விஜயதசமி....
விஸ்வநாதன் என்கிற இந்தச் சின்ன மனுஷனின் வாழ்க்கையில் நடந்த, சந்தித்த சில நல்ல விஷயங்கள் எல்லாம் இந்த விஜயதசமி நன்னாளில் நடந்திருக்கின்றன.
ஒரு விஜயதசமியின்போதுதான் முதன்முதலாக ஆர்மோனியப் பெட்டியைத் தொட்டேன்.
இன்னொரு விஜயதசமியின்போது மேடையில் முறையான இசைக் கச்சேரி அரங்கேற்றம் நடந்தது.
ஆண்டுதோறும் எங்கள் வீட்டில் பரம்பரை பரம்பரையாக விஜயதசமி நாளன்று கிரந்தம் படிப்பது ஒரு வழக்கம். அதைப் படித்துவிட்டு, என் இதயத்துக்கு மிகவும் நெருக்கமான ஆர்மோனியம் கருவியைத் தொட்டு வணங்கி இறைவனுக்கு ‘இசை ஆராதனை’ செய்வது - உணர்வுபூர்வமாக நான் செய்யும் கடமைகளில் ஒன்று.
கடந்த விஜயதசமி அன்று டெலிவிஷனில் என் அனுபவக்ள்... அன்றுதான் - நாற்பதாண்டுகளுக்கும் மேலான திரைப்படவுலக இசையமைப்பாளன் என்கிற ஒரு சிறிய அந்தஸ்தை எனக்குத் தேடிக் கொடுத்த வகையில் நான் சந்தித்த அனுபவங்களை விகடன் வாசகர்களோடு பகிர்ந்து கொள்கின்ற வாய்ப்பு.
அதற்கான பேட்டியின் ஆரம்ப நாள்!
அன்று காலையிலேயே சென்னை நகரை விட்டுத் தள்ளி - காஞ்சிபுரம் அரக்கோணம் ரூட்டில் உள்ள நெமிலி என்ற எளிய கிராமத்தில் நடந்த ஒரு கலை விழா... இந்த விழா பின்னணியைப் பற்றி சில வரிகள்...
நெமிலி கிராமத்தில் கவிஞர் எழில் மணி. இவர் பக்திப் பாடல்கள் நிறைய எழுதி பின்னணிப் பாடகர்களும் இசையமைப்பவர்களும் இணைந்து ஆடியோ காஸெட்டுகள் வெளியாகியிருக்கின்றன.
எழில்மணி குடும்பத்தினருக்கு. நெமிலி கிராமத்தை ஒட்டி ஓடும் ஆற்றிலிருந்து அம்மன் விக்கிரகம் ஒன்று கிடைத்தது. அதற்கு ஒரு பீடம் அமைத்து ‘அன்னை பாலா திரிபுரசுந்தரி பீடம்’ என்ற திருப்பெயரிட்டு வருஷா வருஷம் நவராத்திரி திருவிழாவை ரொம்பக் கோலாகலமாகக் கொண்டாடுகிறார்கள்.

நவராத்திரி திருவிழாவில் விஜயதசமி நாளன்று இசைக் கலைஞர் ஆற்றியிருக்கும் இசைப் பணியைப் பாராட்டிக் கௌரவிக்கும் வகையில், கிராமத்து மக்கள் முன்னிலையில் பட்டாடை போர்த்தி, சிறப்புப் பட்டம் ஒன்று அளிப்பதும் வழக்கமாக நடந்து வருகிறது.
இந்த ஆண்டு பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்குப் பாராட்டு விழா. நான், பெரியவர் டைரக்டர் கே. சங்கர், தம்பி எஸ்.பி.பாலசுப்பிரமணியம். எஸ்.பி.ஷைலஜா ஆகியோர் அந்த கிராமத்தை நோக்கி காரில் பயணமானோம்.
இயக்குநர் சங்கர். ஸ்ரீபாலா திரிபுரச்சுந்தரி பீடத்தின் சார்பில் ‘இசைக்கடல்’ என்ற பட்டத்தை எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு வழங்கிவிட்டு, “அன்னை பாலா பிள்ளை பாலாவைப் பாராட்டுகிறாள் என்பதில்தான் பெருமை... எஸ்.பி.பி.. இசைக்கடல் மட்டுமல்ல. இசை மகாசமுத்திரம்” என்று கூறி வழங்கியபோது, தம்பி பாலு உணர்ச்சிவசப் பட்டுவிட்டான்.
தம்பி பாலு இருக்கானே. அவன் யாருக்கும் எந்த டென்ஷனும் கொடுக்காம முழு ஓத்துழைப்பு கொடுத்து சிறப்பா பாடிக் கொடுப்பான். சுருக்கமா சொன்னா, நடிப்புல எப்படி அண்ணன் சிவாஜி நடிகர் திலகமா ஜொலிக்கிறாரோ அதைப்போல பாட்டுல எஸ்.பி.பி இதுக்கு ஒரே உதாரணம் சொல்லணும்னா - ‘சங்கராபரணம்’ போதும். என்னோட ஆசான் தெய்வம் கே.வி.மகாதேவன், எஸ்.பி.பி.-யைப் பாட வெச்சு அந்தப் படத்துல சாதனை பண்ணார். இதைப் பார்த்துப் பல வித்வான்களுக்கு ஆச்சரியம்! ஆனா, எனக்கு ஆச்சரியம் இல்லை. ஏன்னா, தம்பி பாலுவால் அந்த சாதனை செய்ய முடியும் என்ற முழு நம்பிக்கை எனக்குண்டு.
டி.எம்.எஸ்., சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி மாதிரி விதவிதமான வாய்ஸ்கள் எனக்குத் தேவை. அப்பத்தான் நான் என் இசையமைப்பில் புகுந்து விளையாட முடியும். அறிமுகமான அன்னியிலிருந்தே பாலுவோட வாய்ஸ் மேல எனக்குக் காதல். ‘அவன் ஒரு தொடர்கதை’ படத்தில் ‘கடவுள் அமைத்து வைத்த மேடை’ பாட்டை பாலு ஒருத்தனாலேதான் பாட முடியும்.
முதன் முதலா பாடுவதற்கு சான்ஸ் கொடுத்து தெலுங்கில் பாலுவை அறிமுகப்படுத்தியவர் இசையமைப்பாளர் கோதண்டபாணி. அதற்குப் பிறகு ராப்பகலா உழைச்சு உழைச்சு சம்பாதிச்சப் பணத்திலேருந்து பாலு ஒரு ஸ்டூடியோ கட்டினான். அந்த ஸ்டூடியோவுக்கு பெத்த அப்பா பேரை வைக்கலை... அம்மா பேரை வெச்சுக்கலை... தன் பேரை வைக்கலை. தன் பொண்டாட்டி பேரை வைக்கலை... தன்னை அறிமுகப்படுத்தி வளர்த்து ஆளாக்கிய மியூஸிக் டைரக்டர் கோதண்டபாணியோட பேரைத்தான் ஸ்டூடியோவுக்கு வெச்சிருக்கான்... பாலுவோட இந்த நல்ல பண்புக்கு நான் அடிமை... இது உணமை.
கண்டசாலா என்கிற பாடகர் தமிழ் ரசிகர்களுக்கும் அறிமுகமானவர்தான் நான். அண்ணன் டி.கே.ராமமூர்த்தி எல்லாம் சேர்ந்து இசையமைச்ச தேவதாஸ்’ படத்துல அவரு பாடின (வாழ்வே மாயம்... ஓ பார்வதி) போன்ற பாட்டுக்கள் எல்லாமே ஹிட்! பாடலாலே நம்மைக் குளிர்விச்ச கண்டசாலாவுக்கு எஸ்.பி.பி. அண்மையில் ஒரு சிலை எழுப்பியிருக்கார். இந்தச் சிலை எழுப்பியிருக்க வேண்டியவர்கள் யாரோ! சிலை எடுக்கணும்கிறது பாலுவுக்குக் கட்டாயம் இல்லை. கண்டசாலாவின் குரலின் மேல் உள்ள காதலினால் சிலை எழுப்பினார் இப்படி ஒரு சிலை எழுப்பி விழா எடுக்கவேண்டியவங்க நாலு நல்ல வார்த்தை கூட பேசாம, விழாவின்போது அங்க வந்து அடிச்சிக்கிட்டாங்க.. மனசைக் கஷ்டப்படுத்திட்டுப் போயிட்டாங்க.. அப்ப பாலுவோட மனசு எப்படி இருந்திருக்கும்? தொலைஞ்சு போகட்டும் விடுங்க.. இப்படி ஒரு நன்றி இல்லாத உலகத்துல, குருபக்தி பெற்றோர் பெரியவர்களிடம் காட்டும் பணிவு போன்ற நல்ல குணம் உடைய பாலு நீடுழி வாழ்வாரு.

பாலு பாடறதில் மட்டுமல்ல, பணிவோட பேசறதிலவும் புலிங்கறதை அன்னிக்கு நிரூபிச்சுட்டாரு. அதை அவர் வார்த்தையில சொல்றதுதானே நியாயம்? எஸ்.பி.பியோட பேச்சை ஒரு ரிப்போர்ட் பண்றேன்.
“ரொம்ப நாளவே என் மனசுக்குள்ள பெரிய குறை இருந்தது. குரு சிஷ்ய முறையில நான் சங்கீதம் கத்துக்கலியேன்னு... இன்னிக்கு அது மறைஞ்சு போச்சு... முறையா பாட்டு கத்துக்கிட்டவங்களைவிட நான் ஒரு படி மேலானவன்... எப்படின்னா குரு - சிஞ்ய முறையில் வந்தா அவர்களுக்கு ஒரே ஒரு குருநாதர்தான் உண்டு. ஆனா, எனக்கு நிறைய குரு.. அந்த விதத்துல நான் புண்ணியம் பண்ணவன்... நான் சந்திக்கிற மேதைகள், மியூஸிக் டைரக்டர்கள். பாடகர்கள்கிட்டே இருந்தெல்லாம் ஏதாவது ஒரு நல்ல விஷயத்தை வாங்கி சேமிச்சு வெச்சிருக்கேன்... இதைக் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் செலவு பண்ணுவேன்... தீர்ந்து போயிடக்கூடாதேங்கிற பயம்தான்... மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்காக ஆயிரம் நிலவே வா பாட வைத்த தந்தை போன்ற இயக்குநர் சங்கர் என் ஆசான், அப்பா, அண்ணன் விஸ்வநாதன் சார் - இவங்கள்லாம் வாழற காலத்துல நாங்க வாழறது பெரிய பாக்கியம் ஆச்சே!
வேடன் கண்ணப்பா கதை கேட்டிருப்பீங்க... சிவபெருமானுக்கு கண்ணப்பா தன் கண்களைக் கொடுத்த மாதிரி எம்.எஸ்.வி.க்காக என் உயிரையே தரத்தயாராயிருக்கேன். அந்த அளவுக்கு இவர் நாட்டுக்கு இசை மூலமா பண்ணியிருக்கிற சேவை பெரிய சாதனை.... இவர் சாதனையை யாரும் மிஞ்ச முடியாது.. இவரு கடிச்சுத் துப்பினதைத்தான் இப்ப நாங்க பண்ணிக்கிட்டிருக்கோம்... நான் ஒரு மூடபக்தன்... ரசிகர்களாகிய உங்க இதயத்துல ஒரு இடம் பிடிச்சிருக்கேன்... அது அப்படியே இருக்கணும்... அதே சமயம் மத்தவங்களுக்கும் இடம் கொடுங்க..” என்று உணர்ச்சிவசப்பட்டவராய்ப் பேசி முடித்தார் பாலு..
நான் ஏதோ சாதனை பண்ணிட்டேன். மேடையில் அப்படி இப்படின்னெல்லாம் பாலு சொன்னதை வாசகர்கள் கிட்ட விட்டுட்றேன். அது சாதனையோ வேதனையோ எதையும் ஒரு ரசிகன் என்ற முறையில் அணுகுபவன்...
நான் பிறந்து வளர்ந்து வாழ்ந்த பின்னணி, படவுலகப் பிரம்மாக்கள். மேதைகள், சரித்திரம் படைத்த நாயகர்கள் மத்தியில் நான் அடைந்த மகிழ்ச்சி... நிகழ்த்திய சாதனை... இவற்றிக்குப் பின்னால் இருந்த வறுமை, வேதனை, சோதனை, நெருங்கிய நட்பு, நட்பில் விரிசல் போன்று இதுவரையில் யாருமே அறிந்திராத அனுபவங்களைத் தொடர்ந்து உங்கள் முன் கொட்டுகிறேன்...
(07.11.1993 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)