Published:Updated:

இரவின் தனிமைக்கு உங்கள் பாடல்கள்தான் தமிழ் தலையணை நா.முத்துக்குமார்!

Na Muthukumar

அவர் இறந்து வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் இன்னமும் அவர் எழுதிய பாடல்களைக் கொண்ட பல படங்கள் திரைக்கு வரக் காத்துக்கொண்டிருக்கின்றன. அதில், சில பெரிய இயக்குநர்கள் படங்களும் அடக்கம். கலைஞனுக்கு அவன் மரணம் முடிவல்ல என்பதையும் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார், நா.முத்துக்குமார்!

இரவின் தனிமைக்கு உங்கள் பாடல்கள்தான் தமிழ் தலையணை நா.முத்துக்குமார்!

அவர் இறந்து வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் இன்னமும் அவர் எழுதிய பாடல்களைக் கொண்ட பல படங்கள் திரைக்கு வரக் காத்துக்கொண்டிருக்கின்றன. அதில், சில பெரிய இயக்குநர்கள் படங்களும் அடக்கம். கலைஞனுக்கு அவன் மரணம் முடிவல்ல என்பதையும் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார், நா.முத்துக்குமார்!

Published:Updated:
Na Muthukumar

பாடல்களை ரசிப்பதில் இரண்டு வகைகள் உண்டு. குழந்தைப் பருவத்தில் பெரும்பாலும் இசையில் மூழ்குவதே ரசனையின் வடிவமாக இருக்கும். முதிர்ச்சியை நோக்கி வாழ்க்கை நகர நகர இசையைக் காட்டிலும் வரிகளே நமக்கான தேடலாக மாறும். காதல், அன்பு, ஏக்கம், பிரிவு, நட்பு, வலி, ஊக்கம், தேவை, வெற்றி, தோல்வி என வாழ்வின் எந்த ஒரு நிலைக்கும், சூழலுக்கும் ஒரு பாடல் நம்முடைய மனதில் தொடர்புபடுகிறதென்றால், அது பெரும்பாலும் அதன் வரிகளால்தான் சாத்தியப்படும். எனக்கு, தனிப்பட்ட முறையிலும் வரிகளே பலமுறை பல பாடல்களை மீண்டும் கேட்பதற்கான காரணமாகவும் இருந்துவருகின்றன.

தமிழ் திரையுலகம் கண்ணதாசனை இழந்து, தமிழுக்காக சில காலம் ஏங்கித் தவித்துக்கொண்டிருந்தது. வாலி, வைரமுத்து போன்ற பெருங்கவிஞர்கள் தங்களால் இயன்ற அளவு இசையைத் தங்கள் மொழியால் அலங்கரித்து வந்தனர். அவர்கள் வழிவந்த பல பாடலாசிரியர்களும் மொழியில் சமரசம் செய்யாமல் மெட்டுக்குத் தமிழ் சேர்த்தனர். என்றாலும், கண்ணதாசன் விட்டுச்சென்ற இடைவெளி நீண்ட காலத்துக்கு நிரப்பப்படாமலேயே இருந்தது. இலக்கண ஒழுக்கம், மரபுசார் பாவீச்சு, சங்க இலக்கியங்களின் தாக்கம் எனக் கண்ணதாசன் பாடல்களில் காணப்பட்ட தமிழ் மொழி நுணுக்கங்கள், திரையிசையில் பல காலத்துக்கு இல்லாமலேயே போனது.

Caricature of Na Muthukumar
Caricature of Na Muthukumar

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அப்படிப்பட்ட காலகட்டத்தில்தான், இருபதாம் நூற்றாண்டின் இறுதி ஆண்டான 1999-ல் 'வீரநடை' படம் மூலமாக அறிமுகமாகி, அடுத்து வரவிருந்த 21-ஆம் நூற்றாண்டின் பெரும்பகுதியைத் தன் மொழியால் ஆட்சி செய்ய திரையுலகத்துக்குள் காலடி எடுத்துவைத்தார், நா.முத்துக்குமார். ஒரு பாடலாசிரியருக்கு இத்தனை பெரும் புகழாரம் தேவைதானா என்றால், முத்துக்குமாருக்குக் கண்டிப்பாக தேவைதான் என்பதே என் பதிலாக இருக்கும். அப்படி என்னதான் அவர் செய்துவிட்டார் என்று கேட்பீர்களானால், இதோ உங்களுக்காக சில குறிப்புகள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

காதல் பாடல் என்றால், அதிலும் காதலியை வர்ணிக்கும் பாடல் என்றால், சங்க இலக்கியம் தொட்டு இன்று வரை அதில் இன்பச் சுவையும், காமச் சுவையும் மிகுதியாகவே இருக்கும். இயற்கையின் அங்கங்களான மலை, வனம், கடல், மழை எனப் பெருங்காட்சிகள் தொடங்கி, பூ, புல் வரை, அனைத்து உவமைகளையும் 2000 ஆண்டுகளாக புலவர்களும், பாடலாசிரியர்களும் பயன்படுத்தித் தீர்த்துவிட்டு, அடுத்தபடியாக பெண்களைப் பொருள்படுத்தி (objectify), தமிழ் திரையிசை மூலமாக கொச்சைபடுத்திக் கொண்டிருந்த காலகட்டத்தில்தான் 'மெல்லினம் மார்பில் கண்டேன்... வல்லினம் விழியில் கண்டேன்... இடையினம் தேடியில்லை என்பேன்' என காதலியைத் தமிழ்படுத்தினார் முத்துக்குமார்.

Suttum Vizhi Sudare - Ghajini
Suttum Vizhi Sudare - Ghajini

அவருடைய வருகைக்குப் பிறகு தமிழ் திரையிசையில் வரிகளுக்கான முகாமைத்துவம் மேலும் அதிகரித்தது. கார்த்திக் நேத்தா, விவேக் என அவரைத் தொடர்ந்து வந்த பல புதிய பாடலாசிரியர்களும், நா.முத்துக்குமார் சினிமாவில் ஏற்படுத்திய மொழிப்புரட்சியின் விளைவாக பல நல்ல பாடல்களை எழுதி வருகின்றனர் என்றே சொல்லலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பொதுவாக, ஒரு பாடலாசிரியருக்கென ஒரு தனி இயல்பிருக்கும். இதை அவர்களின் கம்ஃபோர்ட் ஜோன் (Comfort Zone) என்று கூறுவார்கள். குத்துப்பாடலா இவரைக் கூப்பிடுங்கள், சோகப் பாடலா அவரைக் கூப்பிடுங்கள், தத்துவப்பாடல் அவருக்கு எழுத வராது, இவர் காதல் பாடல் எழுதுவதில் வல்லவர்... என பாடலாசிரியர்களை வகைப்படுத்தி வைத்திருப்பார்கள், இயக்குநர்கள். ஆனால், நா.முத்துக்குமாருக்கு கம்ஃபோர்ட் ஜோன் என்ற ஒன்றே இல்லை எனும் அளவுக்கு எல்லா வகைப் பாடலிலும் கைத்தேர்ந்தவராக இருந்தார்.

No Money No Honey - Vaanam
No Money No Honey - Vaanam

'மின்சாரக் கம்பிகள் மீது... மைனாக்கள் கூடு கட்டும்... நம் காதல் தடைகளைத் தாண்டும்' என் ஒரு சோகப் பாடலில் அவர் கடைபிடித்த எளிமையை, மொழி ஒழுக்கத்தை, 'கட்டையில போகும்போதும் காசுவேணும்... கல்லறையில் தூங்கும்போதும் காசுவேணும்...' என ஒரு குத்துப்பாடலிலும் காட்டியவர். இப்படி இன்னும் பல சான்றுகளைக் குவிக்கலாம்.

பாடல் எழுதுபவர்கள் புகழுக்கு ஆசைப்படுபவர்கள், அடைமொழிக்கு ஏங்குபவர்கள், கர்வம் பிடித்தவர்கள், ஆடம்பர விரும்பிகள் எனப் பல பொதுப்படையான கருத்துகள் பெரும்பான்மைச் சமூகத்தால் நம்பப்பட்டுக்கொண்டிருந்த வேளையில், அழுக்குப் படிந்த, வெளுத்த கட்டம்போட்ட சட்டையுடன் ஒலிப்பதிவுக் கூடங்களுக்கும், மேடை நிகழ்ச்சிகளுக்கும் வந்து தன் தமிழையும், திறமையையும் மட்டுமே முன்னிலைப்படுத்த நினைத்தவர், முத்துக்குமார்.

Aariro - Deivathirumagal
Aariro - Deivathirumagal

"இப்போ எல்லாம் என்ன பாட்டா எழுதுறாங்க" எனக் கேட்கும் இரண்டு மூன்று தலைமுறைக்கு முந்தயவர்கள்கூட நா.முத்துக்குமாரின் சில பாடல்களைத் தங்களை அறியாமல் முனுமுனுப்பார்கள். அம்மாக்களுக்கு மட்டுமே காப்புரிமை தரப்பட்டு, அவர்களால் மட்டுமே உரிமை கொண்டாடப்பட்டது, தாலாட்டு. அந்த உரிமையைத் தன் பாடல்கள் மூலமாக பெற்றுத் தந்தவர் நா.முத்துக்குமார். 'ஆனந்த யாழை', 'ஆரிரோ ஆராரிரோ', 'அழகு குட்டி செல்லம்' என அவர் எழுதிய தந்தையின் தாலாட்டுக்களே ஒரு தனி பிளே-லிஸ்ட் ஆக்கலாம். அதில்தான் பெருவாரியான நடுத்தர வயதுக்கார ஆண்கள் இந்தக் காலப் பாடலுக்கு அடிமையானார்கள். அந்தத் தலைமுறையைச் சார்ந்த பெண்களுக்கு 'ஒரு பாதி கதவு நீயடி... மறுபாதி கதவு நானடி', 'சற்று முன்பு பார்த்த நேரம் மாறிப்போக' என வேறு வகையான பிளே-லிஸ்ட்டைத் தந்து தன் வரிகளுக்குத் தனி பெண் ரசிகர் கூட்டத்தை உருவாக்கிக்கொண்டார்.

ஒரு கவிஞனின் தலையாயப் பண்புகளில் ஒன்று எனக் குறிப்பிட்டால், தனது உவமைகளைக் கண்டறிவதுதான். நினைவு தெரிந்த நாளிலிருந்து தான் கடந்துவந்த நிகழ்வுகள், வளர்ந்த சூழல், கொண்ட காதல், உறவாடிய மனிதர்கள் எனத் தன் மொத்த அனுபவத்திலிருந்துதான் ஒவ்வொரு கவிஞரும் தன்னுடைய உவமைகளைத் தேடிக்கொள்கிறார்கள். அப்படி, தான் காணும் எல்லாவற்றையும் உவமையாக்குவதில் வல்லவர் நா.முத்துக்குமார். உதாரணமாக, 'மதராசப்பட்டினம்' படத்தின் 'பூக்கள் பூக்கும் தருணம்' பாடல் வரிகளைச் சொல்லலாம். ஒருமுறை நா.முத்துக்குமார் இயக்குநர் விஜய்யுடன் இணைந்து அந்தப் பாடலை எழுதக் காரில் சென்றுகொண்டிருக்கும்போது, வழியில் கண்ட ஒரு காட்சி. ஒரு மரத்தின் கிளையில் அமர்ந்திருந்த பறவை ஒன்று கிளையைவிட்டுத் தாவி, காற்றில் பறந்த பிறகு அந்தக் கிளை சிறிது காலத்துக்கு ஆடிக்கொண்டிருந்தது.

Pookkal Pookkum Tharunam - Madarasapattinam
Pookkal Pookkum Tharunam - Madarasapattinam

அவர் எழுத இருந்த பாடலின் சூழலில், காதலனும் காதலியும் நாள் முழுக்கப் பேசி பேசி நடந்துகொண்டே இருந்தாலும், அவர்கள் பேச்சு தீர்ந்தபாடில்லை, அந்தப் பாதை முடிந்தும் அவர்களுடைய பயணம். அப்போது எழுதிய வரிகள்தாம் "பாதை முடிந்த பிறகும்... இந்த உலகில் பயணம் முடிவதில்லையே... காற்றில் பறந்தே பறவை மறைந்த பிறகும்... இலை தொடங்கும் நடனம் முடிவதில்லையே." இப்படி அவர் கண்ட காட்சிகளையெல்லாம் மாற்றிய வரிகளை மட்டுமே ஒரு தொகுப்பாகப் போடலாம் என பல இயக்குநர்கள் கூறுவார்கள்.

தன்னுடைய உவமைகளை வீணடிக்கவும் விரும்பாதவர் முத்துக்குமார். 'ஒரு கல்... ஒரு கண்ணாடி... உடையாமல் மோதிக்கொண்டால் காதல்' என்ற வரியை பல ஆண்டுகளாகப் பாதுகாத்து வைத்து, அந்த உவமைக்குப் பொருத்தமான ஒரு பாடலில் பயன்படுத்தினார். காதல் தோல்வி பாடல்களில் இன்றுவரை அந்தப் பாடலுக்கு ஒரு தனியிடமுண்டு.

Aanandha Yaazh - Thanga Meengal
Aanandha Yaazh - Thanga Meengal

நா.முத்துக்குமார், தன் பாடல்களைக் கேட்பவர்களுக்குப் பெரிதாக வேலைவைக்க விரும்பாத ஒரு எளிய பாடலாசிரியர். ஒரு வரியைக் குறித்து ஆழமாக யோசிக்காமல், கேட்ட அந்த நொடியே அதன் கருத்தை மனதோடு உரசவிட்டு அந்த உணர்ச்சியைப் பாடல் முடியும்வரை கட்டுக்குள் வைத்திருப்பார். 'கன்னத்தில் அடிக்கும் அடி முத்தத்தாலே வேண்டுமடி... மற்றதெல்லாம் உன்னுடைய இதழ்களின் இஷ்டப்படி...', 'காட்டிலே காயும் நிலவைக் கண்டுகொள்ள யாருமில்லை... கண்களின் அனுமதிவாங்கி காதலுமிங்கே வருவதில்லை', 'ஒரு பாதி கதவு நீயடி... மறுபாதி கதவு நானடி', 'தாலாட்டுப் பாடும் தாயின் அன்பும் தந்தை அன்பின் பின்னே', 'நீ பேசும் வார்த்தைகள் சேகரித்து... செய்வேன் அன்பே ஓர் அகராதி...' என அவர் பயன்படுத்திய உவமைகள் எத்தனை ஆழமாக இருந்தாலும், எளிமையாகவே இருக்கும்.

அவர் இறந்து வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும், இன்னமும் அவர் எழுதிய பாடல்களைக் கொண்ட பல படங்கள் திரைக்கு வரக் காத்துக்கொண்டிருக்கின்றன. அதில், சில பெரிய இயக்குநர்கள் படங்களும் அடக்கம். கலைஞனுக்கு அவன் மரணம் முடிவல்ல என்பதையும் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார்.

Akkam Pakkam - Kireedam
Akkam Pakkam - Kireedam

முதலில் சொன்னதுபோலத்தான். ஒரு பாடலின் வரிகள் எப்போதும் நம் வயது முதிர்ச்சிக்கு ஏற்றவாறு நம் மனதில் பதியும். உவமைகளைப் படைக்கும் கவிஞர்களுக்கு அது அனுபவத்தில் பிறக்கிறதென்றால், அப்படிப்பட்ட அனுபவத்தை அந்தப் பாடல், தன்னைக் கேட்பவரிடமும் எதிர்ப்பார்ப்பதில் எந்தத் தவறுமில்லை. முத்துக்குமாரின் வரிகளும் அப்படித்தான். வாழ்வின் ஒவ்வொரு காலகட்டத்துக்கும் தன் வடிவத்தை மாற்றிக்கொண்டே இருக்கும். தனிமையில் அமர்ந்து அவர் பாடலைக் கேட்பவர்களுக்கு இது புரியும். பலரது இரவின் தனிமைக்கு இளையராஜாவும், யுவன் ஷங்கர் ராஜாவும் இசையால் படுக்கை அமைத்தார்கள் என்றால், முத்துக்குமார் தமிழால் தலையணை கொடுத்தார். அவர் வரிகளைக் கொண்டே அவர் வரிகளுக்கு ஒரு உவமை தேட வேண்டும் என்றால், இந்த மொத்த வாழ்க்கையையும் ஒரு பயணமாகக் கருதி, அந்தப் பயணத்தை மேற்கொள்ளும் எல்லா வழிப்போக்கர்களுக்கும் தங்கள் மகிழ்ச்சி, துக்கம், வலி, கோபம் என எல்லா உணர்ச்சிகளுக்கும் நிழலாக வந்து நாம் கேட்கும் முன்னமே இளைப்பாறல் தருகிறார், நா.முத்துக்குமார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism