வெளியிடப்பட்ட நேரம்: 15:13 (04/04/2016)

கடைசி தொடர்பு:18:48 (04/04/2016)

‘ஓட்டு வாங்கிப் போற நீங்க ஊழலோட டீலரு!’ - சாட்டையை சுழற்றும் ‘ஜோக்கர்!’

'குக்கூ’ ராஜுமுருகனின் இரண்டாவது படம், ஜோக்கர். இன்று வெளியான அந்தப் படத்தின் பாடல், இன்றைய அரசியலை, அரசியல்வாதிகளைக் கேள்வி கேட்டிருக்கிறது. தேர்தல்  நேரத்தில் வெளியாகியிருக்கிற இந்தப் பாடல், கேட்கும் அரசியல்வாதிகளை நிச்சயம் ஒரு கலக்கு கலக்கும்!

இதுபற்றி யுகபாரதி தன் முகநூலில் பகிர்ந்திருந்தாவது:-

தம்பி ராஜூமுருகன் இயக்கும் இரண்டாவது திரைப்படம், ஜோக்கர். மாற்று அரசியலை முன்னெடுக்கும் எளிய மக்களின் ஏக்கங்களைச் சொல்லும் இத்திரைப்படத்திலிருந்து ஒருபாடல் இன்று வெளியிடப்படுகிறது.

‘என்னங்க சார் உங்க சட்டம்’ என்னும் இப்பாடலின் வாயிலாக ஒட்டு மொத்த இந்திய அரசியலையும் அரசியல்வாதிகளையும் கேள்விக்கு உட்படுத்தியிருக்கிறோம். தேர்தல் நேரத்து தகிடுதத்தங்களையும் கூட்டணி பேரங்களையும் தாண்டி மக்களின் அவலங்களை அம்பலப்படுத்தும் இப்பாடலை மக்கள் நலனில் அக்கறையுடையோர் எவரும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

சாதிய, மதவாத அமைப்புகளைப் புறம்தள்ள, சாக்கடை அரசியலை தூர்வார, எதார்த்த நிலைகளை எடுத்துச்சொல்ல என சகல திசைகளிலும் பயணிக்கும் இப்பாடல் இன்றைய தலைமுறையின் குரல். இன்னும் சொல்வதெனில், இந்தத் தேர்தலில் பங்கெடுக்க இருக்கும் புதிய வாக்காளர்களின் குரல். இப்பாடலுக்கு இசையமைத்த ஷான் ரோல்டன், குரல் கொடுத்த அறந்தை பாவா, பெருமாள் ஆகியோர் என்றென்றும் பாராட்டுக்குரியவர்கள்.

 

  பாடல் வரிகள்:-

என்னங்க சார் உங்க சட்டம்?
என்னங்க சார் உங்க திட்டம்?
கேள்வி கேட்க ஆளில்லாம
போடுறீங்க கொட்டம்
நூறு கோடி மனிதரு
யாரு யாரோ தலைவரு
ஓட்டு வாங்கிப் போற நீங்க
ஊழலோட டீலரு


ஆண்ட பரம்பர கைநாட்டு
ஆட்டி படைக்குது கார்ப்பரேட்டு
நாட்ட விக்கிற மந்திரிமாருக்கு
நல்லா வைய்யி சல்யூட்டு
ரேஷன் அரிசி புழுவுல
வல்லரசு கனவுல
தேசம் போற போக்க பாத்தா
தேறாதுங்க முடிவுல
கருத்துசொல்ல முடியல
கருப்புப் பணமும் திரும்பல
ஆளுக்காளு நாட்டாமதான்
பார்லிமெண்ட்டு நடுவுல
சொகுசுகாரு தெருவுல
வெவசாயி தூக்குல
வட்டிமேல வட்டிபோட்டு
அடிக்கிறீங்க வயித்துல


கையில் ஃபோனு ஜொலிக்குதா?
ஓசியில் டி.வியும் கெடைக்குதா?
அவரசமா ஒண்ணுக்கும் ரெண்டுக்கும்
ஒதுங்க எடமும் இருக்குதா?
இயற்கை என்ன மறுக்குதா?
எதையும் உள்ள பதுக்குதா?
எல்லாத்தையும் சூறையாட
சர்க்கார் கூட்டிக் கொடுக்குதா?
நல்ல தண்ணி கெடைக்கல
நல்ல காத்து கெடைக்கல
அரசாங்க சரக்குலதான்
கொல்லுறீங்க சனங்கள

.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்