வெளியிடப்பட்ட நேரம்: 09:20 (25/11/2016)

கடைசி தொடர்பு:10:14 (25/11/2016)

யுவன் ஷங்கர் - செல்வராகவன் கூட்டணியில் `நெஞ்சம் மறப்பதில்லை’ பாடல்கள் எப்படி?

நெஞ்சம் மறப்பதில்லை

செல்வராகவன் - யுவன் ஷங்கர் ராஜா கூட்டணியில் மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியாகியிருக்கிறது நெஞ்சம் மறப்பதில்லை பாடல்கள். இதாவது பழைய யுவனை திரும்பக் கொண்டு வருமா என்று இசைப் பிரியர்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள். எப்படி இருக்கிறது பாடல்கள்?

பாடல்: கண்ணுங்களா... செல்லங்களா

குரல்: யுவன் ஷங்கர் ராஜா

நெஞ்சம் மறப்பதில்லை

ஆரம்ப வரிகள் கவரவில்லை. வார்த்தைகள் மெட்டில் உட்காரவே இல்லை. பல்லவி முடிந்து முதல் இடையிசையில் டிபிகல் யுவன் ஸ்டைலில் இசை ஆரம்பிக்கிறது. ‘செல்லக் கிளிகளாம் பள்ளியிலே’ (கண்ணதாசன்) பாடலின் வரிகளில் ஒரு சரணம். ஆனால் பாடலுடனே வரும் புல்லாங்குழல் இசை கவர்கிறது. 
 
பாடல்: மாலை வரும் வெண்ணிலா
குரல்கள்: தனுஷ், யுவன் ஷங்கர் ராஜா

யுவன்

மெதுவான கீபோர்டில் யுவனின் குரலில் மென் தென்றலாய் ஆரம்பிக்கிறது பாடல். உடன் சேரும் டிரம்ஸ் பீட், துள்ளுவதோ இளமை காலத்தை நினைவுக்கு கொண்டு வருகிறது. மெட்டு பழைய பாடல்களின் சாயல், ஆனால் கோரஸ் புதிய ஸ்டைல் என்று மிக்ஸ் செய்திருக்கிறார் யுவன். தனுஷ் குரல் தொடங்கும் இடத்தில் பாடலின் கொண்டாட்டத் தன்மை குறைந்து சீரியஸ் டோனுக்கு மாறுகிறது. கடைசி 20 நொடிகளின் எலக்ட்ரிக் கிடார் யுவன் ஸ்பெஷல்.

பாடல்: என் பொண்டாட்டி ஊருக்குப் போய்ட்டா
குரல்கள்: யுவன் ஷங்கர் ராஜா, எஸ். ஜே. சூர்யா

செல்வராகவன்

இதுவும் புதுப்பேட்டை யுவனை ஞாபகப்படுத்தும் இசையில் ஆரம்பிக்கிறது. ‘என் பொண்டாட்டி ஊருக்குப் போய்ட்டா..’ என்பதை கொண்டாட்டமாக்கி பாடலாக்கியிருக்கிறார்கள். வழக்கமாக, தமிழ் திரையிசைப் பாடல்கள் எல்லா சந்தர்ப்பங்களுக்கும் உண்டு. மனைவியைப் பிரிந்து வாழும் கணவனும் ஃபீல் செய்து பாடுவதாய் ‘நியூயார்க் நகரம்’ பாடல் உண்டு. மனைவி ஊருக்குப் போய்விட்டதைக் கொண்டாடும் பாடல் இதுதான் என்று நினைக்கிறேன். ஒரே டெம்போவில் பாடல் அமைந்தாலும், செல்வா - யுவன் கூட்டணிக்கே உரிய டிபிகல் ஸ்டைலில் முடிகிறது பாடல்.

பாடல்: Good, Bad & Ugly
குரல்: ஐஸ்வர்யா குமார்

 

 

படத்தின் தீம் ம்யூசிக். பெண் குரல் ஆலாப்-பில் மெலடி போல ஆரம்பிக்கிற கீபோர்ட் இசையுடன் இணைகிறது வயலின். 1.33 வரை. அதன்பின் பீட்ஸ் ஆரம்பிக்க தடதடக்கிறது இசை. பீட்டுடன், வயலினும் இணைந்து அதகளாம் பண்ண, 2.28ல் இருந்து 3.00 வரை ட்ரீட். 3வது நிமிடத்தில் புல்லாங்குழல் இணைகிறது. 3.22ல் ஒரு அமைதி. அதன் பிறகு வேறொரு தளத்திற்கு செல்கிறது இசை. மொத்த இசையையும் மூன்றாகப் பிரித்து Good, Bad & Ugly என்று நாயகனின் Moodஐ தனித்தனியாகச் சொல்கிறது. யுவனின் கம் பேக் இசை.  

 

யுவன் ஷங்கர் ராஜா

துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7G ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆடவாரி மாட்டலேகு அர்த்தலே வேருலே (யாரடி நீ மோகினியின் தெலுகு வெர்ஷன்) என்று சொல்லி அடித்துக் கொண்டிருந்த யுவன் - செல்வராகவன் கூட்டணி ஆயிரத்தில் ஒருவன் படத்தில் பிரிந்தது. அதன் பிறகு செல்வராகவன் இயக்கிய மயக்கம் என்ன, இரண்டாம் உலகம் இரண்டுமே வேறு இசையமைப்பாளர்கள். இந்நிலையில் நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் மீண்டும் இந்த இசைக்கூட்டணி இணைகிறது என்று கேள்விப்பட்டதுமே யுவன் இசையைக் கேட்க துடித்துக் கொண்டிருந்த ரசிகர்கள் ‘Come Back Yuvan' என்று கொண்டாடினார்கள். முதலில் வெளியிட்ட Good, Bad & Ugly தீம் ம்யூசிக்கும் அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது.

நேற்று வெளியான மூன்று பாடல்களைப் பொறுத்தவரை நிச்சயம் வேறு வகை டிரீட்மென்ட் தான். நிச்சயம் செல்வராகவன் படத்துக்குண்டான ஜானர்தான். பாடல்களையும் செல்வராகவனே எழுதியிருக்கிறார். முழுக்க முழுக்க யுவனிசம் பிடித்து, செல்வராகவனையும் பிடித்தவர்களுக்கு ஜாக்பாட் போல அமைந்திருக்கின்றன பாடல்கள். நம்மைப் போலவே, செல்வாவும் யுவனும்     நா. முத்துக்குமாரை மிஸ் செய்கிறார்கள் என்பது தெரிகிறது. படம் ஹிட்டானால் சொல்லி அடிக்கும். புதுப்பேட்டை படத்தின் பாடல்கள் வெளியானதற்கும், படம் வெளியானதற்கும் சில மாதங்கள் இடைவெளி இருந்ததால், ஆரம்பத்தில் ‘எங்க ஏரியா உள்ள வராதே’வும், ‘வர்றியா..’ இசையும் கவனிக்கப்பட்டது. படம் பிடித்துப் போக, இன்றைக்கு அதன் பிஜியெம்மைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். அதே போல இந்தப் படத்தின் வெற்றி, இசையை இன்னும் கொண்டாட வைக்கும்.

இருந்தாலும், முழுக்க முழுக்க யுவன் மட்டுமே பாடும் ஒரு மென்சோகப் பாடல் எதிர்பார்ப்பில் இருந்தது என்பதை மறைக்க முடியவில்லை. அடுத்த ஆல்பத்தில்... ப்ளீஸ்!

-பரிசல் கிருஷ்ணா  

நீங்க எப்படி பீல் பண்றீங்க