்பாளர்களையும் ரசிக்கிற மனசு எல்லோருக்கும் இருக்குமா?”

“எனக்கு இருக்கு. என் வரைக்கும்தானே அதைச் சொல்ல முடியும்... ஒவ்வொருத்தர் கொடுப்பதையும் மக்கள் விரும்பாமல் இத்தனை பேர் வந்திருக்க முடியுமா? அந்த இசை உண்மையிலேயே மேன்மையானதுதானா என்பது கேள்விக்கு அப்பாற்பட்ட விஷயம். ஆனால், இளையோர் சுமுகமாக இருந்து பழகிக்கொள்கிறோம். நிச்சயம் ரசித்துக்கொள்வதும், பாராட்டிக்கொள்வதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. ரஹ்மான் ‘ஜோதா அக்பர்' படத்தில் ‘க்வாஜா மேரே க்வாஜா’ன்னு ஒரு பாட்டு போட்டிருப்பார். கடவுள் அருளுக்காக உருகும் பாடல் அது. அது நிச்சயமாக மேஜிக். அப்படியே உள்ளே நுழைந்து மனதைப் பிழியும். நல்லதா இருந்து, மனசத் தொட்டா அதைக் காதுகொடுத்துக் கேட்பவர்களில் நானும் ஒருவன்.”

“இசையின் தாத்பர்யம் என்ன?”

“இசையோட முற்றுப்புள்ளி உங்களை மறந்த ஒரு நிலையில் கொண்டுபோய் நிறுத்தும். அந்த நிலை முற்றிலும் சூழல் மறந்ததல்ல. நீங்கள் என்னவாக இருக்கீங்க என உணர வைக்கிற நிலை. எனக்கு இந்த வாழ்க்கையில் கிடைத்த பெரிய விஷயமே இதுதான். இசையோடு பின்னப்பட்ட மொழி தமிழ். கொஞ்சம் நீங்க தட்டிப் பார்த்தால், எந்தெந்த வார்த்தையில் இசை இருக்குன்னு கண்டுபிடிச்சுடலாம்.”

“இசையமைப்பாளர்களில் அநேகமாக நூறு சதவிகிதம் பேருமே இறை நம்பிக்கை உடையவர்களாக இருக்கிறார்கள் ஏன்?”

“இசை, டியூனெல்லாம் நம்ம கையிலேயே இல்லை. நம் மூலமாக வருது. `இசைதான் கடவுளின் மொழி’ என்று சொல்லுவாங்க. மனசுக்கு சந்தோஷமும், நிறைவும், ஆறுதலும், பேரின்பமும் எல்லாமே இசையிலிருந்துதான் கிடைக்கும். மொழி புரியாமலேயே மனசைக் கரைத்துவிடலாம். நாங்க கருவிகள் மட்டுமே... இசை இறைவனுடையதே..!”