Published:Updated:

‘நான் கடவுள்’ முதல் ‘சார்பட்டா’ வரை : ஆர்யாவின் உழைப்பு அபாரமானது... ஆனால், இமேஜ்?!

ஆர்யா
ஆர்யா

உண்மையில் ‘நான் கடவுள்’ திரைப்படத்துக்குப் பிறகு சவாலான பாத்திரங்களில் ஆர்யாவை நடிக்க வைப்பதற்கு தமிழ் சினிமாவின் இயக்குநர்கள் முயன்றிருக்க வேண்டும். ஆனால் அது நிகழவில்லை என்றாலும் ஆர்யா சோர்வடையவில்லை. மீண்டும் ஒரு சிறந்த இயக்குநரிடம் தன்னை ஒப்படைத்துக் கொண்டிருக்கிறார்.

நடிகர் ஆர்யா என்றவுடன் சட்டென்று உங்களுக்குள் தோன்றுவது எதுவாக இருக்கும்?

‘’ஜாலியான ஹீரோ’’, ‘’சாக்லேட் பாய்’’, ‘’அழகா இருக்காரு’’, ‘’ ஹீரோயின்ஸ்கிட்ட நல்லா கடலை போடுவாரு’’... அவ்வளவுதான் என்று மெல்லிய பாராட்டும், கிண்டலும் கலந்த வார்த்தைகள் மட்டுமே பெரும்பாலும் மனதில் தோன்றும் அல்லவா? இவற்றுக்கெல்லாம் ஆர்யா பொருத்தமானவர்தான். மறுப்பதற்கு எதுவும் இல்லை. ஆனால், இவற்றைத் தாண்டி ஆர்யாவுக்குள் இருக்கும் இன்னொரு சீரியஸான பக்கங்கள் அதிகம் கவனிக்கப்படாமலே போய்விட்டதே என்கிற கவலை எழுகிறது.

குறிப்பாக சமீபத்தில் வெளியான ‘சார்பட்டா’ திரைப்படத்தின் ட்ரெய்லரில் ஆர்யாவின் அட்டகாசமான லுக்கையும் அதற்கான மெனக்கெடலையும் பார்த்த போது, ஒரு பாத்திரத்திற்காக தன் உழைப்பை வஞ்சகமில்லாமல் தர முன்வரும் இந்த நடிகனை, தமிழ் சினிமா ரசிகர்களும் சரி, இயக்குநர்களும் சரி, ஏன் அத்தனை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை என்கிற கேள்வி எழுகிறது!

ஆர்யா கேரள மாநிலத்தில் உள்ள திருக்கரிப்பூர் எனும் சிறுநகரத்தில் பிறந்தவர். இயற்பெயர் ஜம்ஷத். அதனால் ‘ஜாமி’ என்றுதான் நண்பர்கள் அழைக்கிறார்கள். அடிப்படையில் சாஃப்ட்வேர் இன்ஜினீயராக இருந்தாலும், வசீகரமான தோற்றம் மற்றும் கச்சிதமான உடல் அமைப்பு காரணமாக மாடலிங்கில் இறங்கியிருக்கிறார். இந்தச் சமயத்தில் தன்னுடைய பக்கத்து வீட்டில் இருந்த மறைந்த இயக்குநர் ஜீவாவின் மூலம் ‘உள்ளம் கேட்குமே’ என்கிற திரைப்படத்தில் 2003-ல் அறிமுகமாகிறார். இவருக்கு ‘ஆர்யா’ என்கிற பெயரைச் சூட்டியவர் இயக்குநர் ஜீவாதான்.

ஆர்யா- பசுபதி
ஆர்யா- பசுபதி

ஆனால், இந்தத் திரைப்படம் வெளிவர தாமதம் ஆனதால், இதற்கு அடுத்த திரைப்படமான ‘அறிந்தும் அறியாமலும்’ முதலில் வெளியானது. விஷ்ணுவர்தன் இயக்கிய இந்தத் திரைப்படத்தில், ஆர்யா நடித்த ‘குட்டி’ என்கிற பாத்திரம் பார்வையாளர்களை வெகுவாக பேசப்பட்டது. படத்தில் பிரபல ரவுடியான பிரகாஷ்ராஷின் வலதுகையாக நடித்த ஆர்யாவின் துறுதுறுப்பான நடிப்பும் வேகமும் தனித்துத் தெரிந்தது. குறிப்பாக யுவன் அட்டகாசமாக இசையமைத்திருந்த ‘தீ பிடிக்க.. தீ பிடிக்க பாடல்’ ஆர்யாவை மிகவும் பிரபலப்படுத்தியது.

இதற்குப் பிறகு வெளியான ‘உள்ளம் கேட்குமே’ திரைப்படத்தில் ஆர்யாவின் மென்மையான பாத்திரத்தையும் இளம் பார்வையாளர்கள் ரசித்தார்கள். குறிப்பாக இளம் ரசிகைகளின் எண்ணிக்கை அதிகமானது. இதற்கு அடுத்து வெளியான ‘ஒரு கல்லூரியின் கதை’ திரைப்படத்தின் உள்ளடக்கம் வித்தியாசமாக இருந்தாலும் அதிகம் கவனிக்கப்படாத படமாக அமைந்து விட்டது.

இந்த நிலையில் மீண்டும் கை கொடுக்கிறார் இயக்குநர் விஷ்ணுவர்தன். பரத்துடன் இணைந்து நடித்த ‘பட்டியல்’ திரைப்படம், ஆர்யாவின் திரைப்பட வரிசையில் முக்கியமானதாக அமைகிறது. இதற்குப் பிறகு வெளியானவற்றில் புஷ்கர் காயத்ரி இயக்கிய ‘ஓரம் போ’ திரைப்படத்தில் ஆட்டோ ரேஸில் கலந்து கொள்ளும் வித்தியாசமான பாத்திரம் ஆர்யாவுக்கு கிடைக்கிறது.

இப்படி வழக்கமான பாத்திரங்கள், சற்று வித்தியாசமான பாத்திரங்கள் என்று கலவையாக அமைந்து கொண்டு வந்தாலும் 2009-ல் வெளியான ‘நான் கடவுள்’ திரைப்படத்தைத்தான் ஆர்யாவின் பயணத்தில் மிக முக்கியமானதாக சொல்லலாம்.

ஆர்யா
ஆர்யா

தன்னுடைய திரைப்படங்களில் நடிக்கும் சிறிய பாத்திரங்களைக் கூட இயக்குநர் பாலா எப்படி கசக்கிப் பிழிந்தெடுத்து நடிக்க வைப்பார் என்று நமக்குத் தெரியும். இதற்காக ‘சைக்கோ’ என்றெல்லாம் கூட பாலா வசைபாடப்பட்டிருக்கிறார். ஆனால், படத்தின் அட்டகாசமான ரிசல்ட் வரும்போது இதில் நடித்த நடிகர்கள் தாங்கள் பட்ட அவஸ்தைகளை மறந்து விடுவார்கள். அப்படியொரு மாயத்தை நிகழ்த்தி விடுவார் பாலா.

‘நான் கடவுள்’ திரைப்படத்தில் ‘அகோரி’யாக நடிப்பதற்காக ஏறத்தாழ மூன்று சிரமமான வருடங்களை பாலாவிடம் ஒப்படைத்தார் ஆர்யா. தன்னுடைய உடலை கச்சிதமாகவும் ஆரோக்கியமாகவும் பேணுவதில் இயல்பிலேயே ஆர்வமுடைய ஆர்யா, ‘அகோரி’ படத்திற்காக நீண்ட தலைமுடி, தாடி போன்றவற்றை வளர்த்துக் கொண்டு காசியில் நீண்ட நாட்கள் தங்கி அகோரிகளை தொடர்ந்து கவனித்து அவர்களைப் போலவே உருமாறினார். காசிக்கு வருகை தந்த வெளிநாட்டவர் உள்ளிட்ட சிலர், ஆர்யாவை உண்மையான அகோரியாக நினைத்துக் கொண்டு ஆசிர்வாதம் வாங்கிச் சென்ற வேடிக்கையான சம்பவங்களும் நிகழ்ந்திருக்கின்றன.

இந்த ‘அகோரி’ பாத்திரத்தில் நடிப்பதற்காக முதலில் நடிகர் அஜித் ஒப்பந்தம் செய்யப்பட்டு என்ன காரணத்தினாலோ விலகினார். பாலா போன்ற இயக்குநர்களிடம் நடிப்பதற்காக நடிகர்கள் தயங்குவதற்கு சில அடிப்படையான காரணங்கள் இருக்கலாம். தான் எதிர்பார்க்கும் நடிப்பு வருவது வரை இந்த இயக்குநர்கள், நடிகர்களை பிழிந்தெடுத்து விடுவார்கள். இன்னொன்று, இதற்கு தரும் நீண்ட கால்ஷீட்களில் மூன்று, நான்கு திரைப்படங்களில் நடித்து விடலாம்.

ஆர்யாவும் இப்படி நினைத்திருந்தால், தானும் ஜாலியாக நடித்து சம்பாதித்து விட்டுப் போயிருக்கலாம். ஆனால், ஒரு சிறந்த நடிகனாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் ஆர்வமும் அதற்காக அத்தனை உழைப்பையும் தரும் மெனக்கெடலும்தான் அவரை தேடல் உள்ள மனிதராகக் காட்டுகிறது.

அதுவரை சராசரியான நடிகர்களாக அறியப்பட்டுக் கொண்டிருந்த விக்ரமும், சூர்யாவும் பாலாவின் படங்களில் நடித்த பின்னர்தான் புகழ்வெளிச்சம் பெற்றார்கள். அவர்கள் உழைத்ததற்கு சிறந்த பலன் கிடைத்தது. கல்லை உடைத்து உடைத்து அதிலிருந்து ஒர் அழகான சிற்பத்தை வெளியே கொண்டு வருவது போல இருவருக்கும் உள்ளே இருந்த நடிப்புத் திறமையை வெளியே கொண்டு வந்தார் பாலா.

அதுவரை சுமாராக இருந்த விக்ரம் மற்றும் சூர்யாவின் கிராஃப் சட்டென்று மேலே உயர்ந்ததற்கு அவர்களின் கடுமையான உழைப்பைத் தாண்டி பாலாவிடம் தன்னை ஒப்படைத்துக் கொண்டதுதான் முக்கியமான காரணம். ஆனால், இந்த மேஜிக் ஆர்யாவுக்கு நிகழவில்லை என்பதை துரதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆர்யா, ஜான் விஜய், பசுபதி
ஆர்யா, ஜான் விஜய், பசுபதி

‘நான் கடவுள்’ திரைப்படத்துக்காக தேசிய அளவிலான விருதுகள் ஆர்யாவுக்கு கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இயக்குநர் பாலா, நாயகி பூஜா, ஒப்பனைக் கலைஞர் ஆகியோருக்கு மட்டுமே தேசிய விருதுகள் கிடைத்தன. அவர்களும் இந்த விருதுக்கு தகுதியான உழைப்பைத் தந்தவர்கள் என்றாலும் தனது உக்கிரமான உழைப்பைத் தந்த ஆர்யா, இந்த வரிசையில் விடுபட்டது பெரிய ஏமாற்றம்தான்.

பாலாவின் இயக்கத்தில் ஆர்யா மீண்டும் நடித்த ‘அவன் இவன்’ திரைப்படமும் ஆர்யாவுக்கு சவாலான பாத்திரமாக அமைந்தது. ஆனால், ‘நான் கடவுள்’ போல சீரியஸானதாக இல்லாமல் ஆர்யாவின் குணாதிசயத்திற்கேற்ற ஜாலியான பாத்திரம். பாலா எதிர்பார்க்கும் வழக்கமான உழைப்பை ஆர்யா இதற்குத் தந்திருந்தாலும் படமும் சரி, இவரின் உழைப்பும் சரி அவ்வளவாக கவனிக்கப்படவில்லை.

பாலாவைத் தொடர்ந்து இயக்குநர் செல்வராகவனிடமும் தன்னை ஒப்படைத்துக் கொண்டார் ஆர்யா. ஆனால், ‘இரண்டாம் உலகம்’ அதிகம் கவனிக்கப்படாத படங்களுள் ஒன்றாக கலந்து விட்டது. ‘மகாமுனி’யில் ஆர்யாவின் நடிப்பு குறிப்பிடத்தகுந்ததாக அமைந்திருந்தாலும் அதுவும் பரவலாக கவனிக்கப்படவில்லை.

ஆர்யா - ரஞ்சித்
ஆர்யா - ரஞ்சித்

உண்மையில் ‘நான் கடவுள்’ திரைப்படத்துக்குப் பிறகு சவாலான பாத்திரங்களில் ஆர்யாவை நடிக்க வைப்பதற்கு தமிழ் சினிமாவின் இயக்குநர்கள் முயன்றிருக்க வேண்டும். ஆனால் அது நிகழவில்லை என்றாலும் ஆர்யா சோர்வடையவில்லை. தன்னுடைய முயற்சியை சற்றும் கைவிடாத விக்ரமாதித்யனைப் போல மீண்டும் ஒரு சிறந்த இயக்குநரிடம் தன்னை ஒப்படைத்துக் கொண்டிருக்கிறார்.

இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கி, விரைவில் வெளியாகவிருக்கும் ‘சார்பட்டா’ திரைப்படத்தில் ஓர் ஆக்ரோஷமான குத்துச்சண்டை வீரராக நடித்திருக்கிறார். ஆர்யாவின் முதல் லுக் போஸ்டர் வெளியான போதே அந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலானது. அந்தளவிற்கு அசுரத்தனமான உழைப்பைத் தந்து தன்னுடைய உடலை பிரமிக்க வைக்கும் வடிவில் மாற்றிக் கொண்டிருக்கிறார் ஆர்யா.

பொதுவாக அந்த காலக்கட்டத்து முன்னணி நடிகர்கள் என்றால் பொது இடங்களில் தங்களின் இமேஜை மிக மிக கவனமாக பராமரித்துக் கொள்வார்கள். இறுக்கமாகவும் மெளனமாகவும் கவனமாகவும் இருப்பார்கள். இந்தக் குணாதிசயம்தான் எம்.ஜி.ஆரின் வெற்றிக்கு ஒரு முக்கியமான காரணமாக அமைந்தது என்பதை ‘நானும் நீயுமா’ என்கிற கட்டுரைத் தொடரில் விரிவாக வாசிக்கலாம்.

ஒரு சினிமா ஹீரோ சினிமாவில் வருவதைப் போலவே நிஜத்திலும் இருப்பார் என்கிற மாயை இன்னமும் கூட நம்மிடம் பெரிதாக மாறவில்லை. ஆனால், இப்போதைய இளம் நடிகர்களிடம் அதிக பந்தா இல்லை. ஒருவருக்கொருவர் எளிதாக உறவாடிக் கொள்கிறார்கள். இணைந்து நடிக்கிறார்கள். நேர்காணல்களில் சகஜமாக ஜோக் அடிக்கிறார்கள். தன்னைப் பற்றிய நகைச்சுவைகளுக்கும் முகம் சுளிப்பதில்லை.

இந்த வரிசையின் உச்சம் என்று ஆர்யாவைச் சொல்லலாம். தன்னைப் பற்றிய எந்தவொரு பிம்பத்தையும் அவர் பொதுவெளியில் உருவாக்கிக் கொள்ள மெனக்கெடுவதில்லை. தன்னுடைய அசலான குணாதிசயம் எதுவோ அதை அப்படியே தயக்கமின்றி நேர்காணல்களில் வெளிப்படுத்துகிறார். சக நடிக, நடிகையர்களை தயக்கமின்றி கலாய்க்கிறார். இதனாலேயே அவரின் சீரியஸான முயற்சிகளை நாம் அதிகம் கவனிப்பதில்லையோ என்று தோன்றுகிறது.

ஆர்யா, கலையரசன்
ஆர்யா, கலையரசன்

உண்மையில் ஆர்யா இருப்பதுதான் ஒரு நடிகர் இருக்க வேண்டிய சரியான இடம். திரைப்படங்களில் நடிக்கும் பாத்திரம் வேறு, தன்னுடைய இயல்பான பிம்பம் வேறு. நடிகர்களும் சரி, ரசிகர்களும் சரி, இரண்டையும் ஒன்றாக குழப்பிக் கொள்ள வேண்டியதில்லை. ஹீரோ என்றால் பொதுவெளியில் இறுக்கமாக இருந்தால்தான் மதிப்போம். ஜாலியானவர் என்றால் அவரின் முக்கியமான முயற்சிகளைக் கூட இடதுகையால்தான் அணுகுவோம். இந்த நடைமுறை மனோபாவத்தினால்தான் ஆர்யாவின் சிறந்த முயற்சிகள் கவனிக்கப்படுவதில்லையோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

தன்னிடமுள்ள குறைகளை, தடைகளைத்தாண்டி ‘தன்னை ஒரு சிறந்த நடிகனாக’ நிரூபித்துக் கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து அவர் எடுக்கிற முயற்சிகளும் அதற்காக அவர் தருகிற உழைப்பும் நிச்சயம் மதிக்கப்படவேண்டும்.

முந்தைய சிறந்த திரைப்படங்களில் ஆர்யாவுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய அங்கீகாரம் தவறிப் போனதல்லவா? ‘சார்பட்டா’ படம் இந்த நியாயத்தை ஆர்யாவுக்கு வழங்கக்கூடும். தனக்கு கிடைக்க வேண்டிய நியாயமான அங்கீகாரங்களைப் பற்றி கூட அவர் அத்தனை கவலைப்பட்டது போல் தெரியவில்லை. மாறாக, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தில் நயன்தாராவிடம் கேட்பதைப் போலவே “உங்களை எப்படி கரெக்ட் பண்றதுன்னே எனக்குத் தெரியலைங்க... நீங்களே சொல்லிக் கொடுங்களேன்” என்று ஜாலியாக ரசிகர்களிடமும், விருதுகளைத் தேர்ந்தெடுக்கும் நடுவர்களிடமும் கேட்டு விடுவார் என்று தோன்றுகிறது.

அடுத்த கட்டுரைக்கு