உங்ககிட்ட இன்னும் நெறைய எதிர்பார்க்கறோம் இமான் - வாகா இசை விமர்சனம்
பாடல்: சொல்லத்தான் நினைக்கிறேன்
குரல்: திவ்யா குமார்
வரிகள்: வைரமுத்து
பழைய டைப் ஆர்மோனியம்போன்ற இசைத்துணுக்கில் ஆரம்பித்து, கஜல் ஆலாப் தொடர, கடம் இசை தொர ‘சொல்லத்தான் நினைக்கிறேன்.. ஒன் கண்ணப் பார்த்து சொல்லாம முழிக்கிறேன்’ என்று பாடல் தொடங்க, மூன்றாவது வரியில் இமான் ஸ்பெஷல் காட்டி பல்லவியிலேயே பிடிக்க வைக்கிற பாடல்.
இடையிசையில் ஆலாப்பும், கஜலும் கலந்துகட்டி ஒருவித புதுமுயற்சி செய்திருக்கிறார் இமான். சரணம் ஆரம்பத்தில் டெம்போ குறைந்து, மீண்டும் வேகம் பிடிக்கிறது. இமான் ட்ரீட்.
பாடல் : ஏதோ மாயம் செய்கிறாய்
குரல்கள் : ஜிதின் ராஜ், விக்ரம் பிரபு
வரிகள் : மோகன்ராஜ்
காற்று சுழன்றடிக்கிற வெட்ட வெளியின் சத்தம். காதலில் விழந்துவிட்டதை விக்ரம் பிரபுவின் வசனத்தில் சொல்ல வைத்து தொடங்கும் பாடல், இன்னொரு இமான் டைப் காதல் சொல்லும் பாடல். முதல் இடையிசையில் கொஞ்சம் இரைச்சலாய் உணரவைத்தவர், இரண்டாவது இடையிசையில் வயலினில் அதகளம் செய்திருக்கிறார்.
பாடல் : ஆசை காதல் ஆருயிரே - கரோகே
குரல் : வந்தனா ஸ்ரீனிவாசன்
வரிகள் : வைரமுத்து
சோகப்பாடல். வயலினிலும் கிடாரிலும் இமான் கெத்து காட்டியிருக்கும் பாடல். ஆரம்பத்திலும், இடையிசையிலும் வரும் கிடார் கேட்டாலே ‘இது இமான் ம்யூசிக்’ என்று சொல்லிவிடுவீர்கள். அப்படியான அவரின் சிக்னேச்சர் நோட்ஸ். வரிகளைக் கேட்கவிடாமல், இசை தூக்கலாக இருப்பதைப் போன்றொரு ஃபீல்!
பாடல் : ஆணியே புடுங்க வேண்டா
குரல் : செண்பகராஜ்
வரிகள் : அருண்ராஜா காமராஜ்
குத்துப்பாடல். அவ்வளவே. பெரிதாக சொல்ல ஒன்றுமில்லை.
இந்த நான்கு பாடல்களோடு, தீம் ம்யூசிக் ஒன்றும், சொல்லத்தான் நினைக்கிறேன், ஏதோ மாயம் செய்கிறாய் - இரண்டு பாடல்களுக்கான கரோகேவுடனும் வந்திருக்கிற இந்த ஆல்பத்தில் ஒரு விசேஷம் - டூயட்டே இல்லை.
இமான் திடீரென்று ஒரு ஆல்பம் தருவார். ஒவ்வொரு பாடல்களும் ஒவ்வொரு விதத்தில் கலக்கும். முதலில் கேட்டவுடன் பிடிக்கற மாதிரி இரண்டு பாடல்கள், படம் வந்தபின் ஹிட்டடிக்கிற இரண்டு பாடல்கள் என்று ஒருவித கலவையாக கொடுப்பார். வருத்தபடாத வாலிபர் சங்கம் ஒரு செம ரகள ஜானர் என்றால், ஜீவா வேறொரு ஜானர். ஆனால் இரண்டிலும் சோடை போகாமல், கேட்க வைப்பார், பாடல்களைக் குறித்துப் பேச வைப்பார்.
அந்த ஃபீல், இந்த ஆல்பத்தில் குறைவாக இருப்பதாகப் படுகிறது. சொல்லத்தான் நினைக்கிறேன் மட்டும் அவர் பெயர் சொல்ல, மற்றவை ஆவரேஜ் ரகம்தான்.
நாங்க உங்ககிட்ட இன்னும் நிறைய எதிர்பார்க்கறோம் இமான்!