Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கொஞ்சம் விட்டிருந்தால் எஸ்.பி.பியை விஞ்சியிருப்பார் இந்த மனுஷன்! #KamalAsSinger

ஆண்பாடகர்களில் எஸ்.பி.பியை விடச் சிறந்த ஒருவர் இல்லவே இல்லை என்று நண்பர்களிடத்தில் உச்சஸ்தாயியில் வாதிட்டாலும் ஒருத்தரை மட்டும் நினைக்கும்போது ‘ஒருவேளை இந்த ஆளு முழுநேரப் பாடகராக மட்டுமே ஆகியிருந்தால் எஸ்.பி.பியை மிஞ்சியிருப்பாரோ’ என்று தோன்றும்.

கமல்ஹாசன்.

'அந்தரங்கம்’ என்ற படத்தில் ஜி.தேவராஜன் இசையமைப்பில் ‘ஞாயிறு ஒளிமழையில் திங்கள் குளிக்க வந்தாள் என்றொரு பாடல்தான் கமல் பாடிய முதல் பாடல். கிட்டத்தட்ட கே.ஜே. ஏசுதாஸின் குரல் போல ரொம்ப சீரியஸாக இருக்கும் பாடல். பயந்து கொண்டே பாடியது போல் தெரியும். ஹிட்டான பாடல்தான். அதன்பிறகு இளையராஜா இசையில் அவள் அப்படித்தான் படத்தின் ‘பன்னீர் புஷ்பங்களே’ பாடல். தொடர்ந்து சிலபல பாடல்கள். சிகப்பு ரோஜாக்கள் படத்தில் ‘நினைவோ ஒரு பறவை’ எவர் க்ரீன் ஹிட்டான ஒரு கமல் பாடல். ஆனால் இசையமைப்பாளர் சொன்னதை அப்படியே பாடியிருப்பார் கமல். மூன்றாம் பிறை படத்தில் ‘முன்பு ஒரு காலத்துல முருகமல காட்டுக்குள்ள’ என்ற நரிக்கதை பாடலின்போதுதான் ராஜாவுக்கு ‘இந்த ஆள் எல்லா வெரைட்டியும் பண்ணுவார் போலயே’ என்று தோன்றியிருக்க வேண்டும். யூகம்தான். அதற்கு முன்னரே கூட ராஜாவுக்கு தெரிந்திருக்கலாம். நான் கமலை, பாடகராய்க் கண்டுகொண்டது இந்தப் பாடலில்தான். இந்த மூன்றாம் பிறை பாடலில், இசைக்குத் தகுந்த மாதிரி வசனங்களைச் சொல்வதிலும், பாடுவதிலும் கலக்கியிருப்பார் கமல். பயம், கோபம், திகில் என்று பாவத்துக்குத் தகுந்த மாதிரி குரலில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும்.

அதன்பிறகு ‘ஓ மானே மானே’ படத்தின் ‘பொன்மானைத் தேடுதே’! கமலில் குரல். படத்தின் ஹீரோ மோகன்! என்னது மோகனுக்கு கமல் குரலா என்று அன்றைய நாளில் எல்லாரையும் புருவமுயர்த்த வைத்த பாடல். ‘முழுசா பாடகாராக மாறிட்டாரோ’ என்பது போல ‘ராபப்பப்ப பாரப்பப்ப’ என்றெல்லாம் எஸ்.பி.பிக்கே உரித்தான சில ஸ்பெஷல்களையெல்லாம் அந்தப் பாடலில் செய்திருப்பார்.

அதற்கடுத்ததாய் கமல் பாடிய பாடலும் அப்படித்தான். ஒரு ரெண்டு ஸ்டெப் எக்ஸ்ட்ராவாகத் தாண்டியிருப்பார். ‘பாடகனா.. நானா?’ என்ற பயமோ.. பவ்யமோ இல்லாமல் ஃப்ரீ ஸ்டைலில் பாடிய பாடல் என்று சொல்லலாம். ஜப்பானில் கல்யாணராமன் படத்தின் ‘அம்மம்மோய்... அப்பப்போய்.. மாயாஜாலமா’ பாடலில் குரல் மாற்றி மூக்காலேயே பாடியிருப்பார் மனுஷன். ஜகபுகஜகபுக, பளபளபளபள என்றெல்லாம் மூச்சுவிடாமல் பின்னிப்பெடலெடுத்திருப்பார். கொட்டாவி விடுவது, ஆச்சர்யப்படுவது என்று எல்லா வேலைகளையும் பாடலுக்கு நடுவே செய்திருப்பார். குரலைக் கேட்டால் அவர் என்று சொல்லவே முடியாது.

'ராஜாவிடம் பாடுவதென்றால் அவர் சொன்னதைத்தான் பாடணும். எக்ஸ்ட்ரா சங்கதியெல்லாம் போட்டா கோச்சுப்பார்’ என்று எஸ்.பி.பி பல மேடைகளில் சொல்லுவார். அதெல்லாம் அவருக்குதான் போல. கமல் முடிந்தவரை இஷ்டத்துக்கு சங்கதிகளில் ‘இப்டிக்கா போய் அப்டிக்கா வந்து யூடர்ன் அடித்து ராஜா முன்னால் நின்று பல்டி அடித்து ’ என்றெல்லாம் வெரைட்டி காட்டுவார்.

நெக்ஸ்ட்... ‘செம்ம சாங்’ என்று சொல்ல வைக்கிற ‘விக்ரம்... விக்ரம்’. ராஜா கம்யூட்டர் ம்யூசிக் போட்டிருக்காராம் என்றெல்லாம் பேசப்பட்ட பாடல். ஒரு கம்பீரம், கெத்து பாடல் முழுவதும் இருக்கும். ஹீரோயிக் பாடலுக்கு சரியான உதாரணம் இந்தப் பாடல். சரணத்தின் முதல் வரிகள் (பேர் செல்லட்டும் என் பேர் வெல்லட்டும்) முதலில் ஒரு டோனிலும் பிறகு ஒரு டோனிலும் பாடுவதாகட்டும், ‘சொர்க்கங்கள் இதோ இதோ’ என்பதில் இதோவில் காட்டிய வெரைட்டி ஆகட்டும், ‘ம்ம்ம்ம்.. பொறுப்பது புழுக்களின் இனமே’ என்பதில் உள்ள எள்ளலும், ‘ஆம்.. அழிப்பது புலிகளின் குணமே’ என்பதில் துள்ளலும் என்று கலக்கியிருப்பார் மனுஷன்.

 

என்னடா எஸ்.பி.பியோடு சம்பந்தப்படுத்தியே எழுதிகிட்டு என்று திட்டாதீர்கள். பாட்டு என்று வரும்போது அவரைச் சொல்லாமல் எப்படி... இதே விக்ரம் படத்தில் ‘வனிதாமணி.. வனமோகினி’ பாடலில் ‘கண்ணே தொட்டுக்கவா.. கட்டிக்கவா...’ என்ற தொகையறாவை கமல் பாடியிருப்பார். அடுத்தவரியைப் படிக்கும் முன், அந்தப் பாடலின் ஆரம்பத்தைக் கேட்டுவிடுங்கள். அதில், ‘பசிதாங்குமா இளமை இனி.. பரிமாறவா இளமாங்கனி’ என்ற வார்த்தைகளைத் தொடர்ந்து இடைவெளியில்லாமல் ‘வனிதாமணி வனமோகினி’ என்று பாட்டு ராட்சஷன் பாலு ஆரம்பிப்பார். வசனம் பேசியது கமல்.. பாடலாய்த் தொடர்ந்தவர் பாலு. வித்தியாசம் கண்டுபிடிக்க முடிந்ததா என்று யோசியுங்கள். True Legends!

 

 

அப்படிப் பார்க்கும்போது இந்தப் பாடலையும் சொல்லவேண்டும். தேவர் மகன் படத்தில், ‘சாந்துப் பொட்டு.. ஒரு சந்தனப் பொட்டு’ பாடல். பாடியது எஸ்.பி.பி. சரணத்தின் கடைசியில் வருகிற வசனங்கள் கமல் குரல்வண்ணம்.‘ஒரு வாய்க்கொழுப்பெடுத்தா...’ என்று முதல் சரணத்திலும் ‘கம்பு சாத்திரம் தெரியும்’ என்று இரண்டாம் சரணத்திலும் வரும். இரண்டாம் சரணம் முடிவில் ‘ஒக்காத்தி ஒன்ன நான் முக்காடு போடவைப்பேன்’ என்று முடித்து ஒரு சிரிப்பு சிரித்திருப்பார் கமல். தொடர்ந்து எஸ்.பி.பி சாந்துப்பொட்டு என்று பாடும்போது ஒரு குட்டி நடுக்கம் தெரியும். ‘என்னய்யா இப்படி சிரிப்புலயே சங்கதி போடறான் இந்தாளு’ என்று எஸ்.பி.பி. நினைத்ததால் வந்த நடுக்கமாக இருக்கலாம்... ஒரே நேரத்தில் ரெகார்டிங் நடந்திருக்கும் பட்சத்தில்!

கமலில் குரலில் முக்கியப்பாடல்களின் வரிசையில் பேர் சொல்லும் பிள்ளை படத்தின் ‘அம்மம்மா வந்ததிங்கு’ பாடலும் உண்டு. தென்பாண்டி சீமையிலே (நாயகன்), போட்டா படியுது படியுது (சத்யா), ராஜா கைய வெச்சா (அபூர்வ சகோதரர்கள்), சுந்தரி நீயும் சுந்தரன் நானும் (மை.ம.கா.ரா), கண்மணி அன்போடு (குணா), எங்கேயோ திக்கு தெசை (மகாநதி), என்று பெர்ர்ர்ர்ரிய லிஸ்டில் பாடிய எல்லாமே தன் பங்கை சிறப்பாக அளித்திருப்பார் கமல். ராஜாவின் ஆல்பங்களில் பலரது ஃபேவரைட் லிஸ்டில் எப்போதுமே ‘சிங்காரவேலன்’ உண்டு. எல்லா பாடல்களுமே சிறப்பு. சொன்னபடி கேளு பாடலில் சகல வெரைட்டிகளையும் அள்ளித் தெளித்திருப்பார் கமல். பாடகராக கமலின் த பெஸ்ட் என்று நான் நினைக்கிற, ரொம்பவே ஹைபிட்ச்சில் அமைந்த ‘போட்டு வைத்த காதல் திட்டம்’ பாடலும் இதே படம்தான்.

கலைஞன் படத்தில் ‘கொக்கரக்கோ கோழி..’ என்றொரு பாடல். Rare Song வகையறா. யூ ட்யூபுக்கெல்லாம் ஓடிவிடாமல், இங்கேயே கீழேயுள்ள வீடியோவில் 2.10 நிமிடத்தில் ‘நாட்டுப்பாடல் கொஞ்சம் பாதி’க்கு அடுத்து ‘வெளிநாட்டுப் பாடல் மிச்சம் மீதி’ என்ற வரியை என்ன டோனில் பாடியிருக்கிறார் என்று மட்டும் கேளுங்கள். அதைப் போலவே 3.40-ல் ‘எண்ணிப்பார்க்க நேரம் ஏது’ என்ற வரிக்கு முன் ஒரு சின்ன ஏமாற்றச் சிணுங்கல் சிணுங்கியிருப்பார். அதுவும் சிறப்பாய் இருக்கும். எத்தனை பேர் கவனிப்பார்களோ என்ற கவலையெல்லாம் இந்த கலைஞனுக்கு இல்லையே!

இளையராஜாதான் இவரை சரியாகப்பயன்படுத்திக் கொண்டது என்று சொல்லவிட்டதில்லை இவர். எம்.எஸ்.வி. இசையில் சவால் படத்தில்கூடப் பாடியிருக்கிற இவர், இசை யாராக இருப்பினும், பாடகராய்ப் பரிமளிப்பதில் பெஸ்ட்! ரகுமான் இசையில் ஆலங்கட்டி மழை (தெனாலி), யுவனுக்கு புதுப்பேட்டையில் நெருப்பு வாயினில் என்று பிற இசையமைப்பாளர்களிடம் கமல் பாடிய நீண்ட லிஸ்ட்டில் சில பாடல்கள் கீழே. உல்லாசம் படத்தில் கார்த்திக் ராஜா இசையில் ‘முத்தே முத்தம்மா’ அப்போதைய ஹிட் லிஸ்ட். இந்தப் பாடலின் நாயகன் யார் என்று தெரியும்தானே.. ஏனென்றால்.. அஜித்துக்கு கமல் பின்னணி பாடியிருக்கிறார் என்பது ‘’நம்மில் எத்தினி பேருக்கு தெரியும்’ வகைதானே!

பாடல்  இசையமைப்பாளர்
காசு மேல காசு வந்து  கார்த்திக் ராஜா
சரவணபவகுக வடிவழகா  கார்த்திக் ராஜா
மடோன்னா பாடலா நீ கார்த்திக் ராஜா
நீலவானம்.. நீயும் நானும் தேவி ஸ்ரீ ப்ரசாத்
போனா போகுதுன்னு விட்டீன்னா தேவி ஸ்ரீ ப்ரசாத்
ஓ.. ஓ.. சனம்...  ஹிமேஷ் ரேஷ்மைய்யா
எலே மச்சி மச்சி... வித்யாசாகர்
யார் யார் சிவம்... வித்யாசாகர்
நாட்டுக்கொரு சேதி சொல்ல... வித்யாசாகர்
காதல் பிரியாமல்.. தேவா
கந்தசாமி... மாடசாமி தேவா
கலக்கப்போவது யாரு.. பரத்வாஜ்
ஆழ்வார்பேட்ட ஆளுடா.. பரத்வாஜ்
கடவுள் பாதி மிருகம் பாதி.. ஷங்கர் எஸான் லாய்
அணுவிதைத்த பூமியிலே... ஷங்கர் எஸான் லாய்
கண்ணீர் அறியா கண்களும் உண்டோ ஸ்ருதி ஹாசன்
நீயே உனக்கு ராஜா ஜிப்ரான்

விஸ்வரூபம் படத்தில் ‘உனைக்காணாது நானிங்கு நானில்லையே’ ஷங்கர் மஹாதேவன் குரல் என்றாலும், பாடலின் ஆரம்பத்தில் ‘அதிநவநீதா.. அபிநயராஜா கோகுலபாலா கோடிப்ரகாசா’ என்று தூள் கிளப்பியது கமல்தான். நளதமயந்தி படத்தில் ரமேஷ் விநாயகம் இசையில் ‘Stranded On The Streets’ இந்தப் பாடலை எத்தனை பேர் கேட்டிருக்கிறீர்கள் என்று தெரியாது. ஒரு இங்க்லீஷ்காரன் போல பாடிக் கலக்கியிருப்பார் மனுஷன். குரலில் வழியும் அந்த ஸ்டைல்.... ப்பா!

தேவா இசையில் ‘ருக்கு ருக்கு’ பாடலை, முழுவதுமே பெண்குரலில் பாடியிருப்பார். ஹிமேஷ் ரேஷ்மைய்யா இசையில் தசாவதாரம் படத்தின், முகுந்தா முகுந்தா பாடலில் சாதனா சர்கம் பாடி முடித்ததும் ‘உசுரோடிருக்கான் நான் பெத்த புள்ள’ கமல் பாடியதுதான். அந்தப் பாட்டி குரலிலும் இருமிக்கொண்டே சங்கதியெல்லாம் போட்டு... என்ன மனுஷன்யா இவரு என்று நினைக்க வைத்திருப்பார். தமிழ் அல்லாமல் வேறு மொழிகளிலும் பாடியிருக்கிறார் மனுஷன். இப்ப ரொம்பநாளைக்கப்பறம் ராஜாகூட கைகோர்த்திருக்கார் கமல். சப்பாணியா நடிச்ச படம் முதல் தொடங்கிய அவர்களின் பயணம், இந்த சபாஷ் நாயுடுல எப்படி இருக்கும்? அதுல கமல் எத்தனை பாட்டு பாடிருப்பார் என்று ஆவலோடு இருக்கிறேன். நிச்சயம் ஏமாற்ற மாட்டார்கள் இருவரும் என்று நினைக்கிறேன்.

நீயே உனக்கு ராஜா.. உனது குரலே உனது வீரம் தோழா! 

-பரிசல் கிருஷ்ணா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்