Published:Updated:

முத்தையா முரளிதரன் பயோபிக்கில் இருந்து விலகினாரா விஜய் சேதுபதி! - பின்னணி என்ன?

முத்தையா முரளிதரன்
விஜய் சேதுபதி
முத்தையா முரளிதரன் விஜய் சேதுபதி

சினிமா விழாக்களில் கலந்துகொள்ளும்போது எப்போதும் வெட்டு ஒன்று, துண்டு இரண்டாக பேசும் விஜய் சேதுபதி `முத்தையா' பட விவகாரத்தில் மெளனம் காப்பது ஏன்?

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் பயோபிக் எடுக்கப்பட இருப்பதாகவும் அந்தப் படத்துக்கு `800’ என பெயர் வைத்திருப்பதாகவும் தகவல்கள் வந்தன. இந்த பயோபிக்கில் முத்தையா முரளிதரனாக விஜய்சேதுபதி நடிக்கிறார் என தகவல்கள் வந்ததும், ஆச்சர்யத்தோடு சில ஈழத்தமிழர்களின் எதிர்ப்புகளும் தொற்றிக்கொண்டன. `இயற்கையாகவே முத்தையா முரளிதரன் தமிழராக இருந்தும் ஒருநாளும் ஈழத்தமிழருக்கு ஆதரவாக அவர் செயல்பட்டதே இல்லை. எப்போதும் சிங்களர்களுக்கே ஆதரவாக செயல்பட்டு வந்திருக்கிறார். விடுதலைப் புலிகளுக்கும், சிங்களர்களுக்கும் நடந்த தாக்குதலில், கடைசிக்கட்ட தமிழர்கள் வசித்த வவுனியா, முள்ளிவாய்க்கால் பகுதிகளை சிங்கள ராணுவம் சீரழித்தது. தமிழர்கள் வாழ்விழந்து, வீடிழந்து தவித்தபோது கண்டுகொள்ளாத முரளிதரன், சிங்கள கிராமம் ஒன்றை தத்தெடுத்து பாதுகாத்து வருகிறார்' என்கிற செய்திகள் விஜய் சேதுபதி காதுகளுக்கு கொண்டு செல்லப்பட்டன. இதனால் இந்தப் படத்திலிருந்து விலகிவிட்டதாகவும் இந்தப்படத்துக்கு கொடுத்த கால்ஷீட் தேதிகளைத்தான் அப்படியே `துக்ளக் தர்பார்' படத்துக்கு கொடுத்துவிட்டதாகவும் சொல்கிறார்கள்.

தற்போது `சூப்பர் டீலக்ஸ்' படத்துக்கான அவார்டு விழாவில் கலந்துகொள்வதற்காக ஆஸ்திரேலியாவுக்குச் சென்றிருக்கிறார், விஜய் சேதுபதி. சென்னை திரும்பியதும் கொடைக்கானலில் நடக்கும் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார்.

விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி

சொந்தமாக தயாரிக்கும் `லாபம்' படத்தின் பட்ஜெட் அதிகம் என்பதால் அடுக்கடுக்காக புதுப்படங்களை ஒப்புக்கொண்டு, அட்வான்ஸாக தரும் பணத்தை சொந்தப் படத்துக்கு முதலீடு செய்துவருகிறார். `முத்தையா' படத்துக்கும் முன்பணம் வாங்கி விட்டதாகவும் திடீரென தோன்றிய ஈழவிவகாரத்துக்குப் பிறகு `துக்ளக் தர்பார்' படத்துக்கு வாங்கிய அட்வான்ஸ் பணத்தை `முத்தையா' தயாரிப்பாளருக்கு திருப்பிக் கொடுத்துவிட்டதாகவும் சொல்கின்றனர்.

`முத்தையா' பட விவகாரத்தில் உண்மையில் நடந்தது என்ன? என்பது குறித்து விசாரித்தபோது, விஜய் சேதுபதி `முத்தையா' வேடத்தில் நடித்தால் அந்தப்படம் ரிலீஸாகும்போது ஈழத்தமிழர்கள் எதிர்ப்பார்கள். தமிழ் சினிமாவின் ஒட்டுமொத்த நடிகர்களின் ஓவர்ஸீஸ் வியாபாரமே உலக நாடுகள் முழுக்க நிரம்பி வாழும் ஈழத்தமிழர்கள் கையில்தான் இருக்கிறது என்பது நிதர்சமான உண்மை. விஜய் சேதுபதி படத்துக்கும் இதே நிலைமைதான் என்பது அவருக்குத் தெளிவாகத்தெரியும். ஏற்கெனவே ஒருமுறை சில விஷமிகளால் அர்ஜுனும், அஜித்தும் ஏதோ ஈழத்தமிழருக்கு எதிரானவர்கள்போல சித்திரித்து செய்தி பரப்பப்பட்டது. அப்போது நடிகர் சங்க வளாகத்தில் இலங்கை தமிழருக்கு ஆதரவாக நடந்த கூட்டத்தில் அஜித் கலந்துகொண்டு, `என்னையும் அர்ஜுன் சாரையும் பற்றி வெளியான செய்தி வதந்தி. நாங்கள் உலகம் முழுக்க உள்ள இலங்கை தமிழர்களின் அன்பை என்றைக்கும் மதிப்பவர்கள்' என்று மனம் திறந்து பேசினார்.

விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி

எதையும் வெளிப்படையாகவும் உடனுக்குடனும் பேசிவிடும் விஜய் சேதுபதி, `முத்தையா' பட விவகாரத்தில் மெளனம் காப்பது ஏன் எனத் தெரியவில்லை. தற்போது மூன்று படங்களில் நடித்து வருகிறார், விஜய்சேதுபதி. தனது சொந்த பேனரில் பெரும் பட்ஜெட் செலவில் `லாபம்' படத்தை தயாரித்து நடித்துவருகிறார். ஈழத்தமிழர் உணர்வுகளுக்கு எதிராக `முத்தையா' படத்தில் விஜய் சேதுபதி நடித்தால், உலக நாடுகளின் ஓவர்ஸீஸ் விஷயத்தில் தனது மூன்று படங்களின் வியாபாரமும் மொத்தமாக பாதிக்கப்படும் என்பதால்தான் மெளனமாக இருந்துவருகிறார். தற்போது ஆஸ்திரேலியாவுக்கு விருது வாங்கச் சென்றிருக்கும் விஜய் சேதுபதி, தமிழ்நாடு திரும்பிய பிறகு இதைப் பற்றி பேசுகிறாரா என பொறுத்திருந்துப் பார்ப்போம்.

அடுத்த கட்டுரைக்கு