இசை விமர்சனம் : மரியான்

மரியான் இசை: ஏ.ஆர்.ரஹ்மான்; வெளியீடு: சோனி; விலை: 125

ப்பிரிக்கக் காட்டில் சஃபாரி சவாரி செய்யும் உற்சாகம் கொடுக்கிறது 'வெல்கம் டு ஆப்பிரிக்கா’ தீம் மியூஸிக். முதல் அடியிலிருந்து மகுடியாக வசீகரிக்கும் 'இன்னுங் கொஞ்ச நேரம் இருந்தாதான் என்ன...’ பாடல் நெடுக நம் கைப்பிடித்து அழைத்துச் செல்கிறது கடம். 'கொலவெறி’ பொயட்டு எழுத,  யுவன்ஷங்கர் பாட, இசைப் புயல் இசைக்கும் 'கடல் ராசா நான்’ செமத்தியான சாங். முதல் கவனத்திலேயே ஜாலி ஜுகலாக ஒலிக்கும் பாடலில் எக்ஸ்ட்ரா குதூகலம்.

கவிஞர் குட்டி ரேவதியின் எளிய வரிகள் 'நெஞ்சே எழு’ பாடலின் வசீகரம். காதல் புகழ் பாடலாக இருந்தாலும் ரஹ்மானின் குரலில் எழுச்சி கீதமாக ஒலிக்கிறது. ரகசியத் தொனியில் கிசுகிசுக்கிறது 'நேற்று அவள் இருந்தாள்’ பாடல். 'ஆகாயத்தில் நூறு நிலாக்கள்’ என்று ஹைபிட்ச்சில் வசீகரமேற்றி தடாலெனச் சரிந்து குழையும் விஜய் பிரகாஷின் குரல்... சூப்பர்ப்! 'காற்றெல்லாம் அவள் தேன் குரலாக இருந்தது... மணலெல்லாம் அவள் பூவுடலாய் மலர்ந்தது’ - வாலியின் கற்பனைக்கு வழிவிட்டு ஒலிக்கிறது இசை. 'சோனாப்ரியா...’ மென்மையாக அதிரடிக்கும் டிஸ்கோ. ரஹ்மானின் க்ளாஸிக் கலெக்‌ஷனில் இடம்பிடிக்கும் ஆல்பம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!