Published:Updated:

``அந்தப் பாட்டுக்கு விஜய்யைத் தவிர வேறு யாராலும் டான்ஸ் ஆட முடியாதுன்னு தெரியும்!'' - வித்யாசாகர்

` ` `சார், அதெல்லாம் வேணாம். அந்தப் படத்தோட பாடல்களைவிட பயங்கர ஹிட்டாகுற மாதிரி பாடல்கள் நான் போட்டுத் தரேன்’னு சொன்னேன். அவருக்கு நம்பிக்கையே இல்லை.’’

வித்யாசாகர்
வித்யாசாகர்

தமிழ், தெலுங்கு, மலையாளம் எனப் பல மொழிப் படங்களுக்கும் 30 வருடங்களாக இசையமைத்துவரும் வித்யாசாகர், இந்தப் பயணத்தைப் பற்றிய பல விஷயங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

ரஜினி, கமல், அஜித், விஜய், விக்ரம்னு பல டாப் நடிகர்களின் கரியரில் மிக முக்கியமான படங்களுக்கு இசையமைத்திருக்கிறீர்கள். அந்த அனுபவம் சொல்லுங்க...

சந்திரமுகி
சந்திரமுகி

’’பி.வாசுவை எனக்கு பல வருடங்களாத் தெரியும். அவர் இயக்குநரானதுக்குப் பிறகு, ’மிஸ்டர் மெட்ராஸ்’, ’காதல் கிசுகிசு’னு இரண்டு படங்களுக்கு சேர்ந்து வேலைபார்த்திருக்கோம். ஆனால், இந்த இரண்டு படங்களும் பெருசா ஹிட்டாகலை. ’அடுத்து பண்ணுனா ஒரு பெரிய படமா பண்ணுவோம்’னு சொல்லியிருந்தார். அவர் சொல்லி இரண்டு வருஷத்திலேயே ’சந்திரமுகி’ படத்தோடு வந்தார். படமும் 890 நாள்கள் ஓடி, ரெக்கார்டு பண்ணுச்சு. இந்த ரெக்கார்டை இனி வேற எந்த தமிழ்ப் படமும் பண்ணுமான்னு தெரியலை. அந்த அளவுக்கு என் கரியர்ல மிக முக்கியமான படமா ’சந்திரமுகி’ இருக்கு.

அன்பே சிவம்
அன்பே சிவம்

கமல் சாரோடு ’அன்பே சிவம்’ படத்தில் வேலைபார்த்த அனுபவத்தை மறக்கவே முடியாது. சினிமாவில் அவருக்குத் தெரியாத விஷயம்னு எதுவுமே கிடையாது. இந்தப் படத்தில் கூத்துப்பாட்டு ஒண்ணு வரும். அந்தப் பாட்டை கம்போஸ் பண்றதுக்கு முன்னாடி, எங்களை கூத்து பார்க்க வெச்சார். கூத்துனா என்னன்னு தெரிஞ்சுட்டு, அந்தப் பாட்டை கம்போஸ் பண்ண வெச்சார். எப்படி ’கர்ணா’ படத்துல ’மலரே’ பாட்டைப் பாடிட்டு, ’இது குறிஞ்சிப் பூ மாதிரி’னு எஸ்.பி.பி சார் சொன்னாரோ, அதே மாதிரி, இந்தப் படத்தில் ’மெளனமே பார்வையாய்’ பாட்டைப் பாடிட்டும் அதே வார்த்தையைச் சொன்னார். ஆனால், அந்தப் பாட்டை படத்தில் யூஸ் பண்ணலை. அதுக்காக கமல் ரொம்பவே வருத்தப்பட்டார்.

விஜய், அஜித்
விஜய், அஜித்

அஜித்துக்கு பல படங்களில் இசையமைச்சிருக்கேன். அதில் ’பூவெல்லாம் உன் வாசம்’ ரொம்பவே ஸ்பெஷலான ஆல்பம். இந்தப் படத்துக்காக எனக்கு ஸ்டேட் அவார்டு கிடைச்சது. அதே மாதிரி, விஜய்க்கு ’கோயம்புத்தூர் மாப்பிள்ளை’ படத்தில் இருந்து ’காவலன்’ படம் வரைக்கும் பல படங்களுக்கு மியூசிக் பண்ணியிருக்கேன். அதில் ’கில்லி’ ஆல்பமை இன்னைக்கு வரைக்கும் மறக்க முடியாது. ’ஒக்கடு’ படத்தைத்தான் ரீமேக் பண்ணப் போறோம்னு தெரிஞ்சதும், அந்தப் படத்தைப் பார்த்தோம். படம் பார்த்து முடிச்சதும், தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் என்கிட்ட, ‘ ‘ஒக்கடு’ல ரெண்டு பாட்டு பயங்கர ஹிட். அதை அப்படியே இந்தப் படத்துக்கும் போட்டுக் கொடுத்திடுங்க’ன்னு சொன்னார்.

‘சார், அதெல்லாம் வேணாம். அந்தப் படத்தோட பாடல்களைவிட பயங்கர ஹிட்டாகுற மாதிரி பாடல்கள் நான் போட்டுத் தரேன்’னு சொன்னேன். அவருக்கு நம்பிக்கையே இல்லை. ‘அப்படிப்போடு’ பாட்டை அரை மணி நேரத்தில் கம்போஸ் பண்ணிட்டு, அவருக்கு போன் பண்ணி, ‘சார், நான் உங்ககிட்ட சொன்ன மாதிரி, இன்னும் பல வருஷத்துக்கு தமிழ்நாட்டையே ஆடவைக்கிற மாதிரி ஒரு பாட்டு உங்க படத்துல இருக்கு’னு சொன்னேன். ஆனால், அது தமிழ்நாட்டில் மட்டுமில்ல, மும்பையிலும் பயங்கரமான ஹிட். இப்போதும் நியூ இயர் செலிப்ரேஷனில் ’அப்படிப்போடு’ பாட்டைப் போட்டு ஆடிட்டு இருப்பாங்க. விஜய்யும் இந்தப் பாட்டுல செமையா ஆடியிருப்பார். அவர் அப்படி ஆடக்கூடிய ஆளாக இருந்தனாலதான், அவ்வளவு ஃபாஸ்ட் பீட்ல அந்தப் பாட்டைப் போட்டேன். விஜய்யைத் தவிர வேற ஹீரோவா இருந்தால், இந்த மாதிரியான பாட்டு போடலாம்கிற எண்ணமே எனக்கு வந்திருக்காது.

 விக்ரம்
விக்ரம்

’சேது’ படத்துக்கு அப்புறம் விக்ரமுக்கு வந்த படங்கள் எல்லாமே, பயங்கரமா மெனக்கெட்டு நடிக்கிற மாதிரியான படங்களாக இருந்துச்சு. ஆனால், அவர் கமர்ஷியல் படங்களுக்கும் செட்டாவார்னு நிரூபிச்ச படங்கள்தான், ’தில்’, ’தூள்’. இந்த இரண்டு படங்களிலும் நான், தரணி, விக்ரம்னு எங்க காம்போ வொர்க் ஆகியிருக்கும். இந்த இரண்டு படங்களுமே ஆல்பமாகவே ஹிட்டாச்சு. அதிலும் ’தூள்’ படத்தில் அந்த ‘சிங்கம் போல நடந்துவரான்’ பாட்டு பட்டிதொட்டியெல்லாம் ரீச்சாச்சு. ’தூள்’ படத்துக்கு முன்னாடி எந்தப் படத்திலும் ஒரு சண்டைக்காட்சிக்கு பாடல் வெச்சிருக்க மாட்டாங்க.

இந்தப் படத்துக்கும் பயங்கரமான எதிர்ப்புகளை மீறித்தான், அந்தப் பாட்டை வெச்சோம். படத்தைப் பார்த்த சில தயாரிப்பாளர்கள், ’சண்டைக்காட்சிக்கு எதுக்கு பாட்டு, அதுவும் க்ளைமேக்ஸில்? அந்தப் பாட்டை எடுத்தால்தான் படம் ஓடும்’னு சொன்னதுனால, தரணி அந்தப் பாட்டை எடுத்துட்டார். படத்தோட ஃபைனல் மிக்ஸிங் போயிட்டு இருந்தப்ப, ஸ்டூடியோவில் இருந்து நைட் 2 மணிக்கு எனக்கு போன் வந்துச்சு. ’சார், க்ளைமேக்ஸில் எந்தப் பாட்டும் இல்லையே சார். ஆனால், நீங்க பாட்டு அனுப்பி வெச்சிருக்கீங்க’னு கேட்டாங்க. நான் உடனே ஸ்டூடியோவுக்கு போனேன். தரணியும் அங்க வந்திட்டார்.

’ஏன் தரணி பாட்டை எடுத்துட்டீங்க?’ன்னு கேட்டதுக்கு, ’இந்தப் பாட்டு அந்தப் படத்துக்கு சரியா இல்லைனு சொன்னாங்க’ன்னு சொன்னார். ’இந்தப் பாட்டு இல்லைனா இந்தப் படமே இல்லை தரணி. நீங்க இந்தப் பாட்டை யூஸ் பண்ணுங்க. தியேட்டர்ல ரெஸ்பான்ஸ் பார்த்துட்டு சொல்லுங்க’னு சொன்னேன். நான் சொன்னதை நம்பி அவரும் அந்தப் பாட்டை படத்தில் வெச்சார். அந்தப் பாட்டு மிகப்பெரிய ஹிட்டாச்சு. இன்னொரு முக்கியமான விஷயம் என்னன்னா, இந்தப் பாட்டை பாடுவதற்காகத்தான் பரவை முனியம்மா வந்தாங்க. அவங்க பாடியதைப் பார்த்துட்டு, அதுக்கப்பறம்தான் இந்தப் படத்தில் அவங்களை நடிக்க வைக்கலாம்னு முடிவு பண்ணார் தரணி.’’ 

உதித் நாராயண், சாதனா சர்கம், கே.கே, மதுஸ்ரீ, சுனிதி சௌஹான்னு நிறைய வடநாட்டுப் பாடகர்களை தமிழில் அதிகம் பாட வைத்தவரும், அவர்களை தமிழுக்கு அழைத்துவந்ததும் நீங்கள்தான். அந்த ஐடியா எப்படி வந்தது, அவர்களை தமிழில் பாடவைக்கும்போது என்னென்ன சவால்கள் இருந்தன?

’’மக்கள் எப்போதுமே புதுமையைத்தான் விரும்புவாங்க, வரவேற்பாங்க. அப்படி அவங்க கேட்காத சில குரல்களை தமிழுக்குக் கொண்டுவரணும்னு ஆசைப்பட்டுதான் அவர்களை எல்லாம் தமிழுக்கு அழைத்துவந்தேன். அவர்களுக்கு எந்த மாதிரியான பாடல்களைக் கொடுக்கணும் என்பதில் தெளிவாகவே இருந்தேன்.

ஏன்னா, ஒரு இசையமைப்பாளரா ஒரு பாடலோட உயிர் என்னன்னு எனக்கு நல்லாவே தெரியும். ஒரு பாடலுக்கு மொழிதான் உயிர்னு தோணும்போது, அந்த மொழியை நன்றாக உச்சரிக்கும் பாடகர்களைத்தான் பாட வைப்பேன். செம ஜாலியான ஒரு பாட்டு, அதில் உச்சரிப்புகள் கொஞ்சம் வித்தியாசமா இருக்கணும்னு தோணும் பட்சத்தில், இந்த மாதிரியான வேற்று மொழிக்காரர்களைப் பாடவைப்பேன். அது செம ஃபன்னா இருக்கும்.

உதித் நாராயண் என் இசையில் பாடுவதற்கு முன்பே தமிழில் பாடி இருந்தாலும், என் இசையில்தான் அதிகப் பாடல்கள் பாடியிருக்கார். ’காதல் பிசாசே’, ’இத்துனூண்டு முத்தத்தில’, ’கொக்கரக் கொக்கரக்கோ’, ’வாடியம்மா ஜக்கம்மா’, ’தேன் தேன்’னு அதில் பல பாடல்கள் செம ஹிட். ’காதல் பிசாசே’ பாட்டு ரெக்கார்ட் பண்ணும்போது, அவருக்கு அந்த ‘பரவாயில்லை’ங்கிற வார்த்தை வரவே இல்லை. ’பர்வாயில்லை, பர்வாயில்லை’னே சொல்லிட்டு இருந்தார். அப்பறம் நாங்களே, ’பரவாயில்லை சார். நீங்க உங்களுக்கு வர்ற மாதிரியே பாடுங்க’ன்னு சொல்லிட்டோம். பல பேர் அந்த ’பர்வாயில்லை’யை குறிப்பிட்டுச் சொன்னாங்க. அவங்களோட வொர்க் பண்ணும் போது, ரொம்பவே ஃபன்னா இருக்கும்.’’ 

Vikatan

இசையமைப்பாளர் வித்யாசாகரின் முழுமையான பேட்டியை, வியாழக்கிழமையன்று வெளியாகும் ஆனந்தவிகடன் இதழில் படிக்கலாம்.