Published:Updated:

ஓயாமல் சொக்க வைக்கும் ‘ஓயா.. ஓயா !’ - காஷ்மோரா இசை விமர்சனம் #SanthoshNarayanan

Vikatan
ஓயாமல் சொக்க வைக்கும் ‘ஓயா.. ஓயா !’ - காஷ்மோரா இசை விமர்சனம் #SanthoshNarayanan
ஓயாமல் சொக்க வைக்கும் ‘ஓயா.. ஓயா !’ - காஷ்மோரா இசை விமர்சனம் #SanthoshNarayanan

காஷ்மோரா. 

கார்த்தி, நயன்தாராவுடன் கைகோர்க்கும் முதல் படம். ’இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ இயக்குநர் கோகுலின் அடுத்த படம். பெரிய பட்ஜெட். படத்தின் பெயர், ஸ்டில்ஸ் எல்லாமே ஒரு மார்க்கமாகவே இருக்க, இசை.. சந்தோஷ் நாராயணன். எப்படி இருக்கிறது பாடல்கள்?

பாடல்: திக்கு திக்கு சார்..
வரிகள்: லலிதானந்த்
குரல்: சந்தோஷ் நாராயணன்

சந்தோஷின் டிபிகல் டோனில் ஆரம்பிக்கிற பாடல். கூடவே ‘ஓட்ரா ஓட்ரா’ என வரும் கோரஸ் சுவாரஸ்யம். இரண்டாவது இடையிசை எனக்குள் ஒருவன் பாடலை நினைவுபடுத்தினாலும் ரசிக்கவைக்கிறது. வரிகளும் குறையில்லை ரகம். வழக்கமான சந்தோஷ் நாராயணன் பாடல்.     

பாடல்: ஜகதம்மா..
வரிகள்: முத்தமிழ்
குரல்: அனந்து

முந்தைய திக்கு திக்கு பாடலின் தொடர்ச்சியோ என்று நினைக்க வைக்கிற, அதன் சகோதரப் பாடல். உடுக்கை கவனமீர்க்கிறது. பரபர வரிகள் ரசிக்க வைக்கிறது.  முடியும்போது பரபரவென உடுக்கை ஒலிக்க, ஏறுகிற டெம்போ ஸ்டைல் நன்று! 

பாடலைக் கேட்க

பாடல்: ஓயா.. ஓயா
வரிகள்: லலிதானந்த்
குரல்: கல்பனா ராகவேந்தர்

ஹாரிஸா.. சந்தோஷா என்று ஒரு நிமிஷம் பார்க்க வைக்கிற அட்டகாச ஆலாப்-பில் ஓர் ஆரம்பம். மெதுவாக இணைகிற கல்பனாவின் குரல்.  உடனேயே இணைகிற மிருதங்கமும் தவிலும் ‘அட.. சந்தோஷா இது!’ என்று சந்தோஷப்படுத்துகிறது. நானறிந்தவரை, இதுவரை அவர் செய்திராத ஃப்யூஷன். சரணத்தின் மெட்டு.. அட்டகாஷ். வரிகளில் முற்றுப்பெறா வாக்கியத்தை எழுதி கலக்கியிருக்கிறார் லலிதானந்த். கல்பனாவின் குரலில் நித்யஸ்ரீயின் சாயல். பாடலுக்குப் பொருந்துகிற குரல். இரண்டாம் இடையிசையில் ‘கொன்னக்கோல்’ பிரமாதம்! அதனுடனேயே இணையும் கல்பனாவின் குரலும் சிரிப்பும்... இன்னும் பிரமாதம். நீள்கூந்தளில் சூட, காதலனின் மூச்சை பூவாகக் கற்பனை செய்தமைக்கும், ‘கல்வெட்டுப் போல் எந்தன் கன்னம்.. உன் பல்பட்டு வரலாற்றுச் சின்னம்’ போன்ற ‘வாலி’ப வரிகளுக்கும் - கவிஞரே... கை குடுங்க!     

பாடலைக் கேட்க 

பாடல்: தகிட தகிட
வரிகள்: முத்தமிழ் 
குரல்கள்: சாய் சரண், சந்தோஷ் நாராயணன் 

சந்தோஷின் இன்னொரு பெப்பி சாங்! பாடலின் கூடவே ‘தகிட தகிட தை தாராரோ’ ஒலிப்பது சிறப்பு. அதே மெட்டில்தான் பாடல் முழுவதுமே. பல்லவி வேறொரு மெட்டில் ஆரம்பித்து, தகிட தகிட தை வந்தபிறகு முழுவதும் அதே மெட்டு. பாலும் பழமும் பாடலை, பாலும் பழமும் என்ற இரண்டு வார்த்தைகளின் மெட்டிலேயே பாடலாம் என்பதைப்போல, இந்தத் தகிட தகிட தை தாராரோ-வின் பெரும்பாலான வரிகளை அந்த மெட்டில் பாடலாம். பாடல் காட்சிகள் சிறப்பாக அமைந்து, திரும்ப திரும்ப கேட்டால் ஹிட்டடித்துவிடுகிற பாடல்.   

காஷ்மோரா - ப்ளாக் மேஜிக் என்கிற சிக்கலான சப்ஜெக்ட் என்பது ட்ரெய்லரிலேயே தெரிகிறது. ஓயா ஓயா நிச்சயமாக ஹிட் லிஸ்ட் பாடல். மற்ற பாடல்களை படத்தின் வெற்றிதான் முடிவு செய்யும். ஆனாலும், சந்தோஷ், தன் வழக்கமான ஸ்டைலிலிருந்து விலகி புதியவகை ஃப்யூஷன்களை நமக்கு தருவது இனிமையான விஷயம்!

-பரிசல் கிருஷ்ணா
 

Vikatan