அத்தியாயம் 1
அத்தியாயம் 2
Published:Updated:

நான் ஒரு ரசிகன் - எம்.எஸ். விஸ்வநாதன் - 17

Naan Oru Rasigan - M.S.Viswanathan
பிரீமியம் ஸ்டோரி
News
Naan Oru Rasigan - M.S.Viswanathan

எத்தனையோ பட கம்பெனிகளுக்கு, டைரக்டர்களுக்குப் பாட்டுகளை எழுதிக் குவித்த கவிஞர் கண்ணதாசன், எனக்காகவும் ஒரு பாட்டு எழுதினார்...

டைரக்டர் கே . பாலசந்தர் சாரோட ' பட்டினப் பிரவேசம் ' படம் . இதுக்குப் பாட்டு கம்போஸ் . பண்ண நான் கவிஞர் கம்பெனியைச் சேர்ந்தவங்க எல்லாரும் உட்கார்ந்தோம் .

நான் ஒரு ட்யூன் போட்டேன்...

' ந ... நந்நா... நந்நா நந்நா... நந்நா... நந்நா... நந்நா...'

- இதேபோல இரண்டா வது மூன்றாவது வரிகளுக்கும் நன்னாகாரத்திலேயே

ட்யூன் வாசிச்சுக் காண்பிச்சேன் .

கவிஞருக்குக் கோபம் வந்து, "நிறுத்துடா மடையா... நீபாட்டுக்கு ' ந... நா... நா... ' னு போட்டுக் கிட்டுப் போனா , நான் பல்லவிக்கு எங்கேடா போவேன் . . . ? எனக்குப் பிடிக்கலை... இதுக்குப் பாட் டும் வராது... ஒரு மண்ணும் வராது... வேற ட்யூன் போடுடா... " னு என்னைப் பார்த்துக் கூச்சல் போட்டாரு . என் னைத் திட்டிட்டு அவர் எழுந்து வெளியே போயிட்டாரு .

Naan Oru Rasigan - M.S.Viswanathan
Naan Oru Rasigan - M.S.Viswanathan

டைரக்டர் பாலசந்தர் என் கிட்ட வந்து , " விசு. ட்யூன் நல்லா இருக்கு மாத்த வேணாம். எப்படியாவது இந்த ட்யூனுக்குக் கவிஞரை எழுத வைக்கணுமே. முயற்சி பண்ணிப் பாருங்களேன்.' னு சொன்னார் .

எழுந்து போய்த் தனிய நின்னு யோசிச்சுக்கிட்டிருந்த கவிஞர் கிட்ட நான் போனேன் . " நீ கவிஞனாய்யா . . ? இந்த ட்யூ னுக்குப் பாட்டு எழுத வாலேன்னா இத்தனை நாளா நீ பாட்டு கள் எழுதினதுக்கு என்னய்யா அர்த்தம் . ? இந்த ட்யூனுக்கு உன்னால் எழுத முடியாதா . . ? " - அப்படி இப்படின்னு பேசி அவரை ' ரேக்கி விட்டேன் .

கவிஞருக்கு ரோஷம் பொத்துக்கிட்டு வந்துடுச்சு . ' வாடா உள்ளே... எங்கே , அந்த ட்யூனைத் திருப்பி வாசி." னு முறைப் போட சொன்னார் .

கவிஞர் என்னை வாசிக்கச் சொன்னதும் . அப்போ இருந்த டென்ஷன்ல ட்யூனைத் தப்பா வாசிச்சுட்டேன் .

முதல்ல வாசிச்ச ' ந... நந்நா... நந்நா...நந்நா... வுக்குப் பதிலா , ' லா லல்லா... லல்லா... லல்லா... லல்லா... லல்லா... லல்லா...' னு மாத்தி வாசிச்சுட்டேன் . இதுவும் ஒருவிதத்துல நல்லதாப் போச்சு .

இரண்டாவதா வாசிச்ச ட்யூனுக்குக் கவிஞரோட சிந்தனைப் பெட்டகத்திலிருந்து வார்த்தைகள் குற்றால அருவி மாதிரி வந்து விழுந்தன !

Naan Oru Rasigan - M.S.Viswanathan
Naan Oru Rasigan - M.S.Viswanathan

'வான் நிலா...நிலா... அல்ல உன் வாலிபம் நிலா... தேன் நிலா... நிலா... நிலா... - இப்படிப் பாட்டு முழுக்க லா... லா...' வைக் கொண்டுவந்து ஹிட் ஸாங் கை ( இதை எஸ் . பி . பி . ரொம்ப அனுபவிச்சு அற்புதமா பாடினார்...) கொடுத்தார் .

"என்ன அண்ணே... இந்தப் பாட்டுல ஃபாதர் - இன் - லா , மதர் - இன் - லா , சன் - இன் - லா , பிரதர் - இன் - லா மட்டும் தான் இல்லே...' னு நான் தமாஷா டபாய்ச்சேன் . கவிஞர் குபுக்னு சிரிச்சுட்டார் . அவரை உசுப்பிவிட்டு நாங்க மோதிக்கிட்டாலும் , ஒரு நல்ல பாட்டு உருவானதில் எல்லாருக்குமே மனசு திருப்தியா இருந்தது .

இப்படி ஏதாவது ஒரு சவால் வரும் போது அதைக் கவிஞர் ஜெயிக்காமல் விட்டதில்லை .

சிவாஜி நடிச்ச அவன்தான் மனிதன் ' படத்துக்காகக் கவிஞர்கிட்ட வந்தாங்க .

"மே மாசத்துல சிங்கப்பூர்ல கலர் ஃபுல்லா ஒரு ஃபெஸ்டிவல் வரும்... அதைச் சிங்கப்பூர் மக்கள் ரொம்பக் கோலாகலமா கொண்டாடுவாங்க... அந்தப் பின்னணியில் ஒரு லவ் ஸாங் இருந்தா நல்லா இருக்கும்னு எல்லாரும் ஃபீல் பண்றாங்க . இதுக்குத் தகுந்த மாதிரி நீங்க ஒரு பாட்டு எழுதிக் கொடுத்தா சிறப்பா இருக்கும்...' னு கவிஞர் கிட்ட கேட்டுக்கிட்டாங்க .

" அவ்வளவுதானே... இதோ தரேன்... விசு , ட்யூன் போடு... " னு சொல்லிட்டு , ' ஜஸ்ட் லைக் தட் ஒரு கவிதையை எடுத்துப்போட்டார் .

அன்பு நடமாடும் கலைக்கூடமே...

ஆசை மழை மேகமே... கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே... கன்னித் தமிழ் மன்றமே... ' - இப்படிச் சிங்கப்பூர் மே மாச விழாவுக்கு ஒவ்வொரு வரியிலும் ' மே 'ங்கற வார்த்தை வரும்படியா ஒரு முழுப் பாட்டைக் கவிஞர் கொடுத்ததும் எல்லாரும் அசந்து போயிட்டோம் .

தலைவர் காமராஜர் ஏதாவது ஒரு வார்த்தை சொல்லிவிட்டால் , அதை உடனே சிரமேற்கொண்டு செய்து முடிப் பார் கவிஞர் . இந்திய - பாகிஸ்தான் யுத்தம் வந்தபோது , போர்முனையில் நம்மைக் காத்து நிற்கும் இந்திய ராணுவ வீரர்களுக்கு உற்சாகமூட்ட தமிழகத்திலிருந்து கலைக்குழு செல்ல வேண்டும் '

என்று காமராஜர் விரும்ப , உடனே செயலில் இறங்கிவிட்டார் கவிஞர் .

சிவாஜி , சந்திரபாபு , பத்மினி சாவித்திரி , ஜெயலலிதா , தேவிகா , நான் , ராமமூர்த்தி , பின்னணிப் பாடகர்கள் ஏ . எல் . ராகவன் , பி . பி . ஸ்ரீனிவாஸ் மற்றும் பி . சுசீலா , எல் . ஆர் . ஈஸ்வரி , கவிஞர் . சின்ன அண்ணாமலை என்று கலைஞர் கள் அடங்கிய ஒரு பெரிய பட்டாளமே போர்முனைக்குச் சென்றது .

எல்லைப் பகுதிகளில் கலைநிகழ்ச்சி கள் நடத்தினோம் . காயமுற்ற வீரர்களை ஆஸ்பத்திரியில் சந்தித்து , அவர்களோடு உற்சாகமாக உரையாடி , அவர்கள் விரும்பிக் கேட்ட பாடல்களைப் பாடி மகிழ்வித்துவிட்டு அனைவரும் டெல்லிக்குத் திரும்பினோம் .

அப்போது ஜனாதிபதியாக இருந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் எங்களையெல்லாம் வரும்படி அழைப்பு ஒன்று விடுத்தார் . அதை ஏற்று நாங்களும் ஜனாதிபதி மாளிகைக்குச் சென்றோம் .

எங்களுக்குச் சிறப்பான வரவேற்பு அளித்த ஜனாதிபதி , " யாராவது பாடுங்களேன்..." என்று உற்சாகமாகக் கேட்க...

நான் ஆர்மோனியம் வாசிக்க , துள்ளி எழுந்த சந்திரபாபு ' கவலை இல்லாத மனிதன் ' படத்தில் வரும் கவிஞர் எழுதிய...

Naan Oru Rasigan - M.S.Viswanathan
Naan Oru Rasigan - M.S.Viswanathan

'பிறக்கும்போதும் அழுகின்றாய்... இறக்கும்போதும் அழுகின்றாய்...' என்ற பாட்டை உருக்கத்தோடு பாடினார் .

சந்திரபாபுவின் பாட்டைக் கேட்ட ஜனாதிபதி , " அடடா... என்ன அர்த்தம்... என்ன அர்த்தம்... பாட்டுன்னா இதுதான் பாட்டு..." என எல்லாருக்கும் கேட்கும் படியாக உரத்த குரலில் பாராட்டினார். ' தத்துவமேதையான ஜனாதிபதியே பாராட்டிட்டார் ' என்ற குஷியில் சந்திரபாபு தாவிக் குதிச்சுப் போய் ராதா கிருஷ்ணன் மடியில உட்கார்ந்துக்கிட்டு , அவரோட தாடை இரண்டையும் பிடிச்சுக்கிட்டு. "கண்ணா ! நீ பெரிய ரசிகன்டா ! " னு கொஞ்ச ஆரம்பிச்சுட்டார் . இதைப் பார்த்த எங்களுக்குப் ' பகீர் ' னு ஆயிடுச்சு...' ஜனாதிபதி என்ன சொல்லப் போறாரோ ' ன்னு நாங்க பயப்பட் டோம்... நல்லவேளையா அவர் இதை சீரியஸா எடுத்துக்கலை ! சிரிச்சுட்டார் . அப்புறம்தான் எங்க முகத்துல சிரிப்பு வந்தது . சென்னைக்கு நாங்கள் திரும்பிய பிறகும் இந்தச் சம்பவத்தை நினைத்து நினைத்துச் சிரிப்பார் கவிஞர் .

எத்தனையோ பட கம்பெனிகளுக்கு , தயாரிப்பாளர்களுக்கு , டைரக்டர்களுக் குப் பாட்டுகளை எழுதிக் குவித்த கவிஞர் கண்ணதாசன் , எனக்காகவும் ஒரு பாட்டு எழுதினார் . அதுவும் எந்த மாதிரி சூழ்நிலையில்...

(27.02.1994 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து..)