
சங்கீதம் எனக்கு எப்படி வந்தது தெரியுமா...?
நான் பிறந்த மண் - கேரள மாநிலம் பாலக் காட்டுக்குப் பக்கத்தில் உள்ள எலப்புள்ளி கிராமம்.
என் பெயருக்கு முன்னால் உள்ள 'எம்.எஸ்.' குறித்த சிறு குறிப்பு...
'எம்' என்பது பரம்பரை பரம்பரையாக, எங்கள் குடும்பத்துப் பட்டப்பெயரான' மனை யங்கத்து ஹவுஸ்'.
'எஸ்' - என் தந்தை சுப்ரமணியன் நாயர். என் அம்மா - நாணிக்குட்டி ( நாராயணி அம்மாளின் சுருக்கம்!).
ஒரு காலகட்டத்தில் என் அப்பா ரொம்ப செல்வாக்கான நிலையில் இருந்தவர்தான். நான் பிறந்து ஒன்றிரண்டு வயசு வரையில் என்னைச் சீராட்டிக் கொஞ்சி மகிழ்ந்தவர் .
சங்கீதம் என்பதைப் பொறுத்தவரையில், எங்கள் முன்னோர் யாரும் அக்கறையோ ஆர்வமோ காட்டியதாகத் தெரியவில்லை. என் நினைவுக்குத் தெரிந்து என் அப்பாவைச் சொல்லலாம். அதுவும் சும்மா கேள்வி ஞானம்தான்!

இப்போது நினைத்தால்கூட சிரிப்பு வருகிறது. பகல் சாப்பாடு சாப்பிட்டுவிட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க அப்படியே மல்லாந்து படுத்திருப்பார். அவர் எப்போது படுப்பார் என்று நான் காத்திருப்பேன். அவர் படுத்தவுடன், அவருடைய தொப்பையின் மீது ஜம்மென்று உட்கார்ந்து கொள்வேன். அவருடைய காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்த 'ஊத்துக்குளி’ யில மண் எடுத்து..'ங்கிற பாட்டை உரக்கப் பாடுவாரு. எனக்கு என்னமோ அந்தப் பாட்டு ரொம்பத் தெரிஞ்ச மாதிரி அவர் கூடவே இஷ்டத்துக்கு ராகம் போட்டு அந்தப் பாட்டை இம்சிப்பேன். அப்பா இப்படி நிறைய பாட்டுக்கள் பாடுவாரு. அநேகமா எல்லாமே அப்ப பாப்புலரான கர்னாடக இசைப் பாடல்களாகத்தான் இருக்கும். ஸோ, குழந்தையா இருக்கும் போதே எனக்குள்ளே மியூஸிக் ஊடுருவ ஆரம்பிச்சாச்சு. இப்படி இருக்கையில, எனக்கு மூணரை வயசு ஆகும்போது அப்பாவுக்குத் திடீர்னு உடம்பு சரியில்லாம படுத்துட்டாரு.
அப்ப திருச்சியில என்னோட ( தாய் ) மாமா இருந்தாரு. அப்பாவுக்கு நல்ல பாட்மெண்ட் தரலாமனு திருச்சிக்கு எல்லோரும் போனோம். ஆனா, அப்பாவைக் காப்பாத்த முடியலை. 'விதி 'யோடு விளையாட வேற யாரும் கிடைக்கலையோ என்னமோ , என்னோட ஆட ஆரம்பிச்சுது. அப்பா இறந்து போன துக்கம் கூட ஆறலை. பதினஞ்சு நாளைக்குள்ள என் தங்கை அப்பாவைத் தேடிப் பறந்து போயிட்டா.

இப்படி எங்க குடும்பத்துல ரெண்டு பேர் அடுத்தடுத்து இறந்ததுல எனக்கும் துக்கம் தொண்டையை அடைக்கும், அழுகை பொத்துக்கிட்டு வரும்கிறதை யாருமே உணரலை. மாறாக, அப்பனையும் தங்கச்சியையும் முழுங்கிட்டு நிக்கிறதுக்கிரிப் பயல் இவன்னு எங்களுக்குச் சம்பந்தமில்லாதவங்ககூட என்னைத் திட்டுவாங்க... தலையில் அடிப்பாங்க. அந்தச் சமயத்துல கண்டவன்கிட்டல்லாம் நான் அடி வாங்கினதை இப்ப நினைச்சாக்கூட அழுதுடுவேன்.
அப்பா திடீர்னு போயிட்டதால ஏற்பட்ட வறுமை... பிள்ளையைக் கரிச்சுக் கொட்டறாங்களேங்கற ஆதங்கத்துல பிறந்த ஆவேசம்... இதெல்லாம் என் அம்மா மனசைப் போட்டு அலைக்கழிச் சிருக்கு. இந்த விரக்தியின் எல்லையில் நடந்த அந்தச் சம்பவம் மங்கலா நினைவுல இருக்கு.
ஒரு நாள்... விடியற்காலை மூணு மணி இருக்கும்.
தன் உயிரை மாய்ச்சுக்கறதுங்கற ஒரு தீர்மானத்தோட, என்னையும் தூக்கிக்கிட்டு அம்மா விடுவிடுனு வேகமா நடந்து ஒரு குளத்துகிட்ட போய் நின்னாங்க. என்னை முதல்ல குளத்துல தூக்கிப் போட்டுட்டு, பின்னாடியே தானும் குதிச்சுடறதுன்னு முடிவெடுத்து என்னைத் தூக்கிப் போட்டுட்டாங்க. அந்த நேரத்துலதான்.....
'நாணிக்குட்டி... என்ன காரியம் பண்றே அசட்டுத்தனமா... அந்தக் குழந்தை என்ன பாவம் செஞ்சது...'னு கேட்டுக் குளத்துக்குள்ள பாய்ந்து என்னைக் காப்பாத்திக் கரைக்குக் கொண்டுவந்து சேர்த்தவரு - தாத்தா கிருஷ்ணன் நாயர். அம்மாவோட அப்பா. அவருக்குத் திருச்சி சென்ட்ரல் ஜெயில்ல வார்டர் வேலை.
மகள் ஏதோ விபரீதமான காரியம் செய்யப் போகிறாள் என்பதைச் சந்தேகித்து எங்கள் பின்னாலேயே வந்திருக்கிறார் தாத்தா.
"இதோ பாரு... நான் இருக்கும்போது ஏன் கவலைப்படறே? உங்களைக் காப்பாத்த வேண்டியது என் பொறுப்பு.
கஷ்டம் வந்தா தற்கொலை பண்ணிக்கறதுங்கிறது தப்பான முடிவு... கோழைத் தனம்.." - இப்படி ஆறுதலும் தேறுதலும் சொல்லி அழைத்து வந்தார் .
நாங்க போன நேரமோ என்னமோ, தாத்தாவுக்குத் திருச்சியிலேர்ந்து கண்ணனூர் (சவுத் மலபார்) ஜெயிலுக்கு டிரான்ஸ்ஃ பர்!
நாங்க கண்ணனூர் போய் இறங்கினவுடனே தாத்தா செஞ்ச முதல் வேலை - என்னை ஒரு பள்ளிக்கூடத்துல கொண்டு போய்ச் சேர்த்துவிட்டதுதான்!
தாத்தாவோட கம்பல்ஷனால ஸ்கூல்ல சேர்ந்தேனே தவிர, எனக்கு படிப்பு பாகற்காயா கசந்ததுதான் நிஜம்! பள்ளிக்கூடம் போகாட்டா உடனே அம்மா, தாத்தாகிட்ட கம்ப்ளெயிண்ட் போயிடும்கிற பயத்துனால' நானும் ஸ்கூல் போறேன்னு பாவ்லா பண்ணேன். இந்தப் பள்ளிக்கூட லைஃப்லயும் திடீர்னு ஒரு திருப்பம்...!

என்னோட ஸ்கூல் இருந்த இடத்தைத் தாண்டி மூணு வீடுகள் தள்ளி ஒரு மியூஸிக் ஸ்கூல். பாட்டு வாத்தியார் நீலகண்ட பாகவதர். சங்கீதம் கத்துக்கணும்கிறது என்னோட எண்ணம், லட்சியம் எல்லாமே! இதன் காரணமா, தினமும் டபாய்க்க ஆரம்பித்தேன். எப்படித் தெரியுமா?
வீட்டிலிருந்து நல்ல பிள்ளை போல கிளம்பி முதல்ல ஸ்கூலுக்குப் போவேன். அங்க காலையில் அட்டெண்டன்ஸ் கொடுத்திடுவேன். இங்கிலீஷ். மேத்ஸ், சயின்ஸ் பாடப் புத்தகங்கள் எல்லாம் என் பைக்குள்ள இருக்கும். ஆனா, என் புத்தியெல்லாம் பாட்டு கிளாஸ்லதான் இருக்கும் ( இங்கே ஒரு சுவையான விஷயம்... என்னுடைய பழைய நினைவுகள் பற்றி அவ்வப்போது கேட்டுத் தெரிந்து வெச்சிருந்தார் கவிஞர் கண்ணதாசன். நானே எதிர்பாராத வகையில், உயர்ந்த மனிதன் படத்தில் அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததேங்கிற பாட்டுக்கு நடுவுல புத்தகம் பையிலே... புத்தியோ பாட்டிலே...' என்ற வரிகளையும் சேர்த்து என்னைப் பார்த்துக் கண்சிமிட்டினார்! ). பாடப் புத்தகங்களை அங்கே வெச்சிட்டு மியூஸிக் ஸ்கூலுக்கு ஓடி வருவேன். நீலகண்ட பாகவதர் அந்தப் பசங்களுக்குச் சொல்லிக் கொடுக்கறதை நான் கொஞ்சம் மறைவா நின்னு கேட்டுப்பேன்.
நாளுக்கு நாள் இசையில் இன்ட் ரஸ்ட் அதிகமாகிக்கிட்டே வந்தது.
அப்ப எனக்கு அஞ்சு வயசு. அப்பப்ப ஹிட் ஆகிற சினிமாப் பாட்டுக்களை ஒரு வரி விடாம அதே மெட்டோட திருப்பி ஜோரா பாடணும்கிற ஏக்கமும் ஆசையும் எனக்குள்ள எழும் . ஆனா, காசு கொடுத்து சினிமா பார்க்கிற நிலைமையில குடும்பம் இல்லை. இதுக்கு என்ன பண்ணலாம்னு மூளையைக் கசக்கிக்கிட்டு யோசிச்சதுல ஒரு ஐடியா வந்துடுச்சி....!
"டீ , காபி , சோடா கலர்... மசால் வடேய்.."
ஆமாம்! பாட்டுக்களைக் கேட்டு ரசிக்க, திரும்பப் பாட.. டூரிங் டாக்கிஸில் வேலைக்குச் சேர்ந்து இடைவேளையின் போது இவற்றை விற்றேன் - வீட்டுக்குத் தெரியாமல்! இடைவேளையில், 'இந்தப் படத்தின் பாடல்களைக் கொலம்பியா ரிக்கார்டுகளில் கேளுங்கள்'னு ஸ்லைடு போட்டுப் பாடல்களை ஒலிபரப்பு வாங்க......
ஒரு நாள் எக்கச்சக்கமாக மாட்டிக்கிட்டேன்..... பாட்டு வாத்தியாரிடம்!
(14.11.1993 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)