சினிமா
Published:Updated:

முதல் நீ முடிவும் நீ - சினிமா விமர்சனம்

முதல் நீ முடிவும் நீ
பிரீமியம் ஸ்டோரி
News
முதல் நீ முடிவும் நீ

அடுக்கடுக்கான காட்சியமைப்புகளால் முதல் பாதி நகர, இரண்டாம் பாதியோ எங்கே செல்வது எனத் தெரியாமல் சிக்கித் தவிக்கிறது.

90களை பள்ளிகளில் செலவழித்தவர்களைத் திரும்பவும் டைம் மெஷினில் ஏற்றிக்கொண்டு போய்ச் சுற்றிக் காட்டினால் அதுதான் ‘முதல் நீ முடிவும் நீ.’

கிஷன் தாஸ், ஹரீஷ் குமார், கெளதம், மீத்தா, அம்ரிதா எனப் பெரும்பட்டாளம் ஒன்றின் பள்ளிக்கால சேட்டைகளும் அனுபவங்களும்தான் முதல் பாதி. 90களில் பிறந்தவர்கள் பொருத்திப் பார்த்துக்கொள்ளக்கூடிய வாக்மேனில் ரஹ்மான் இசை, ஆர்.எக்ஸ் 100 காதல், பள்ளியைக் கட்டடித்து விட்டுச் சுற்றும் குறும்புகள், பதின்பருவக் காதலும் அதுதரும் குழப்பங்களும் என ஸ்லாம் புக்கைப் பக்கத்துக்குப் பக்கம் புரட்டிப் பார்த்ததுபோல இருக்கிறது. இரண்டாம் பாதியில் அப்படியே நேர்மாறாக வளர்ந்தபின்னான அவர்களின் வாழ்க்கையைப் படம் போட்டுக் காட்டுவதாகப் பயணிக்கிறது கதை.

இருவேறு காலகட்டங்கள், ஆனால் அதே நடிகர்கள். அவர்களை நாம் நம்பும்படி காட்டியதில் இருக்கிறது இயக்குநரும் இசையமைப்பாளருமான தர்புகா சிவாவின் வெற்றி. கிஷன் தாஸ், மீத்தா இருவரும் இந்தக் காலமாற்றத்தைப் பக்குவமாகத் திரையில் கொண்டு வந்திருக்கிறார்கள். இவர்களுக்கு அடுத்து அதிகம் கவனம் ஈர்ப்பது சைனீஸாக வரும் ஹரீஷ் குமார்தான். நம் எல்லாரின் நட்பு வட்டத்திலும் இருக்கும் ஊமைக்குசும்பனை அப்படியே படத்தில் பிரதிபலிக்கிறார் ஹரீஷ்.

வாசுதேவனின் கலை இயக்கம் படத்தின் பெரும் பலம். அப்போதைய நிலப்பரப்புகள் இப்போது பெரிதாக மாறிவிட்ட நிலையில் சின்னச் சின்ன விஷயங்களின் வழியே 90களைக் கண்முன் நிறுத்துகிறது அவரின் கலை இயக்கம். அதற்கு வண்ணங்கள் வழியே ஒத்துழைக்கிறது சுஜித் சாரங்கின் ஒளிப்பதிவு. ‘முதல் நீ’ பாடலும் பின்னணி இசையும் ரசிக்க வைக்கின்றன.

முதல் நீ முடிவும் நீ - சினிமா விமர்சனம்

பள்ளிகளில் இயல்பாகவே ஊறிக்கிடக்கும் அலட்சியம், பின் முப்பதை நெருங்கும்போது நிகழும் பார்வை மாற்றம் - இவை இரண்டையும் கதாபாத்திர வரைவுகளின் மூலம் அழகாகக் கடத்திய விதத்தில் கவனம் ஈர்க்கிறார் தர்புகா சிவா. தன்பால் ஈர்ப்பு பற்றிப் பேசும் இடம் கொஞ்சம் நாடகத்தன்மையோடு இருந்தாலும் தேவையான நிகழ்வு.

அடுக்கடுக்கான காட்சியமைப்புகளால் முதல் பாதி நகர, இரண்டாம் பாதியோ எங்கே செல்வது எனத் தெரியாமல் சிக்கித் தவிக்கிறது. இடைவேளை வரும்போதே கிட்டத்தட்ட ஒரு படம் பார்த்துவிட்ட உணர்வு எழுவதற்கு படத்தின் நீளம் முக்கிய காரணம். இறுதிக்காட்சியும் வலிந்து திணிக்கப்பட்ட உணர்வையே தருகிறது.

குறைகளைத் தவிர்த்து, நமக்குப் பிடித்தமான நாஸ்டால்ஜியா நினைவுகளை மெலிதாகக் கிளறிவிடுகிறது இந்த ‘முதல் நீ முடிவும் நீ.’