Published:Updated:

“எல்லாத்தையும் சத்தமா கேட்டுப் பழகிட்டோம்!”

விஷால் சந்திரசேகர்
பிரீமியம் ஸ்டோரி
விஷால் சந்திரசேகர்

இசை

“எல்லாத்தையும் சத்தமா கேட்டுப் பழகிட்டோம்!”

இசை

Published:Updated:
விஷால் சந்திரசேகர்
பிரீமியம் ஸ்டோரி
விஷால் சந்திரசேகர்

மெதுவாக வந்து அமர்கிறார் விஷால் சந்திரசேகர். சந்தோஷ் சிவனின் ‘இனம்' படத்தில் ஆரம்பித்தவர், இன்றைக்கு தெலுங்குப் படவுலகிலும் கொண்டாடப்படுகிற அளவுக்கு உயர்ந்திருக்கிறார். தமிழின் நம்பிக்கையூட்டும் இசையமைப்பாளர்.

“இப்ப மெலடி காணாமல் போச்சு. அதை எப்படியாவது திருப்பிக் கொண்டுசேர்ப்பதில் என்னாலான பங்கு இருக்குமா, செய்ய முடியுமான்னு முயற்சி செய்துக்கிட்டே இருக்கேன். என்னுடைய பாடல்களை அந்த வகையில் அமைக்கப் பார்க்கிறேன். சற்று முன்பு வரைக்கும் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், வித்யாசாகர்னு கணிசமாக அதில் உழைச்சிருக்காங்க. இப்பக்கூட துல்கர் சல்மான் நடிக்கிற படத்தில் எட்டுப் பாடல்கள் போட்டிருக்கேன். அத்தனையும் மெலடி. தமிழில் இப்போ எல்லாத்தையும் சத்தமா கேட்டுப் பழகிட்டோம். இன்னைக்குச் சில படங்களில் பாட்டு உரக்கக் கேட்குது. எனர்ஜியாகக்கூட இருக்கு. படங்களின் தரம்னு ஒண்ணு இருக்கில்லையா... அதுவும் முக்கியம்னு நினைக்கிறேன். தமிழ்ப் பாடல்களில் திறமை, நுட்பம், அழகுணர்ச்சி, ரசனை என அதிகம் பிடிகொடுக்காமல் போய்க்கொண்டு இருப்பது மாதிரி மனசு உணர்கிறது. இதில் ஏதாவது நம்ம பங்குக்கு மாற்றம் கொடுக்க முடியுமா என்பதுதான் என் யோசனை.” சிந்தனையைத் தூண்டும்விதத்தில் பேசுகிறார் விஷால்.

“எல்லாத்தையும் சத்தமா கேட்டுப் பழகிட்டோம்!”

“எப்படி இசைத்துறைக்கு வந்தீங்க பிரதர்..?”

“ஆறு வயதிலிருந்தே இசை பிடிக்கத் தொடங்கிவிட்டது. அம்மா கேந்திரியா வித்யாலயா ஸ்கூலில் ஆசிரியையாக இருந்ததால், எத்தனையோ ஊர்களுக்கு டிரான்ஸ்ஃபர் ஆகிப் படிச்சிருக்கேன். பெங்காலி நல்லாத் தெரியும். அங்கே ஐயப்பன் கோயிலில் பாடும்போது சினிமா பாட்டை அப்படியே தமிழ் முலாம் பூசி பாடியிருக்கேன்.

450 குறும்படங்களுக்கு மேல் இசையமைத்த அனுபவம் இருக்கு. விளம்பரங்களுக்கும் இசை கோர்த்திருக்கேன். பாடல்களில் மெலடியை ரொம்ப உயிராக நினைப்பேன். அதற்கேற்ப கதை அமைந்தால் அதற்குத்தான் முதலிடம் கொடுத்துவந்திருக்கிறேன். இன்னைக்கும் பாருங்க, ராத்திரி பதினோரு மணிக்கு மேல் இளையராஜாதான் நம்மை காப்பாற்றி, கரையேற்றுகிறார். பலரும் அவர் பாடல்களை அதன் பாடாந்திரம் முழுக்கத் தெரிஞ்சுகூட கேட்கிறது இல்லை. அனுபூதி நிலைன்னு சொல்லுவாங்க. அந்த நிலைக்குக் கூட்டிட்டுப் போகும். கண்ணில் நீர் திரளும். பெருமூச்சு வரும். இளையராஜா தரும் இசையின்பம் பற்றித் தனியாகவே பேசலாம். அடுத்தடுத்து வந்தவர்கள் மெலடியைக் காணாமல் ஆக்கி... அதெல்லாம் பெரும் துயரம்.

கர்னாடக சங்கீதமெல்லாம் நான் முறையாகப் படிக்கவே இல்லை. இளையராஜா பாடல்களில் 800 பாடல்களுக்கு மேலே ராகங்கள் கொண்ட லிஸ்ட்வெச்சிருக்கேன். அதை மீறியெல்லாம் இனிமே ஒண்ணும் செய்ய முடியாது. அடுத்து வந்த நாங்கல்லாம் நல்லதாக சிலவற்றைக் கொண்டுவர முடியுமான்னு பார்க்குறோம். ஆனால், ஊடாடிப் பார்த்தால் எல்லாவற்றிலும் ராஜாவின் சாயல் ஒளிந்திருக்கும். அவர் ஏதாவது ராகங்களை விட்டு வெச்சிருந்தால் பார்க்கலாம். அதுக்கும் வழி இல்லையே...”

“இப்படி ஒரு பாட்டுப் போடணும்னு நினைச்ச ஒரு பாட்டு இருக்கா..?”

“நிறைய இருக்கு. ஒண்ணை மட்டும் தனியா காட்டுறது சிரமமாச்சே... ‘தென்றல் வந்து தீண்டும்போது...’ அது மாதிரி ஒரு பாட்டு இன்னும் வேற யாரும் போட்டு கேட்கலையே. எனக்கு எல்லா நேரத்திலும் இந்தப் பாடலைக் கேட்கப் பிடிக்கும். இந்தப் பாடலில் அத்தனை செறிவு இருந்தது. ஆனால், நம்ப முடியாமல் ஜனரஞ்சகமாகவும் இருந்தது. அவ்வளவு பொருள் நிறைஞ்ச பாட்டு. இங்கே அதிகம் என்ன கேட்கிறாங்க... பையன் ஒரு பொண்ணைப் பார்த்துட்டான். காதல் வந்துடுதுன்னு ஒரு பாட்டு, அம்மா பாட்டுன்னு கேட்கிறாங்க. கதை இடம் கொடுத்தால், இயக்குநர் அதற்கு உறுதுணையாக இருந்தால், எவ்வளவோ பண்ணலாம். முன்பு தோளோடு தோள் நின்னு இப்படிச் செய்திருக்காங்க. எனக்கு ஒரு சூழலும் கதையும் ஒன்று சேர்ந்த மாதிரி அமைந்து ‘தென்றல் வந்து தீண்டும்போது’ கொடுத்த உணர்வைக் கொண்டு வரணும்னு ஆசை. இப்போ துல்கர் நடிக்கிற படத்தில் அது மாதிரி முயன்று பார்த்திருக்கிறேன். எனக்கே எனக்கான படம் மாதிரி இதை சொல்லிக்கலாம்னு தோணுது.”

“எல்லாத்தையும் சத்தமா கேட்டுப் பழகிட்டோம்!”

“ரொம்ப செலக்ட் பண்ணி செய்றீங்க...”

“ஆமா, ராத்திரி தூங்கப்போனால் நல்லபடியா தூக்கம் வரணும்னு நினைக்கிறேன். என்னை `Under rated music director’னு சொல்வாங்க. அதுவும்கூட பெருமைதான். ரொம்ப சிரமப்படுத்தப்படும் படங்களை 'எனக்கான வாய்ப்பும் இதில் அதிகம் இல்லையே'ன்னு மெல்லிசா சொல்லி தவிர்த்துவிடுகிறேன். இப்ப தமிழில் செய்திருக்கிற ‘OH மணப்பெண்ணே' எனக்கு பிடித்தமான ஆல்பமா அமைஞ் சிருக்கு. சமீபத்தைய சந்தோஷம் அதுதான்.”