Published:Updated:

தனுஷ் எங்க மியூசிக் பார்ட்னர்!

மெர்வின், விவேக்
பிரீமியம் ஸ்டோரி
மெர்வின், விவேக்

விஸ்வநாதன் - ராமமூர்த்தி, சங்கர்-கணேஷ் காம்போக்களுக்குப் பிறகு, பெரிதாக இரட்டை இசையமைப்பாளர்களின் வருகை இல்லாமல் இருந்த சமயத்தில் அசத்தல் என்ட்ரி கொடுத்தவர்கள் விவேக் சிவா, மெர்வின் சாலமன் (விவேக் - மெர்வின்).

தனுஷ் எங்க மியூசிக் பார்ட்னர்!

விஸ்வநாதன் - ராமமூர்த்தி, சங்கர்-கணேஷ் காம்போக்களுக்குப் பிறகு, பெரிதாக இரட்டை இசையமைப்பாளர்களின் வருகை இல்லாமல் இருந்த சமயத்தில் அசத்தல் என்ட்ரி கொடுத்தவர்கள் விவேக் சிவா, மெர்வின் சாலமன் (விவேக் - மெர்வின்).

Published:Updated:
மெர்வின், விவேக்
பிரீமியம் ஸ்டோரி
மெர்வின், விவேக்

இவர்களின் ‘குலேபா...’, ‘சல்மார்...’, ‘ஒரசாத...’ உள்ளிட்ட ஹிட் பாடல்களின் வரிசையில் ‘கமலா கலாசா...’வும் இணைந்திருக்கிறது. ‘பட்டாஸ்’, ‘சங்கத்தமிழன்’, ‘சுல்தான்’ உள்ளிட்ட படங்களின் இசை வேலைகளில் இருந்த இந்த கூல் இசை ட்வின்ஸை அவர்களது ஸ்டூடியோவில் சந்தித்தேன்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“நான் குழந்தையா இருக்கும்போது எங்க மாமா சார்லஸ் ராஜா என்னை மடியில உட்கார வெச்சுக்கிட்டு சர்ச்ல கீபோர்டு வாசிப்பார். அப்படித்தான் எனக்கும் மியூசிக் மேல ஆர்வம் வந்துச்சு. ஸ்கூல்ல எப்போவும் நான்தான் அசம்ப்ளில கீபோர்டு வாசிப்பேன். இன்டர் காலேஜ் கலை நிகழ்ச்சிகளில் டீமா சேர்ந்து பர்ஃபார்ம் பண்ணுவோம். அந்தப் போட்டியில கலந்துக்க அனிருத், விவேக், லியோன் ஜேம்ஸ்னு எல்லோரும் ஒரு பேண்ட் ட்ரூப்பா வருவாங்க. அப்படிப் பழக்கமாகி இவங்க பேண்ட்ல சேர்ந்து வாசிக்க ஆரம்பிச்சுட்டேன்” என்று தனக்கு விவேக் எப்படி அறிமுகமானார் என்பதைப் பகிர்ந்துகொண்டார், மெர்வின்.

தனுஷ் எங்க மியூசிக் பார்ட்னர்!

“என் குடும்பத்துல யாருக்கும் மியூசிக் தெரியாது. அப்பா பேங்கர், அம்மா டீச்சர். அதனால வீட்ல படிப்புக்குத்தான் முக்கியத்துவம். மாண்டலின் ஸ்ரீனிவாஸுடைய சொந்தக்காரர் ராஜு சார்கிட்ட மாண்டலின் கத்துக்கிட்டேன். ஸ்கூல் படிக்கும்போது கர்னாடக சங்கீதம் கத்துக்கிட்டேன். ஸ்கூல்ல அனிருத் எனக்கு ஒரு வருஷம் சீனியர். அனி, நான், லியோன் இன்னும் கொஞ்ச பேர் சேர்ந்து ‘ஜிங்க்ஸ்’னு ஒரு பேண்ட் ஆரம்பிச்சோம். கர்னாடிக் மியூசிக்கும் வெஸ்டர்ன் மியூசிக்கும் சேர்த்து கர்னாடிக் ஃபியூஷன்னு ஒண்ணு பண்ணுவோம். இன்டர் காலேஜ் கல்ச்சுரல்ஸ்ல நாங்க ஜெயிப்போம்; இல்லைனா மெர்வின் டீம் ஜெயிப்பாங்க. அப்படிப் பழக்கமாகி மெர்வின் எங்க பேண்ட்ல சேர்ந்தார். அனிருத் படங்களில் அவர்கூட சேர்ந்து மியூசிக் புரொகிராம் பண்ண ஆரம்பிச்சு அப்படியே சினிமாக்குள்ள வந்துட்டோம்” என்ற விவேக் தங்களின் முதல் பட வாய்ப்பு பற்றிப் பேசுகிறார்.

“நாங்க புரொகிராமரா இருந்து மியூசிக் டைரக்டரானது திடீர்னு நடந்ததுதான். அனிருத்கிட்ட வொர்க் பண்ணிட்டு இருந்தபோது, விவேக்கிட்ட `வடகறி’ன்னு ஒரு படம். பேங்காக்ல ஷூட்டிங் ஆரம்பிக்கப்போகுது. ரொம்பக் குறைவான தேதிதான் இருக்கு. சன்னி லியோன் டான்ஸ் ஆடுறாங்க. இதை விட்டா அவங்க கால்ஷீட் கிடைக்காது. அதனால ஒரே ஒரு பாட்டு மட்டும் கம்போஸ் பண்ணிக்கொடுங்க’ன்னு கேட்டாங்க. அந்த நேரத்துல நான் காலேஜ் படிச்சுட்டிருந்தேன், விவேக்கும் லா படிச்சுட்டு இருந்தான். எங்களுக்கு தனியா சினிமா வாய்ப்பு வரும்னு எதிர்பார்க்கலை. அந்தப் பாடலை அரை நாளில் கம்போஸ் பண்ணிக் கொடுத்துட்டோம். அந்தப் பாட்டை எடுத்துக்கிட்டு ஷூட்டிங் கிளம்பிட்டாங்க. பத்து நாள் எந்தத் தகவலுமில்லை. நாங்களும் அடுத்த வேலையைப் பார்க்க ஆரம்பிச்சுட்டோம். அப்புறம் போன் பண்ணி, ‘பாட்டு சூப்பரா வந்திருக்கு. அதை ஷூட் பண்ணிட்டோம். செட்ல எல்லோரும் இந்தப் பாட்டைப் பாடிக்கிட்டே இருக்காங்க. முழுப் படத்துக்கும் நீங்களே மியூசிக் போட்டுக் கொடுங்க’ன்னு சொன்னதும் எங்களுக்கு செம ஷாக். எங்களை நம்பின தயாநிதி சாருக்குத்தான் நன்றி சொல்லணும்.”

உங்க பேண்ட்ல நிறைய பேர் இருக்கும்போது மெர்வின் கூட சேர்ந்து வொர்க் பண்ணலாம்னு நினைக்க என்ன காரணம் என்ற கேள்விக்கு, “நான் கர்னாடிக் மியூசிக் கத்துக்கிட்டு வந்தேன். மெர்வின் வெஸ்டர்ன் மியூசிக் கத்துக்கிட்டு வந்தான். அதனால நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து மியூசிக் பண்ணுனா புதுசா நல்லாருக்கும்னு நினைச்சுதான் மெர்வின்கிட்ட கேட்டேன். அவனுக்கும் ஓகே. அப்படி நாங்க வொர்க் பண்ண ஆரம்பிச்சு நல்லபடியா போய்க்கிட்டு இருக்கு” என்ற விவேக்கை இடைமறித்த மெர்வின், “எனக்கு விவேக் போன் பண்ணி ‘வடகறி’ பத்திச் சொல்லும்போது ‘எந்த அளவுக்கு இது ஒத்துவரும்னு தெரியலை. அதுக்கு முன்னாடி சும்மா ஒரு டிராக் வொர்க் பண்ணலாம். செட்டாச்சுன்னா, அப்படியே போயிடலாம்’னு சொல்லி நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து பண்ணுன முதல் டிராக்தான், ‘டோரா’ படத்துல காருக்கான தீம் மியூசிக்கா வந்தது. இதுக்குப் பிறகுதான் ‘வடகறி’ பாடல்கள் பண்ணினோம். எங்களுடைய முதல் பாடலை அனிருத் பாடும்போது, ‘சூப்பரா இருக்கு பாய்ஸ். கோ அஹெட்’னு என்கரேஜ் பண்ணினார். அப்போதான் எங்களுக்கு நம்பிக்கையே வந்தது” என்கிறார்.

“ `டோரா’ படத்துக்கு நாங்க கொடுத்த பேக் கிரவுண்ட் ஸ்கோரைப் போட்டுதான் நயன்தாரா நடிச்சிருந்தாங்க. அதை எடிட்ல பார்த்த கே.ஜே.ஆர் ராஜேஷ் சாருக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அப்படித்தான் ‘குலேபகாவலி’ வாய்ப்பு வந்தது. அந்தப் படத்துல எல்லாப் பாட்டுமே ஹிட். குறிப்பா, ‘குலேபா...’ எங்களை நிறைய பேருக்குத் தெரியவெச்சது. பிரபுதேவா சார் ஸ்டூடியோவுக்கு வந்து ‘குலேபா’ பாட்டைக் கேட்டு முடிச்ச அடுத்த நொடி, எங்களுக்குக் கைகொடுத்து ‘பாட்டு ஹிட்’னு சொன்னார். ‘முதல் பத்து நொடி ஆடியன்ஸை ஈர்த்துடுச்சுனா, அந்தப் பாட்டு நிச்சயமா ஹிட்’னு அவர் சொன்ன டிப்ஸை வெச்சுதான் இப்போ வரை வொர்க் பண்ணிக்கிட்டு இருக்கோம். ‘குலேபா...’ எங்க கரியர்ல ரொம்ப ரொம்ப ஸ்பெஷல்” என்று சிலாகித்த விவேக்கைத் தொடர்ந்த மெர்வின் ‘ஒரசாத’ வைரலான கதை நம்மிடம் சொல்லும்போது அவர் கண்களில் அப்படியொரு ஆனந்தம்!

“ ‘ஒரசாத’ பாட்டுக்கு இந்த அளவுக்கு ரெஸ்பான்ஸ் கிடைக்கும்னு எதிர்பார்க்கலை. இந்தப் பாடல் வெளியாகி முதல் வாரம் எந்த ரெஸ்பான்ஸும் இல்லை. அப்புறம் எப்படியோ வைரலாகி டிக் டாக், இன்ஸ்டாகிராம்னு எல்லாப் பக்கமும் இதைப் பார்க்கும்போது செம ஹேப்பி. ‘குலேபகாவலி’ ஆல்பம் ஹிட்டைத் தொடர்ந்து ‘ஒரசாத’வும் செம வைரல். 2018 எங்க கரியர்ல பெரிய டர்னிங் பாயின்ட்னே சொல்லலாம்” என்று பூரித்தார் மெர்வின்.

தனுஷ் எங்க மியூசிக் பார்ட்னர்!

“துரை.செந்தில்குமார் சாருடைய ‘எதிர்நீச்சல்’, ‘காக்கிச்சட்டை’ படத்துல அனிருத் டீம்ல வொர்க் பண்னுனதனால அவரை எங்களுக்கு ஏற்கெனவே பழக்கம். ‘3’ல வொர்க் பண்ணுனதனால தனுஷ் சாருக்கும் அனிருத் மூலமா எங்களைத் தெரியும். பாட்டு கேட்டுட்டு, போன் பண்ணி ‘பாட்டு சூப்பரா இருக்கு. என்னையும் உங்ககூடச் சேர்த்துக்கோங்க’ன்னு சொல்லிட்டு ஸ்டூடியோவுக்கு வந்துட்டார். ‘பட்டாஸ்’ படத்துல எங்களோட சேர்ந்து மியூசிக்லயும் வொர்க் பண்ணினார், தனுஷ். அவருக்கு அவ்ளோ மியூசிக் நாலெட்ஜ் இருக்கு. சின்னச் சின்னதா அவர் கொடுத்த ஐடியா நல்லா வொர்க் அவுட் ஆகியிருக்கு. தனுஷ் சார் ரசிகர்களுக்கு ரொம்பப் பிடிக்கும்” என்று ‘பட்டாஸ்’ அனுபவத்தை விவேக் சொல்லி முடிக்க, ‘சங்கத்தமிழன்’ பற்றிப் பேச ஆரம்பிக்கிறார், மெர்வின். “நாங்க ரெண்டு பேருமே ‘பீட்சா’ படத்துல இருந்தே விஜய் சேதுபதி சாருடைய ரசிகர்கள். முழுக்க முழுக்க கமர்ஷியல் படம் இது. ‘கமலா கலாசா’ பாட்டைக் கேட்டுட்டு, “இந்தப் பாட்டு எனக்கா இல்லை பிரபுதேவாவுக்கா? எப்படிப்பா டான்ஸ் ஆடுறது?’ன்னு கேட்டார். டான்ஸ் ஆடுறதுல அவருக்குக் கொஞ்சம் பயம். ஆனா, இந்தப் பாட்டுல கலக்கியிருக்கார்.”

கோலிவுட்டில் உங்களுக்கான இடம் என்ன என்றதற்கு, “இதுதான் எங்க இலக்கு, இடம்னு நாங்க நினைக்கலை. நிறைய கத்துக்கணும், நிறைய பயணிக்கணும். எங்களை நம்புற இயக்குநர்களையும் மக்களையும் திருப்திப்படுத்தணும் அவ்ளோதான்” என்ற மெர்வினை ஆமோதித்துத் தலையசைத்தார் விவேக். “உங்களுக்கு ஒரு நல்ல செய்தி சொல்றேன். நவம்பர் மாசம் விவேக்குக்குக் கல்யாணம். கண்டிப்பா வந்திடணும்” என்று மெர்வின் சொன்னவுடன், “ஆமா பிரதர். மறக்காம வரணும்” என்று புன்னகை பூக்க திருமணப் பத்திரிகை கொடுத்த விவேக்கிற்குக் கல்யாண வாழ்த்துகள் சொல்லி விடைபெற்றோம்.